Monday, January 10, 2005

புத்தகக் கண்காட்சி ஞாயிறு அன்று

கூட்டம் மிகுந்த, நெரிசலான நாள். கடை எண் 67-ல் காலையில் சிறப்பு விருந்தினர் சோம.வள்ளியப்பன். சிறப்புப் புத்தகம் "அள்ள அள்ளப் பணம்" - பங்குச்சந்தை பற்றிய அறிமுகம். பக்கத்தில் விற்றுக்கொண்டிருந்த பாப்கார்ன் பொட்டலங்களைப் போலவே, இந்தப் புத்தகமும் படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. உடனடியாக மேற்கொண்டு பல பிரதிகள் அச்சிட வேண்டிய நிலை.

பலரும் வள்ளியப்பனின் பிற நூல்களையும் சேர்த்தே வாங்கினர் - தொட்டதெல்லாம் பொன்னாகும், காலம் உங்கள் காலடியில். இந்த மாதிரி பெயர்களைக் கண்டு முகம் சுளிப்பவர்களும் உண்டு. ஆனால் இது எங்களைப் பொறுத்தவரை வியாபார உத்தி. கையில் புத்தகத்தை எடுக்கத்தான் இந்த ஏற்பாடு. எடுத்தவுடன் உள்ளே சரக்கிருக்கிறதா என்று பார்த்து விட்டு வாங்கினால் போதும்.

தொட்டதெல்லாம் பொன்னாகும் - சிறு வியாபாரிகள், தொடக்க நிலை விற்பனைப் பிரதிநிதிகள் ஆகியோரை முன்வைத்து எழுதப்பட்ட புத்தகம். சரியான MBA படிப்பு ஏதும் இல்லாமல் விற்பனைக்கு வருபவர்களுக்கான ஆலோசனைப் புத்தகமாக இதைக் கருதலாம்.

காலம் உங்கள் காலடியில் - Time Management பற்றிய புத்தகம்.

மாலை, புத்தகக் கண்காட்சிக்கு இரண்டு heavyweights வந்திருந்தனர். காலச்சுவடு ஸ்டாலில் சுந்தர ராமசாமி. கிழக்கு பதிப்பகம் கடைக்கு அசோகமித்திரன்.

அசோகமித்திரன் கடந்த நாற்பதாண்டுகளில் எழுதியிருந்த கட்டுரைகள் அனைத்தையும் பொருள் வாரியாகவும், அதற்குள்ளாக காலவாரியாகவும் பிரித்து, அடுக்கி இரண்டு தொகுதிகளாகக் கொண்டுவந்துள்ளோம் (ஒன்று | இரண்டு). இந்த வேலைதான் கடந்த இரண்டு மாதங்களாக எங்களை அலைக்கழித்தது.

அசோகமித்திரனை வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்ப்பது தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. வெறுமே பல சிறுகதைகளையும், சில நாவல்களையும் எழுதி, அத்துடன் தன்னைக் குறுக்கிக் கொள்ளவில்லை. அவரது அ-புனைவுகளை (non-fiction) மட்டும் வைத்துப் பார்க்கும்போது அவரது முழு வீச்சு புலப்படும். இத்தனைக்கும் இப்பொழுதைக்கு நாங்கள் தொகுத்திருப்பது அவர் தமிழில் எழுதியது மட்டும். எங்கள் கடைக்கு வந்திருந்த கவிஞர் ஞானக்கூத்தன் சொன்னது போல அவரது ஆங்கிலக் கட்டுரைகளையும் தொகுக்க வேண்டும்; தொகுத்துப் பார்த்தால் அசோகமித்திரன் என்னும் சிந்தனையாளரின் முழுப் பரிமாணமும் நமக்குப் புரியவரும்.

தமிழில் தெரிந்ததை விட அசோகமித்திரன் ஆங்கிலத்தில் இன்னமும் பலரைச் சென்றடைந்துள்ளார் என்பது தமிழ் மட்டும் படிக்கத் தெரிந்தவர்களின் துரதிர்ஷ்டம்தான். ஒருசில சிறுபத்திரிகைகளில் மட்டுமே அசோகமித்திரனின் கட்டுரைகள் வந்துகொண்டிருந்தன. அது போய்ச்சேர்ந்த ஆள்களின் எண்ணிக்கையும் சில ஆயிரங்களில் மட்டுமே இருக்கும்.

அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்புகளின் உள்ளடக்கத்தைப் பற்றித் தனியாக எழுத வேண்டும். சினிமா என்றால் தமிழ் சினிமா, இந்தி சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா. அதில் படங்கள், கலைஞர்கள். இலக்கியம் என்றால் தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம், உலக இலக்கியம். அதில் புத்தகங்கள் - சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், படைப்பாளிகள். நாடகங்கள் பற்றி அங்கும் இங்கும். அரசியல் பற்றி (இலக்கியம், நுண்கலைகள் அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு அரசியல் பற்றி). அரசியல் தலைவர்கள். பொதுவாழ்வு பற்றி. கடந்த நாற்பதாண்டு காலத்தில் அவர் கண்ணுக்குப் பட்ட, காதுக்குக் கேட்ட சுவாரசியமான நிகழ்வுகள்.

இப்படிச் சேர்த்தால் 3000 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும். அதை வெட்டி, 2000க்குள் கொண்டுவந்து இரண்டு புத்தகங்களாக்கினோம். இதில் மிகப்பெரிய வேலை புத்தகத்தின் கடைசியில் போட்ட index - பெயரகராதி. ஆங்கிலத்தில் படு எளிதாகச் செய்து முடிக்கலாம். தமிழில்? கடைசியாக தமிழ் யுனிகோட் sort orderஐ நம்பி அதன்படி index செய்தோம். ர/ற; ந/ண/ன; ல/ள/ழ தகராறு இருக்கும். ஆனாலும் அது பெரிய பிரச்னை இல்லை.

அந்த பெயரகராதியை மட்டுமே வைத்துப் பார்த்தால் என்னவெல்லாம் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ளார் என்று தெரியவரும். பிரமிக்கவைக்கும் வீச்சு அவருடையது.

மற்றும் சில இணைய நண்பர்கள் கண்ணுக்குப் பட்டனர். இரா.முருகன் பொறுமையாக அசோகமித்திரன் வரும்வரை காத்திருந்து கட்டுரைத் தொகுதிகளை கையெழுத்து வாங்கி எடுத்துக்கொண்டார். அசோகமித்திரனின் தெலுங்கு மொழிபெயர்ப்பாளர் ஜி.வி வந்திருந்தார். (சாஹித்ய அகாதெமிக்காக அசோகமித்திரனின் சில நாவல்களை தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளார்.) இருவரும் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி சரளமாக உரையாடினர். (அசோகமித்திரன் சிறுவயதில் இருந்த இடம் சிகந்தராபாத்).

கிடைத்த சிறிது நேரத்தில் காலச்சுவடு சென்று சல்மாவின் நாவல் (இரண்டாம் ஜாமங்களின் கதை), அடையாளம் சென்று "தமிழ் மொழிநடைக் கையேடு" (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி அடையாளம் பதிப்பகம் வழியாக வெளிவருகிறது) இரண்டும் வாங்கினேன். தமிழில் - வலைப்பதிவுகளில் மட்டும் எழுதினாலும் கூட - உருப்படியாக எழுத விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் "தமிழ் மொழிநடைக் கையேடு". மற்றபடி இன்று தமிழில் எழுதுபவர்கள் நடையும், இலக்கண அறிவும் படுமோசமாக இருக்கிறது.

"நான் எழுதும் இந்தத் தமிழ் எனக்குப் போதும்" என்ற நிலை மிகவும் தவறானது. மொழியை சரியாகக் கையாள்வது, சொல்ல வந்த கருத்தை எதிராளியிடம் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க உதவும். ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அப்படியே.

4 comments:

  1. "தமிழ் மொழிநடைக் கையேடு" (தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கி அடையாளம் பதிப்பகம் வழியாக வெளிவருகிறது) இரண்டும் வாங்கினேன். தமிழில் - வலைப்பதிவுகளில் மட்டும் எழுதினாலும் கூட - உருப்படியாக எழுத விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் "தமிழ் மொழிநடைக் கையேடு". மற்றபடி இன்று தமிழில் எழுதுபவர்கள் நடையும், இலக்கண அறிவும் படுமோசமாக இருக்கிறது.

    "நான் எழுதும் இந்தத் தமிழ் எனக்குப் போதும்" என்ற நிலை மிகவும் தவறானது. மொழியை சரியாகக் கையாள்வது, சொல்ல வந்த கருத்தை எதிராளியிடம் சரியாகக் கொண்டுபோய் சேர்க்க உதவும். ஆங்கிலமாக இருந்தாலும், தமிழாக இருந்தாலும் அப்படியே.
    >>>>>>>>>
    Intro1, href="http://pari.kirukkalgal.com/index.php?itemid=36>2, 3

    ReplyDelete
  2. தமிழில் - வலைப்பதிவுகளில் மட்டும் எழுதினாலும் கூட - உருப்படியாக எழுத விரும்புபவர்கள் அவசியம் வாங்க வேண்டிய புத்தகம் "தமிழ் மொழிநடைக் கையேடு". மற்றபடி இன்று தமிழில் எழுதுபவர்கள் நடையும், இலக்கண அறிவும் படுமோசமாக இருக்கிறது. :(


    பத்ரி நாலைந்து புத்தகம வாங்கி வைக்க முடியுமா?
    மாத இறுதியில் சென்னை வருகிறேன். அப்போது
    பெற்றுக் கொள்கிறேன். சரி என்றால் லிஸ்டு அனுப்புகிறேன்.


    By: usha

    ReplyDelete
  3. உஷா: உடனே பட்டியலை அனுப்புங்கள். வாங்கி வைக்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி பத்ரி , இதோ பட்டியல்

    1-பெரியாரின் வாழ்க்கை வரலாறு- சாமிசிதம்பரனார்
    2-வேதபுரத்து வியாபாரிகள்- இ.பா
    3-தாவரங்களின் உரையாடல்- சிறுகதைகள்) (பத்ரி எஸ்.ராவின் கதை அல்லது நாவல் எதுவும் படித்ததில்லை. இதைவிட நல்ல சிறுகதை தொகுதியிருந்தால் வாங்கவும்
    4- உபபாண்டவம்- ) எஸ்.ரா
    5- புத்தம்வீடு- ஹெசிபா ஜேசுதாசன்
    6-சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - இரண்டு தொகுதி என்றால் இரண்டும் வேண்டும்,
    7-பள்ளிக் கொண்ட புரம்- நீலபத்மநாபன்
    8-சுட்டாச்சு சுட்டாச்சு- சுதாங்கன்
    9- இரா. முருகனின் சிறுகதை தொகுப்பு
    10- தமிழில் மொழிநடைக் கையேடு


    By: usha

    ReplyDelete