Friday, January 07, 2005

மைலாப்பூர் திருவிழா 2005

கடந்த சில வருடங்களாக மைலாப்பூர் திருவிழா (Mylapore Festival) என்னும் விழா 'மைலாப்பூர் டைம்ஸ்' இதழால் நடத்தப்படுகிறது. மைலாப்பூர் டைம்ஸ் என்பது மைலாப்பூரில் கிடைக்கும் இலவச வார இதழ்.

இந்த வருடம் 6, 7, 8, 9 ஜனவரி - நான்கு நாள்களும் நடக்கிறது. நேற்று தொடங்கியது.

மைலாப்பூர் கபாலீசுவரர் கோவில், (நீரில்லாத) குளம், தேர், சுற்றியுள்ள மாட வீதிகள் - இதுதான் விழா நடக்கும் சுற்றுப்புறம்.

குளத்தின் தெற்குக் கரை - தெற்கு மாடவீதி வழியாக காய்கறிகளை வாங்கிக்கொண்டு அப்படியே குளத்திற்கும் கோவிலுக்கும் இடையேயான சிறு சந்தில் நுழையுங்கள். குளத்தில் கிழக்கு கரையையொட்டி, வரிசையாக, புத்தகங்கள் பரப்பி வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பதிப்பகம், காலச்சுவடு, உயிர்மை, அடையாளம், ராஜேஸ்வரி, மதி நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், ராமகிருஷ்ணா மடம், கவுரா ஏஜென்சீஸ் போட்டிருக்கும் பல்வேறு புத்தகங்கள், இன்னமும் சிலரது புத்தகங்கள். மாலை நேரத்தில் சாவகாசமாக புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து, காசு கொடுத்து வாங்கிய பின்னர், அப்படியே கோவிலின் தெற்கு மதிலையொட்டித் திரும்புங்கள்.

மயிலையின் பழங்கால ஆவணங்களாக சில கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் கோவிலின் சுவரோரம் இருக்கும். பார்த்துக்கொண்டே நடையைக் கட்டி, தெருக்கோடியில் வலதுகைப் பக்கம் திரும்பி, உடனே இடதுகைப் பக்கம் திரும்புங்கள். சிறு சந்தில் "குயவர் மண்பாண்டம் சமைப்பர்" என்று பழந்தமிழ் இலக்கியங்களில் மட்டும் படித்ததைக் கண்ணால் காணலாம். குட்டிக் குட்டிச் சட்டிகள், கண்ணுக்கு முன்பாக குயவர் சக்கரத்தில் உருவாவதைப் பார்க்கலாம். அருகே சுவரில் வண்ணம் தீட்டும் இளம்பெண்கள். கோலம் போடுவதற்கெனவே ஓரிடம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் நேற்று கோலங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. ஒருவேளை இன்று முதல், என இருக்கலாம். கைவினைப் பொருட்கள். இன்னும் பல. அப்படியே தொடர்ந்து நடந்து சிவசாமி மேல்நிலைப் பள்ளிக்குப் போகும் வழியில் செல்லுங்கள். இன்னமும் பல கைவினைப் பொருட்கள். நகையலங்காரங்கள். சிறு மேடையில் நாகசுரம், தவிலுடன் கச்சேரி.

ஒருவர் வெகுவேகமாக இரு கைகளாலும் படுவேகமாக முறுக்கு சுற்றுவார். இன்னொருவர் ஜாங்கிரி பிழிவார். காபிக்கு ஒரு கடை, தோசைக்கு ஒரு கடை. மசால் தோசைக்கு மற்றொரு கடை. பல்வேறு சுவையுணவுகள். கடைசிவரை ஒரு கை பார்த்துவிட்டு அப்படியே மீண்டும் கோவில் தேர் இருக்கும் இடத்துக்கு வாருங்கள். கோவில் வாசலில் பெரிய மேடை. அதன் முன் நூறு பேர் அமர இருக்கைகள். பெரிய திரை. நேற்று மைலாப்பூர் பொதுமக்கள் சிலர் தம் இருப்பிடத்தை எப்படி அழகாக வைத்துக் கொள்ளலாம் என்பது பற்றி பேசி, முன்னமே பதிவாகியிருந்த படங்களைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். மேடையில் இசைக்குழு ஒன்று தயாராகிக் கொண்டிருந்தது. (கண்பார்வையற்றோர் சிலர் மேடையில் இருந்தனர் என்று ஞாபகம்).

மைலாப்பூரிலோ, அருகிலோ இருந்தால் தவறவிட்டு விடாதீர்கள்.

நேற்று போகும்போது கையில் கேமரா எடுத்துச் செல்லவில்லை. இன்று சில புகைப்படங்களுடன் வருகிறேன்.

4 comments:

  1. பல்வேறு சுவையுணவுகள். கடைசிவரை ஒரு கை பார்த்துவிட்டு
    >>
    உங்களுக்கு வயித்து வலியாமே? :)

    ReplyDelete
  2. பத்ரி, நான் புள்ளீ புள்ளியாய் வைத்த பின்னூட்டத்தை ஏன் நீக்கிவிட்டீர்கள் என்று சொல்லமுடியுமா? (முடியும் என்றால்). புள்ளி வைத்துவிட்டு கோலம் போடவில்லையே என்றா?

    ReplyDelete
  3. 'ஞாபகம் வருதே ஞாபகம் வருதே' என்று ஆரம்பித்துவிட்டார்கள் போல! கபாலி கோவில் உற்சவத்தின் போது பொம்மலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை என்று களை கட்டும்.

    எந்தூரு போனாலும் அது ... ;-)

    ReplyDelete
  4. Offtopic question: Did you get the `.in' domain names

    ReplyDelete