Saturday, January 15, 2005

புத்தகக் கண்காட்சியில் வியாழன், வெள்ளி

பெங்களூரிலிருந்து தேசிகன் வந்திருந்தார். மார்கழி முழுவதும் எளிமையான திருப்பாவை உரைகள், படங்கள், கோலங்கள் என்று வலைப்பதிவில் கலக்கியவர். ராகவன் அவரிடம் "நீங்க சுஜாதா புத்தகங்களுக்கு மட்டும்தான் ஓவியம் வரைவீர்களா?" என்று கேட்டார். "இல்லை" என்றார் தேசிகன். பிறர் பயன்படுத்திக்கொள்ளாதது அவர்களுடைய தவறு... சில மணிநேரம் சுற்றிவிட்டு கையில் பல கிலோக்கள் அடங்கிய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்தார். மொத்தமாகத் தூக்கிப் பார்த்தேன்! முடியவில்லை. எப்படியாவது புத்தகங்களை வீடு சேர்த்திருப்பார் என்று நினைக்கிறேன். ரயிலில் பெங்களூர் போகும்போது தனியாக சார்ஜ் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

ஆங்கில வலைப்பதிவர் சக்ரா கண்ணில் பட்டார்.

வியாழன் சிறப்பு விருந்தினர் இயக்குனர் வஸந்த். (கேளடி கண்மணி முதல் தக்கையின் மீது நான்கு கண்கள் குறும்படம் வரை எடுத்தவர்.) இப்பொழுது சில இலக்கியத்தரம் வாய்ந்த சிறுகதைகளை குறும்படங்களாக எடுக்க முயற்சி செய்கிறாராம். திண்ணையில் வெளியான, பிறகு நாங்கள் புத்தமாகக் கொண்டு வந்த இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலை எடுத்துக் கொடுத்தேன். "இதைப் படித்துப் பாருங்கள், படமாக எடுக்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வீர்கள்" என்றேன். தயாரிப்பாளரைக் கொண்டுவாருங்கள் என்றார்!

எழுத்தாளன் எப்படி கூட்டம் சேருமிடங்களிலெல்லாம் நடப்பதைக் கவனித்து அங்கு நடப்பவற்றை தன் கதையில் விவரங்களாக இணைக்க முயற்சி செய்வானோ, அதைப்போலவே தானும் கூட்டங்களில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து அதை எவ்வாறு காட்சிகளாக மாற்றுவது என்று கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

வீர்-ஸரா முதல் ஸ்வதேஷ் வரையிலான சில ஹிந்திப் படங்கள் பற்றிய அவரது கருத்து என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தோம். பட இயக்குனர் என்ற முறையில் அவர் சொன்னது பல புதிய விஷயங்களைக் காட்டியது.

வியாழன் அன்று உயிர்மை கடையில் ஜெயமோகன். உயிர்மை மூலம் அவரது சிறு கதைகளும், குறுநாவல்களும் முழுமையாக தொகுப்பாக வெளிவந்துள்ளன. வேலை அதிகமிருந்த காரணத்தால் ஜெயமோகன் உயிர்மையில் இருக்கும்போது போகமுடியவில்லை. மெதுவாக வாங்க வேண்டும்.

வெங்கட் சாமிநாதன் சிறிது நேரம் வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் "வணக்கம்" சொலவதைத் தவிர அதிகம் பேசமுடியாத நிலை. பொறுமையாக அவரது விமர்சன வாழ்க்கையைப் பற்றிப் பேசித் தெரிந்து கொள்ள வேண்டும். பல புதிய எழுத்தாளர்களின் எழுத்துகளையும் பொறுமையாகப் படித்து, தமிழ் எழுத்துகளைப் பற்றி ஓயாது எழுதிக்கொண்டிருக்கும் வெங்கட் சாமிநாதன், க.நா.சுவுக்குப் பிறகு தமிழில் பங்காற்றும் முக்கிய விமர்சகர். அடுத்த தலைமுறைகளில் இதுபோன்ற விமர்சகர்கள் இல்லாதிருப்பது தமிழுக்கு நல்லதல்ல. வெங்கட் சாமிநாதன் மேல் பலருக்கும் மனத்தாங்கல்கள் இருக்கலாம். ஆனால் அவரது பங்களிப்பை மறுக்க முடியாது.

-*-

பொங்கல் அன்று காலை முதலே கண்காட்சி ஆரம்பம். 11 மணிக்குத் தொடங்கினாலும் கூட்டம் வர சற்று தாமதமானது. இன்று முதலில் சந்தித்த வலைப்பதிவர் வெட்டிப்பேச்சு சந்தோஷ் குரு. இப்பொழுது பெங்களூரில் இருக்கிறாராம்.

மாலை 5.00 மணிக்கு வந்த சிறப்பு விருந்தினர் திருப்பூர் கிருஷ்ணன். அவரைத் தொடர்ந்து இலக்கியச் சிந்தனை பாரதி வந்தார். இவரும் பல மணிநேரங்கள் அருகேயே அமர்ந்திருந்தார். வேலைகளிக்கிடையே பலவற்றைப் பற்றியும் பேச முடிந்தது. திருப்பூர் கிருஷ்ணனைப் பார்க்க பலர் வந்தனர். அதில் முக்கியமான ஒருவர் சைதாப்பேட்டையில் நூலகம் ஒன்றை நடத்தும் தையல்காரர் ஒருவர். இதுவரையில் 17,000க்கும் மேற்பட்ட நூல்கள் இவரது நூலகத்தில் உள்ளது என்றார். முகவரி வாங்கி வைத்துள்ளேன். போய்ப் பார்த்துவிட்டு இவரைப் பற்றி, புகைப்படங்களுடன், விளக்கமாக எழுதுகிறேன். காமராஜர் முதற்கொண்டு இவரது நூலகத்துக்கு வந்து சென்றுள்ளனராம்.

எழுத்தாளர், பட இயக்குனர் அம்ஷன் குமார் வந்திருந்தார். அவருடன் பெருந்தேவி என்பவரும் (இப்பொழுது வாஷிங்டனில் இருக்கிறார்) வந்திருந்தார். இவர் கவிதைகள், கதைகள் எழுதுபவர், நாடகக் கலைஞர்.

பொங்கல், உயிர்மையில் சுஜாதா வந்திருந்த நாள். 5.00 மணி அளவில் சற்றே நேரம் வாங்கிக்கொண்டு நான் அந்தப்பக்கம் சென்றபொழுது சுஜாதா வரவில்லை. மீண்டும் என் வேலையைத் தொடர வந்துவிட்டேன். அவரைப் பார்க்க முடியவில்லை. வெள்ளி அன்றும் கூட்டம் அலைமோத ஆரம்பித்துவிட்டது. சனியும், ஞாயிறும் கூட்டம் தாங்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.

ஆர்.வெங்கடேஷ் கண்காட்சி முழுவதும் சுற்றி கடந்த நான்கு வருடங்களில் வெளியான நாவல்கள் அனைத்தையும் பட்டியல் இட்டிருக்கிறார். அதில் பலவற்றை நாம் கேள்விப்பட்டதே இல்லை. "குழு"க்கள் தமது எழுத்தாளர்களையே முன்தள்ள, சத்தமே இல்லாமல் பலர் சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது பெயர்கள் வெளியே தெரிவதேயில்லை என்று சொன்னார். தான் கண்டறிந்த நாவல்களைப் பற்றி விளக்கமாக தனது பதிவில் எழுதுவதாகச் சொன்னார். அதனால் அவரது பதிவில் பதிவு செய்யும் வரை நான் அதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை.

முடிந்தால் நாளையும் சந்திப்போம்.

3 comments:

  1. பத்ரி, கு.அழகிரிசாமி அவர்களின் நாவல், சிறுகதை புத்தகங்கள் ஏதாவது கண்ணில் பட்டதா? கிடைத்தால் அதையும் என் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன். தொல்லைக்கு மன்னிக்கவும்
    உஷா

    By: usha

    ReplyDelete
  2. அந்த தையல்காரர் நடத்தும் லைப்ரரியில் நானும் ஒரு உறுப்பினன். கிழக்கு பதிப்பக ஸ்டால் சைஸில்தான் லைப்ரரி இருக்கும். சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து லெ·ப்ட் கட் பண்ணி போனால் காரணீஸ்வரரின் தேர் நிற்கும். தேரை பார்த்தபடிதான் அந்த மகாத்மா காந்தி லைப்ரரி.
    பெரும்பாலும் நாவல்கள்தான் அதிகமாக இருக்கும். வாசலிலேயே மெஷின் போட்டு தைத்துக்கொண்டிருப்பார் லைப்ரரியின் ஓனர். நாம்தான் உள்ளே போய் தேடிக் கண்டுபிடித்து புத்தகங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏதாவது உதவி வேண்டுமானால் நாவல்களின் தலைப்பை ஓழுங்கா சொல்லத் தெரியவேண்டும். இல்லாவிட்டால் கடுப்படிப்பார்!

    By: J. Rajni Ramki

    ReplyDelete
  3. அந்த தையல்காரர் நடத்தும் லைப்ரரியில் நானும் ஒரு உறுப்பினன். கிழக்கு பதிப்பக ஸ்டால் சைஸில்தான் லைப்ரரி இருக்கும். சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து லெ·ப்ட் கட் பண்ணி போனால் காரணீஸ்வரரின் தேர் நிற்கும். தேரை பார்த்தபடிதான் அந்த மகாத்மா காந்தி லைப்ரரி.
    பெரும்பாலும் நாவல்கள்தான் அதிகமாக இருக்கும். வாசலிலேயே மெஷின் போட்டு தைத்துக்கொண்டிருப்பார் லைப்ரரியின் ஓனர். நாம்தான் உள்ளே போய் தேடிக் கண்டுபிடித்து புத்தகங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏதாவது உதவி வேண்டுமானால் நாவல்களின் தலைப்பை ஓழுங்கா சொல்லத் தெரியவேண்டும். இல்லாவிட்டால் கடுப்படிப்பார்!

    - ஜெ. ரஜினி ராம்கி

    By: J. Rajni Ramki

    ReplyDelete