Monday, January 03, 2005

சுட்டாச்சு சுட்டாச்சு

[நான் ஈடுபட்டுள்ள கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த சிலவற்றைப் பற்றி இங்கே எழுத இருக்கிறேன். அதில் முதலாவதாக இந்தப் புத்தகம்.]

1967இல் எம்.ஜி.ஆர், திமுக வேட்பாளராக பரங்கிமலை தொகுதியில் தேர்தலுக்கு நிற்கிறார்.

இந்தத் தேர்தலில், முதல்முறையாக காங்கிரஸை எதிர்த்து பலமான ஓர் அணி - அண்ணதுரையின் திமுக - போட்டியிடுகிறது. ராஜாஜி திமுகவை ஆதரிக்கிறார். காமராஜ் காங்கிரஸ் கட்சி சார்பில் விருது நகரில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து சீனிவாசன் என்னும் கல்லூரி இளைஞன். பெரியார், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு. எம்.ஆர்.ராதா, பெரியாரின் திராவிடர் கழக ஆதரவாளர்.

'நாத்திகன்' எனும் பத்திரிகையில், எம்.ஆர்.ராதா பெயரில் ஒரு கட்டுரை வருகிறது. அதில் எம்.ஜி.ஆர் பணம் கொடுத்து சில கூலிகளை வேலைக்கு அமர்த்தி காமராஜரைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று எம்.ஆர்.ராதா குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆரின் பெயர் நேரடியாக அந்தக் கட்டுரையில் வரவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்படுபவர் எம்.ஜி.ஆர் என்று அந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருக்கும் தெரியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. பலர் எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகவே வந்து "என்ன, எம்.ஆர்.ராதா இப்படி எழுதியிருக்காரே" என்று விசாரிக்கவும் செய்கின்றனர்.

எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர் இருவருக்குமிடையே ஏற்கனவே கட்சி விஷயத்தில் தகராறு. இருவரும் இணைந்து நடித்த, சின்னப்பா தேவர் தயாரித்து, இயக்கிய 'தொழிலாளி' என்னும் படம் 1964-ல் படமாக்கப்படுகிறது. அதில் ஒரு காட்சியில் "நமக்குனு வெளிச்சம் கொடுக்கப்போற நம்பிக்கை நட்சத்திரம் இதுதான்" என்ற வசனத்தை எம்.ஜி.ஆர் பேசும்போது "நமக்குன்னு வெளிச்சம் கொடுக்கப்போற உதயசூரியன் இதுதான்" என்று மாற்றிப் பேசுகிறார். உடனே எம்.ஆர்.ராதா "உன் கட்சி சின்னத்தையெல்லாம் இங்க கொண்டு வராதே" என்கிறார். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர் எம்.ஜி.ஆர் பழையபடி 'நம்பிக்கை நட்சத்திரம்' வசனத்துக்குப் போகிறார்.

மீண்டும் 1967க்கு வருவோம். தேர்தல் பிரசாரம் முடிந்து வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரை, 'பெற்றால்தான் பிள்ளையா' படத் தயாரிப்பாளர் வாசுவும், எம்.ஆர்.ராதாவும் சந்திக்கின்றனர். சந்திப்பின்போது, சிறிது சிறிது இடைவெளி விட்டு, துப்பாக்கியிலிருந்து மூன்று குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டு. எம்.ஆர்.ராதாவுக்கு நெற்றியிலும், தோள்பட்டையிலும்.

இருவரும் உயிர் பிழைக்கின்றனர். மருத்துவமனையில் இருந்தபடியே எம்.ஜி.ஆர் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கிறார். திமுகவுக்குப் பெரும் வெற்றி.

காவல்துறை எம்.ஆர்.ராதா மீது கொலை முயற்சி, தற்கொலை முயற்சி, லைசென்ஸ் தீர்ந்துபோன துப்பாக்கியை வைத்திருந்ததால் ஆயுதச் சட்டத்தை மீறியது ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிவு செய்கிறது. எம்.ஆர்.ராதா பழைய விரோதம் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் எம்.ஜி.ஆரைச் சுட்டார், பிறகு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்தார் என்பது காவல்துறை வாதம்.

ராதாவின் வழக்கறிஞர் வானமாமலை தன் வாதத்தில் "நாத்திகன் இதழில் வெளிவந்த கட்டுரையினால் எம்.ஜி.ஆருக்கு எம்.ஆர்.ராதா மீது எக்கச்சக்க கோபம். எனவே எம்.ஜி.ஆர் தான் முதலில் எம்.ஆர்.ராதாவைச் சுட்டார். தன்னைத் தற்காத்துக்கொள்ளத்தான் எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆரின் கையிலிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி அவரைச் சுட்டார்" என்கிறார்.

சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றம் இரண்டிலும் எம்.ஆர்.ராதா மீதான குற்றம் நிரூபிக்கப்படுகிறது. எம்.ஆர்.ராதா தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் கொண்டுவரப்படும் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. எம்.ஆர்.ராதாவுக்கு ஏழு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.

1967-ல் தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை சுதாங்கன் தினமணி கதிரில் 1992-ல் வாராவாரம் தொடராக எழுதி வந்தார். இப்பொழுது கிழக்கு பதிப்பகம் மூலம் புத்தகமாக வருகிறது.

சரளமான நடை. ஏகப்பட்ட துண்டு விஷயங்கள். எம்.ஆர்.ராதா எனும் முரட்டுப் பிடிவாதக்காரரைப் பற்றிய விவரங்கள். சீர்திருத்தக் கருத்துகளை அவர் நாடகத்தில் கையாண்ட விதம். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களை முறியடிக்க காங்கிரஸ்காரர்கள் செய்யும் பல்வேறு விதமான சதிகள், எம்.ஜி.ஆர்-எம்.ஆர்.ராதா பகை, நீதிமன்றத்தில் நடந்த விவாதங்கள், விசாரணை, குறுக்கு விசாரணை என்று மிகவும் சுவையான பல விஷயங்களைத் திறம்படச் சொல்கிறார் சுதாங்கன்.

சுட்டாச்சு சுட்டாச்சு, சுதாங்கன், கிழக்கு பதிப்பகம், டிசம்பர் 2004, பக்கங்கள் 312, விலை ரூ. 120

இணையத்தில் வாங்க: காமதேனு.com

சென்னைப் புத்தகக் கண்காட்சி (7-16 ஜனவரி 2005) ஸ்டால் எண் 67-ல் கிழக்கு பதிப்பகம் புத்தகங்களை வாங்கலாம்.

6 comments:

  1. வசந்தனின் பக்கம்

    By: vasanthan

    ReplyDelete
  2. என்னுடய ப்லொகில் நெட்ரு தன் எம்..அர்.ராதாவை பட்ரி எதொ எழுதினென்.

    பொச்டொன் பாலா அகர்க்கு cஒம்மென்ட்ச் வகையில் என்த லின்க்ச் என்னுக்கு அன்னுபினார். நல்ல "cஒனிcஇன்டென்cஎ'.
    ஈன்த புஒக்கைய் டெfஇனிடக படிக்கபொரென்.
    ணன்ட்ரி.

    By: tilotamma

    ReplyDelete
  3. ஆஹா, இந்த புத்தகம் கிழக்கு பதிப்பகத்தின் மூலம் தான் வெளிப்பட்டதா. உண்மையில் இந்த புத்தகத்தை மிகவும் விரும்பி படித்தேன். இந்தியாவிற்கு வரும் போது உங்களையும் உங்கள் பதிப்பகத்தையும் கண்டிப்பாக காண வேண்டும்.

    சுட்டான் சுட்டேன் என்று ஒரு புத்தகம் உள்ளாதாகவும் கேள்விப்பட்டேன். உண்மையா

    ReplyDelete