Sunday, January 09, 2005

ஹர ஹர சங்கர - அவசர விமர்சனம்

ஜெயகாந்தன் 26 வருடங்களுக்கு முன்பு "ஜய ஜய சங்கர" என்ற நாவலை எழுதி வெளியிட்டார். கடந்த சில வருடங்களாக எழுதுவதை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருந்தார் ஜெயகாந்தன். இப்பொழுது எழுதி, கவிதா பப்ளிகேஷன் வெளியிட்டிருக்கும் நாவல் "ஹர ஹர சங்கர".

அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட நடுவில் பின் போட்டிருக்கும் மாத நாவல் மாதிரியான தோற்றம். பெரிய எழுத்து. அங்கங்கே படங்கள், சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பொன்மொழிகள் தனியாக கட்டம் கட்டி, பல பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மாலைமதி வாசிப்பது போன்ற தோற்றம் கிடைக்கும்.

முன்னுரையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: "நடந்தது, நடப்பது, நடக்கப் போவது, நடவாதது, நடக்க முடியாதது, நடக்கக் கூடாதது ஆகிய அனைத்தையும் பிரதிபலிப்பதே கற்பனை. ஏனெனில் அதுவே சத்தியம்."

முதலில் விமர்சனமாக எழுதலாம் என நினைத்தேன். அதற்கு பதில் கதையிலிருந்து 10 மேற்கோள்களைக் காட்டி முடிவை உங்களிடமே விட்டுவிடலாம் என்று எண்ணியுள்ளேன். இப்பொழுது...

1. நகரேஷு காஞ்சி.

2. ஊரின் நடுவே உள்ள அந்தத் திருமடமும், உயர்ந்து கம்பீரமாய்க் கோபுரம்போல் அமைந்து, காவிக்கொடி பறக்கப் பெரிதும் உருமாறித்தான் காட்சி தருகிறது.

...

மடம் என்னதான் அகத்தே ஆன்மிக ஈடுபாடு கொண்டிருந்தாலும் புறத்தே இந்த சமூகத்துடன் தொடர்புடைய இந்த சமூகத்தின் ஓர் அங்கம்தானே? சமூகத்தில் செல்வம் படைத்தோரும் அரசும் போட்டியிடும் எல்லாத் துறைகளிலும் மடமும் அவர்களுக்கு இணையாக ஈடுபட்டு சமூகப் பணி புரிய நேர்ந்தது.

3. மஹா ஸ்வாமிகள் சித்தியடைந்தபின்னர், [...] இந்த மடத்தைச் சேர்ந்த சிலருக்கே தாங்கள் திருமடத்தின் மரபுகளை மீறிச் செயல்படுகிறோமோ என்கிற மனக்கிலேசமும் ஒரு பக்கம் கனத்துக் குமுறிக்கொண்டிருந்தது.

...

அவர்களின் இறுகிய முகங்களைக் காணுந்தோறும் அவர்களது மவுனமான பார்வை அந்த மனக்கிலேசத்தை புதிய ஸ்வாமிகளின் உள்ளேயும் பரவச் செய்தது. அத்தகைய ஆன்மிக மன உளைச்சலில் சமீப காலமாய் அடிக்கடி சிக்கித் தவிக்கிறார் புதிய ஸ்வாமிகள்.

...

புதிய பீடாதிபதி ஸ்வாமிகள் என்ன செய்தபோதிலும் ஆத்ம துரோகத்துக்கு இணையான குருத் துரோகம் புரிந்தவர் அல்லர்!

4. அறைவாசலில் கரிய நிழல் போல் நான்கைந்து உருவங்கள் தெரிந்தன. தம் எதிரே நெருங்கி வந்த ஆஜானுபாகுவான ஆள், மீண்டும் "சாமி, புறப்படுங்க!" என்று தாழ்ந்த ஸ்தாயியில் கனத்த குரலில் பேசினான்.

...

"நீ... நீ வீரப்பன் இல்லையோ?" [...]

"இல்லை. சூரப்பன்!" என்று பணிவான குரலில் கூறி மீண்டும் ஒருமுறை வணங்கினான் அவன்.

5. ஸ்வாமிகளின் மீது இந்தச் சமூகம் எதிர்காலத்தில் சுமத்தப்போகிற குற்றச்சாட்டுகளைப் பட்டியலிடுகிற மாதிரி கூறினான் அந்த மாயாவி [சூரப்பன்]:

"மதவெறியையும் வகுப்புவாதத்தையும் வளர்க்கிற சில இயக்கங்களோடு நீங்கள் உறவாடினீர்களாம்! நாஸ்திகர்களோடும், மக்களை வஞ்சிக்கிற ஊரறிந்த மாய்மாலக்காரர்களோடும் மத்யஸ்தம் செய்து கொண்டீர்களாம்!"

...

"அது மட்டும் இல்லே சாமி! எனக்கு சொல்லவே நாக்கு கூசுது. நினைச்சா நெஞ்சு பதைக்குது!" என்று தயங்கினான் அந்த மாயாவி.

...

"[...] உங்க மேல, கொலைக்குற்றம் சுமத்தப்போறாங்க!"

...

"உங்க கையால நீங்க செஞ்சீங்கன்னு இல்லசாமி, நீங்க தான் தூண்டி விட்டீங்களாம்?"

6. சந்திரமவுலீஸ்வரர் சன்னிதியில், திரைக்குப் பின்னால் ஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தபொழுது, அவன் [சூரப்பன்] மண்டபத்தில் கூடியிருந்த பக்தர் கூட்டத்தின் இடையே ஓர் ஒற்றனைப் போல் உலவிக் கொண்டிருந்தான்! இவர்களில் எத்தனை பேர் உண்மையான பக்தர்கள்! எத்தனை பேர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்கள்!

ஊரெல்லாம் கடன்வாங்கி ஏமாற்றி விட்டு ஊரார் எவர் கண்ணிலும் படாமல் ஒளிந்துகொள்வதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்து பதுங்கிக் கொண்டு இங்கே பக்திப் பரவசத்துடன் வந்து நிற்கிறானே ஒருவன்...

கண்களில் தீட்டிய மையோடு ஜாடைகாட்டி அபிநயம் புரிபவள்... யாரோ ஒருவனோடு சரசமாடிக் கொண்டிருக்கிறாளே ஊரறிந்த ஓர் உத்தமி...

அவள் பக்கத்தில் பக்திப் பரவசமும் பளபளக்கும் பட்டு அங்கவஸ்திரமுமாய் நிற்கிறானே ஒரு மாமா...

...

'இவர்கள் யாரேயாயினும், இவர்கள் அனைவரும் என் அன்பிற்குரிய குழந்தைகள். இவர்களை வேவு பார்ப்பதையும், இவர்களில் வித்தியாசம் காண்பதையும் என் மனம் ஏற்காது' என்று ஸ்வாமிகளின் குரல் கேட்டது; பக்தர்களில் ஜெயகோஷத்திற்கிடையே அவனுக்கு மட்டும் அவர் குரல் கேட்டது.

7. "சாமி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பலமான ஆதாரங்கள் வேறு இருக்கிறதாம்! அதெல்லாம் பிறகு அடுக்கடுக்காய் வெளிவருமாம்!" என்று தான் சேகரித்த செய்திகளைக் கடமைபோல் சொன்னான் மாயாவி.

"சேகரித்த ஆதாரங்கள்தானே? எல்லாவற்றுக்கும் மேலாக மூலாதாரம் என்று ஒன்றும் உண்டு" என்று உறுதியாகச் சொன்னார் ஸ்வாமிகள்.

எந்தத் துறவி, எந்த அவதாரம், எந்தக் கடவுள் சோதனைகளை எதிர்கொள்ளாமல் இருந்தது? தருமத்தின் வாழ்வை சூது கவ்வுவதும், தருமம் மறுபடி வெல்லும் என்பதும் மஹாபாரதக் கதை மட்டும்தானோ? சத்யமேவ ஜெயதே!

"பாவம் பத்திரிகைகளும், ஊடகங்களும் என்ன செய்யும்? இறுதியில் சத்தியம் வெளிப்படும் போதுதானே அவர்கள் சத்தியத்தை வெளியிட முடியும்? அதுவரை இந்த அடுக்கடுக்கான அபவாதச் செய்திகளைத்தானே அவர்கள் பரப்பிக் கொண்டிருப்பார்கள்! இந்தக் காலத்தில் பத்திரிகைகள் செய்திகளை மட்டுமா பரப்புகின்றன? ....

பாவம் பக்தர்கள்! ஈஸ்வரன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் மனோதிடமும் தந்து காப்பாற்றுவாராக! ஈஸ்வரோ ரக்ஷது!"

8. ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய் வந்து நின்று "அவாள்லாம் வந்திருக்கா!" என்று பதற்றத்துடன் தெரிவித்தார்.

"எவாள்லாம்?" என்று எழுந்து அமர்ந்தார் ஸ்வாமிகள்.

"போலீஸ்காரா!"

9. "நமது சன்னிதானத்தின் கதவுகளை, சட்டம் வந்து தட்டி அழைக்கிறது. உரிய இடத்தில் சட்டத்தைச் சந்திக்க நாமும் புறப்படுகிறோம். இதன்பொருட்டு பக்தர்கள் எவரும் கவலையுறுதல் கூடாது. இந்தத் திருமடத்தின் ஸ்ரீ காரியங்கள் எதுவும் இதனால் தடைபடக் கூடாது.

...

"என்னை ஜாமீனில் எடுக்கவோ, என் பொருட்டு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் செய்யவோ வேண்டாம். சோதனைக் காலத்தில்தான் நமது சுயம் தெரியும்! அதைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மனம் தளராதீர்கள்!"

...

சுவரில் சாத்திவைத்திருந்த தண்டத்தைப் பார்த்தார்.

"இதோ இருக்கே இந்தத் தண்டம். இனிமேல் இந்தத் தண்டம்தான் நான். என்னை, இந்த உடம்பைத் தான் கைது செய்ய முடியும். என் ஜீவன் இந்தத் தண்டம்தான். எல்லா அதிகாரமும் இன்மேல் இதற்குத்தான்... நான் திரும்பிவந்து இதை எடுத்துக்கொள்ளும் வரை எனக்கு செய்கிற எல்லா மரியாதைகளும் பூஜைகளும் இதுக்குத் தான்..."

10. கூட்டத்திலிருந்து ஓர் ஒற்றைக் குரல் "துறவிக்கு வேந்தன் துரும்பு" என்று முழங்கியது அனைவர் செவிகளிலும் உறைத்தது.

"இப்போது, நான் துறவிதானா என்பதற்கான சோதனை நடக்கிறது. என்னை நன்றாக சோதித்து அறிந்து கொள்ளட்டும்."

...

"நான் மெய்யாலும் துறவி என்றால், வேந்தன் எனக்குத் துரும்புதான்!"

...

ஸ்வாமிகள் வேனில் ஏறினார். போலீஸ் வேன் விரைந்தது. திருமடத்தின் முன்னால் திரண்டிருந்த பக்தர்கள் நம்பிக்கையுடன் முழக்கமிட்டார்கள்:

"ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !"

-*-* முற்றும் -*-*-

12 comments:

  1. ஜெயகாந்தன் மீது எனக்கு எல்லாவற்றையும் மீறி மிகுந்த மதிப்பு உண்டு. உங்கள் மேற்கோள்களை மட்டும் படித்ததில் ஒரு வார்த்தைதான் விமர்சனமாய் தரமுடியும்.

    ஹாரிபிள்! ஆனால் ஏனோ இதுதான் எதிர்பார்த்தது.

    ReplyDelete
  2. என்னயா இது?
    முழித்தப்படி,
    உஷா

    By: usha

    ReplyDelete
  3. ஒரு வேளை, இப்போது நடந்த கூத்தில் ஜெயேந்திரர் எப்படி நடந்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஜெயகாந்தன் கூறுகிறாரா?

    பத்ரி, புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு ஏதாவது புக் லிஸ்ட் இருக்கா உங்ககிட்டே? உங்க பதிப்பகமும் மற்ற பதிப்பகங்களும் சேர்ந்து... திலீப்குமார் அவ்வப்போது அனுப்பும் லிஸ்ட் மாதிரி?


    By: bb

    ReplyDelete
  4. //ஒரு வேளை, இப்போது நடந்த கூத்தில் ஜெயேந்திரர் எப்படி நடந்துக்கொண்டிருக்க வேண்டும் என்று ஜெயகாந்தன் கூறுகிறாரா?//

    என் புரிதலும் அதுதான். புரிஞ்சவங்க விளக்கமா சொன்னாப் பரவாயில்லை. பொடி வெச்செல்லாம் சொன்னா நானும் உஷா மாதிரி முழிக்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  5. bb:
    http://pari.kirukkalgal.com/index.php?itemid=70
    http://pari.kirukkalgal.com/index.php?itemid=69




    By: prakash

    ReplyDelete
  6. காசி, சிலுவையில் அறையப்பட்ட
    ஏசுவைப் போல ஜெயந்திரர். சரியா? அடடா,
    அதுக்காக ஜெயந்திரை கொலை குற்றம்சாட்டி
    மரணதண்டனை விதிப்பார்கள் என்றெல்லாம் தப்பர்த்தம்
    செஞ்சிக்காதீங்க
    பயத்துடன்,
    உஷா

    By: usha

    ReplyDelete
  7. ப்ரகாஷ், இதெல்லாம் ஜெனெரல் பட்டியல். இந்த கண்காட்சியில் என்னென்ன புத்தகங்கள் கிடைக்கும், என்னென்ன புதுசா வந்திருக்குன்னு ஒரு லிஸ்ட் இருந்தா தேவலை. என் அப்பாவை வாங்க சொல்லுவேன்.

    By: bb

    ReplyDelete
  8. bb: I am going to book fair tomorrow. i will try to collect the catalogues from various stalls and compile a list of significant titles ( along with prices and stall nos ) and post it in my blog. i hope it will be useful to many others too

    By: prakash

    ReplyDelete
  9. //ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய்//
    'ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு பார்த்த மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய் நின்றார்' அப்படின்னு ஜெயகாந்தன் எழுத நினைத்தாரோ என்னவோ?


    By: மனிதன்

    ReplyDelete
  10. //ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய்//
    'ஸ்வாமிகள் படுத்திருந்த அறையின் திரைச்சீலையை விலக்கிக்கொண்டு பார்த்த மடத்தின் காரியஸ்தர் பேயறைந்த கோலமாய் நின்றார்' அப்படின்னு ஜெயகாந்தன் எழுத நினைத்தாரோ என்னவோ?


    By: மனிதன்By: மனிதன்

    ReplyDelete
  11. ஜெயகாந்தனும் இந்த பரபரப்பை உபயோகித்துக் கொள்ள நினைக்கிறாரா என்ன? இவ்வளவு நாள் சும்மா இருந்தவர் இப்போது திடீரென்று இதைப் பற்றி நாவல் எழுதுவானேன்?

    அக்கினிக்குஞ்சு

    By: akkinikunchu

    ReplyDelete