Monday, January 24, 2005

முதலைகளுடன் ஒரு நாள்

சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இந்தியாவில் முதலைகள் அழிந்துபோய்க்கொண்டிருந்த நிலையில் 1976-ல் உருவாக்கப்பட்ட இந்தப் பண்ணையில் இந்தியாவின் மூன்று முதலை இனங்களான நன்னீர் முதலை (கரியால், நீண்ட ஊசி போன்ற மூக்கு உடையவை), சதுப்பு நில முதலை (மகர்), உப்பு நீர் முதலை ஆகியவை பாதுகாக்கப்படுகின்றன. இனப்பெருக்கத்துக்குப் பின்னர் பல முதலைகள் காடுகளில் விடப்பட்டுள்ளன. இந்தப் பண்ணையைப் பராமரிப்பது Madras Crocodile Bank Trust ஆகும்.

வெளிநாட்டு முதலைகள் - (தென்/வட) அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவை - சிலவும் உள்ளன. மொத்தமாக உலகில் உள்ள 23 வகை (species) முதலைகளில் 14 வகை முதலைகள் சென்னை முதலைப் பண்ணையில் உள்ளன. முதலைகளுடன், பல ஆமை வகைகள், பாம்புகள், பல்லி வகைகள் (இகுவானா) ஆகியவையும் இங்குள்ளன. பல்வேறு பறவையினங்கள் தாங்களாகவே இங்கு வந்து வசிக்கின்றன.

கரியால்
கரியால் - நன்னீர் முதலைகள்


அனிமல் பிளாநெட், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரபிக் போன்ற தொலைக்காட்சி சானல்களில் மட்டும் இல்லாமல், அவ்வப்போது எங்கள் குழந்தையுடன் நேரடியாகவே முதலைப் பண்ணை சென்று அங்குள்ள முதலைகளைப் பார்த்துவிட்டு வருவது வழக்கம். நுழைவுக் கட்டணம் பெரியவர்களுக்கு ரூ. 20, சிறுவர்களுக்கு ரூ. 10.

மகர்
மகர் - சதுப்புநில முதலை


சென்னையில், கிண்டியில் உள்ள மிருகக் காட்சி சாலை, வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்கவே படு மோசமாகவும், சகிக்க முடியாததாகவும் இருப்பது போல இந்த முதலைப் பண்ணை இருக்காது. நன்கு பராமரிக்கப்படுகிறது.

முதலைகளுக்கு வாரத்துக்கு ஒருமுறை முழுதாக சாப்பாடு போடுகிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டிலிருந்து ஐந்து கிலோ மாமிசம் சாப்பிடுகிறது. இங்கு கிட்டத்தட்ட 1,000க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.

உப்பு நீர் முதலை
உப்பு நீர் முதலை


ஒரு கிலோ மாமிசம் நாற்பது ரூபாய் என்ற கணக்கில் முதலைகளுக்கு உணவு வாங்கிப்போடுகிறோம். இது நடுவே கிடைக்கும் டிஃபன். முன்னமே சொன்னது போல வாரம் ஒருமுறை முழுச்சாப்பாடு உண்டு. ஒரு கிலோ மாமிசத்துடன் ஊழியர் ஒருவர் அலுமினிய டப்பாவைத் தட்டுகிறார். பாவ்லோவ் உள்ளுணர்ச்சியில் பல சதுப்புநில முதலைகள் ஓடிவந்து வாயைப் பிளக்கின்றன. தூக்கி எறியும் துண்டுகள், சில முதலைகளின் வாயில் நேராகப் போய் விழுகின்றன. முதலைகள் அப்படியே அவற்றை விழுங்குகின்றன. கடிக்கவே கடிக்காதா?

முதலைகளுக்குக் கண்பார்வை பக்கவாட்டில் சற்று மேல்நோக்கி உள்ளதால், கீழே தரையில் விழுந்துள்ள உணவைக் கண்களால் சரியாகப் பார்க்க முடிவதில்லை. ஆனால் முகர்ந்து பார்த்து உணவை நோக்கி முன்னேறுகின்றன. ஒரு குழியில் உள்ள கிட்டத்தட்ட எழுபது முதலைகளில் பத்து முதலைகளுக்குத்தான் உணவுத் துண்டுகள் கிடைக்கின்றன. அங்கிருந்து நகர்கிறோம்.

Jaws என்று பெயரிடப்பட்ட மிக நீளமான உப்பு நீர் முதலை - தன்னந்தனியனாக உள்ளது. கிட்டத்தட்ட ஆறு மீட்டருக்கு மேல் நீளம். எப்பொழுதும் தண்ணீருக்கு அடியிலேயே இருப்பது. என் மகள், தான் கூப்பிடுவதால்தான் அது எங்களை நோக்கி வருகிறது என்று நினைக்கிறாள். ஆனால் தரைக்கு வெகு அருகில் வந்து முகத்தை சற்றே மேல்நோக்கிக் காண்பித்து பின் மீண்டும் திரும்பிச் சென்றுவிடுகிறது. பிரம்மாண்டமான முதலை அது. உப்பு நீர் முதலைகள், சதுப்பு நிற முதலைகளைப் போன்றுதான் காணப்படுகின்றன. உடலமைப்பில் எனக்கு பெரிய வித்தியாசம் ஏதும் தெரியவில்லை. சற்றே உடல் வண்ணத்தில் கருமை அதிகமாக உள்ளது. சதுப்பு நில முதலை மண்ணில்தான் பெரும்பாலும் உள்ளது. எப்பொழுதாவதுதான் தண்ணீருக்குள் செல்கிறது. கரியாலும், உப்புநீர் முதலையும் பெரும்பாலும் தண்ணீருக்கடியிலும், எப்பொழுதுதாவதுதான் தண்ணீருக்கு வெளியிலும் உள்ளன.

குட்டி முதலைஊழியர் ஒருவர் குஞ்சு பொறித்திருக்கும் ஆமை ஒன்றை என் பெண் கையில் கொடுக்கிறார். குறுகுறுவென ஓடுகிறது ஆமை. பொறிக்காத முதலையின் முட்டை ஒன்றைக் கையில் எடுத்துப் பார்க்கிறாள் மகள். அதன்பின் இரண்டடி நீளம் உள்ள சிறிய முதலை ஒன்றைக் கையில் தூக்கிவைத்து தொட்டுப் பார்க்கச் சொல்கிறார் அந்த ஊழியர். அதைக் கையிலும் வாங்கித் தூக்கிப் பிடிக்கிறாள் மகள். கிட்டத்தட்ட மூன்று கிலோக்கள் இருக்கும் அந்த முதலைக் குஞ்சு.

முதலை முட்டைமறைவான இடத்தில், முதலைப் பண்ணைக்கு அருகில் உள்ள கிராமக் குழந்தைகள் சிலர் பொம்மலாட்டம் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டுவார்களாம். நாங்கள் வருவதைப் பார்த்ததும் கம்பிக் கதவுக்கு அப்பால் உள்ள குழந்தைகள் வெட்கப் படுகிறார்கள். அந்த இடத்தை விட்டு நகர்கிறோம்.

-*-

முதலைப் பண்ணையில் Herpetology மையம் ஒன்று உள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன் சென்றிருந்தபோது இந்த மையத்தில் பாம்புகளிடமிருந்து விஷம் எடுப்பதையும் பார்த்தோம். இந்தியாவில் நான்கு பாம்பு இனங்களில்தான் விஷம் இருக்கிறதாம். அவை நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், சுருள்விரியன் என்றார் பராமரிப்பு ஊழியர். இந்த நான்கில், கட்டுவிரியனின் விஷம்தான் மிக அதிகமானதாம். நாகப்பாம்பின் விஷத்தைவிடப் பத்துமடங்கு அதிகமானது, கடித்தவுடன் மிகவேகமாக மரணம் ஏற்படுத்துவது என்றார்.

நாகப்பாம்பு, கோபம் வந்தால் தலையை மேலே உயர்த்தி, பட்டையாக அகட்டி, பட்டென்று கீழே அடித்து, ஹிஸ்ஸ்ஸ் என்று சத்தம் போடுகிறது. கட்டுவிரியன் சத்தம் ஏதும் போடுவதில்லை. ஏதாவது அசைந்தால், அல்லது யாராவது அருகே வந்தால், கண்ணாடிவிரியன் உடலைச் சுருட்டிக்கொண்டு தலையை அந்தச் சுருட்டலின் நடுவே வைத்து, உடல் முழுவதையும் அதிரவைத்து ஓயாது உஷ்-உஷ் என்று சத்தம் இடுகிறது. (கோபம்/பயம் வரும்போது வட அமெரிக்க ராட்டில் ஸ்னேக் தன் வாலில் உள்ள கிலுகிலுப்பையை ஆட்டிச் சத்தம் போடுவதைப் போல, ஒவ்வொரு பாம்புக்கும் ஒருவித பிரத்யேக சத்தம் உண்டு.) சுருள்விரியன் மிகச்சிறியதாக உள்ளது. இதுவும் சத்தம் ஏதும் போடுவதில்லை.

கட்டுவிரியனை வளைந்த சுளுக்கியால் இழுத்து, கழுத்தைக் கையால் லாகவமாகப் பிடித்து, வாயைப் பிளந்து பற்கள் ஒரு மெம்ப்ரேனில் பதியுமாறு அழுத்தி வாய்க்குள் இருக்கும் பையிலிருந்து விஷத்தைக் கக்க வைக்கிறார் பாம்புப் பண்ணை ஊழியர். பின் அந்தப் பாம்பின் தோலில், வயிற்றுப் பகுதியில் சிறு கத்தியால் கீறி, எத்தனையாவது முறையாக விஷம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறித்து வைக்கிறார். அந்தப் பாம்பை எடுத்து ஒரு பானையில் இட்டு, மேலே மெல்லிய துணியால் மூடி, இறுக்கமான ரப்பர் பாண்ட் வைத்துக் கட்டுகிறார். "அப்பப்ப [அரசு] எந்த விஷம் கேக்கறாங்களோ அதை எறக்குவோம்" என்கிறார். இங்குள்ள பாம்புகள் அவ்வப்போது காடுகளுக்குள் விடப்படுகின்றன. புதிதாகப் பிடித்து வரப்பட்ட பாம்புகள் விஷமிறக்கப் பயன்படுகின்றன.

இங்கு பாம்புகள் இனப்பெருக்கம் செய்யப்படுவதில்லை. முதலைகளுக்கும், ஆமைகளுக்கும் மட்டும்தான் இவ்விடத்தில் இனப்பெருக்கம். பாம்புகள் எதையும் நான் படம் பிடிக்கவில்லை.

கடலுக்கு அருகில் இருந்தாலும் சென்ற மாத சுனாமி பிரச்னையில் முதலைப்பண்ணைக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இடத்தைத் தேர்வு செய்யும்போதே உயரமான இடமாகப் பார்த்துத் தேர்வு செய்தார்களாம்.

-*-

அடுத்தமுறை சென்னை வந்தால் முதலைப் பண்ணையைப் பார்க்கத் தவறாதீர்கள். வெளியே வரும்போது பத்து ரூபாய்க்கு அரைக்கிலோ வெள்ளரிப் பிஞ்சுகளும் தின்னக் கிடைக்கும்.

13 comments:

 1. http://chithran.blogspot.com/2004/12/blog-post.html
  உங்கள் பதிவு மூலம் பாம்புகள் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  By: Chithran

  ReplyDelete
 2. சித்ரன்: உங்கள் பதிவை இப்பொழுதுதான் படித்தேன்.

  பாம்புகள் யாரையும் துரத்தித் தாக்குவதில்லை. அதெல்லாம் அனகோண்டா புருடாக்கள். யாராவது அருகில் வந்தாலும் அவை சீறுவது, தங்களைக் காத்துக்கொள்ளத்தான். நமது வீடுகளில் புழங்கும் பாம்புகள் பற்றிய கதைகள் அனைத்துமே நம்பத்தகுந்தவை அல்ல. பறக்கும் பாம்புகள், கண்கொத்திப் பாம்புகள், ஆள் பிணத்தை எரிக்கும் வரை மரத்தின் மேல் நிற்கும் பாம்புகள், மனித ரத்தம் பாம்புக்கு விஷம், நல்ல பாம்பு பழிவாங்கும், பாம்புக்குப் பால் ஊற்றினால் காப்பாத்தும் போன்ற மூடநம்பிக்கைகள் நம்மிடம் எக்கச்சக்கம்.

  பாம்பு விஷம் என்பது ஒருவகை புரோட்டீன்தான். ஆனால் அது மனித உடல் ஏற்றுக்கொள்ளாத புரோட்டீன். இந்த விஷம் மனித உடலின் நரம்பு மண்டலத்தையோ, இரத்தத்தையோ பாதிப்பதால் உடல் செயலிழந்து போகிறது.

  பாம்புகளிடமிருந்து எடுக்கும் விஷத்தை வைத்தே anti-venom உருவாக்குகிறார்கள். மிகவும் நீர்த்துப்போன விஷத்தை பிற மிருகங்களின் (குதிரை, ஆடு) உடலில் செலுத்தும்போது, அந்த மிருகங்களின் உடலில் இந்த விஷத்துக்கு எதிரான antibodies உருவாகிறது. அவற்றைச் சேகரிப்பதன் மூலமே anti-venom கிடைக்கிறது.

  நம்மைத் தாக்கும் வைரஸ்கள், பேக்டீரியாக்கள் ஆகியவையும் புரோட்டீன் ஸ்டிராண்ட்கள் தான். விஷம் போலவேதான் அவையும் செயல்படுகின்றன. மனித உடலுக்கு ஒவ்வாத இந்த புரோட்டீன்கள் மனித உடலுக்குள் நுழைந்ததும் உடலின் பல்வேறு பாகங்கள் செய்யும் வேலைகளை மாற்றியமைத்து தமது இனப்பெருக்கத்தைத் தொடங்குகின்றன. ஆனால் விஷ புரோட்டீன் அப்படிப்பட்டதல்ல. தனி உயிரி அல்லாததால் அது உள்ளே செலுத்தப்பட்டதும் பெருகுவதில்லை. ஆனால் இரண்டும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகத்தான் செயல்படுகின்றன.

  உள்ளே வரும் விஷமோ, வைரஸோ - மிக அதிக அளவில் இருந்தால், மனித உடலால் தேவையான அளவு ஆண்டிபாடிக்களை உற்பத்தி செய்து, இவற்றை எதிர்க்க முடியாது. இதனால் வைரஸ்/பேக்டீரியாக்்களை எதிர்க்க antibiotics, விஷத்தை எதிர்க்க anti-venom serum ஆகியவை தேவையாக உள்ளன.

  உங்கள் அம்மா உடல் முழுவதும் குணமாகிவிட்டிருப்பார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 3. நல்ல கட்டுரை. பல ஆண்டுகள் சென்னையில் வசித்தும் முதலை பண்ணைகளை கண்டுகொண்டதில்லை. திரும்ப சென்னையில் வசிக்க வாய்ப்பு கிடைக்கும் போது கட்டாயம் அங்கு சென்று பார்ப்பேன். நன்றி.

  ReplyDelete
 4. சென்னையில் நிலநடுக்கமாமே (இன்று காலை 9.46க்கு ?).. உண்மையா ?

  - அலெக்ஸ்

  By: Alex Pandian

  ReplyDelete
 5. பல வருடங்களுக்கு முன்பு, கிணற்றுப் பாறை இடுக்கினுள் தேமேவென்று படுத்துக்கிடந்த விரியன் பாம்பொன்றை ஒரு நபர் தன் 'வீரத்தைக்' காட்டுவதற்காகத் துன்புறுத்திக் கொல்ல முயன்றுகொண்டிருந்தபோது அப்பாம்பு எழுப்பிய 'உஸ்' சத்தம் இருக்கிறதே! பயத்தால் அந்த இடத்தைவிட்டே ஓடிவிட்டது நினைவுக்கு வருகிறது.

  உடுமலைப்பேட்டைக்குப் பக்கத்திலுள்ள அமராவதி அணைக்கருகில் ஒரு முதலைப் பண்ணை இருந்தது; இப்போதும் அங்கு முதலைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

  ReplyDelete
 6. கடைசி ஃபோட்டோ.. ச்சோ க்யூட் :)

  ReplyDelete
 7. குஞ்சு பொறித்திருக்கும் ஆமை
  >>>
  "விருவிருப்பு"க்கே சொல்லணும்னு நெனச்சேன். 'உம் பாட்டில் குற்றம் உள்ளது' ரேஞ்ச் கமெண்ட்டெல்லாம் போடறத நிறுத்திட்டதால விட்டுட்டேன். ஆனா, இப்போ கை அரிக்குது :)

  குஞ்சு 'பொரி'க்கிறது தானே?

  (ஆமை முட்டை பெருசா இருக்குமே. வாத்து முட்டையையே ஆ!ன்னு பாத்த வயசெல்லாம்.....)

  ReplyDelete
 8. என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நினைவுக்கு வருது. படங்கள் அருமை

  By: anuragBy: anurag

  ReplyDelete
 9. என் சின்ன வயசில் பார்த்தது உங்கள் பதிவின் மூலம் நினைவுக்கு வருது. படங்கள் அருமை


  By: anurag

  ReplyDelete
 10. :P Jsri. :) ¦È¡õÀò¾¡ý ¦Ä¡ûÙ

  -Á¾¢

  By: Mathy KandasamyBy: Mathy KandasamyBy: Mathy Kandasamy

  ReplyDelete
 11. பத்ரி - முதலைகள், பாம்புகளுடனான என்னுடைய இரண்டு close encounters பற்றி நினைவுபடுத்திவிட்டீர்கள் (இவை இரண்டுமே திட்டமிட்டவை அல்ல) இதைப் பற்றி ஒருநாள் எழுத வேண்டும்.

  சென்னைக்கு வரும்பொழுது (ஆமாம் அது எப்பொழுது என்று என்னையே நான் கேட்டுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது) கட்டாயம் நினைவில் வைத்திருந்து பார்ப்பேன். (முடிந்தால் வழிகாட்ட உங்களையும் அழைப்பேன்). :)

  By: வெங்கட்

  ReplyDelete
 12. மகள் படத்தில் High Angle தவிர்த்திருக்கலாமே !

  By: Raviaa

  ReplyDelete
 13. Dear Badri
  Thanks for your explanations about anti-venom and all. My mother is fine now.

  And the logo of kamadenu... Pl. consider redesigning this.. Enakku pudikkala. :-)


  By: chithran

  ReplyDelete