Sunday, June 05, 2005

சந்திரமுகி திரைக்கதை, படமாக்கல் குறித்து ஓர் அலசல்

கடைசியாக சந்திரமுகி பார்த்துவிட்டேன். "இதெல்லாம் ஒரு கதையா" என்று சொல்லப்போவதில்லை. எந்தக் கதையாக இருந்தாலும் அதை சுவையான முறையில் திரைக்கதையாக்கி, காட்சிப்படுத்தி, நல்ல வசனங்கள் சேர்த்தால் ரஜினி படத்தைக் கூட சந்தோஷமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் படித்த கடவுள்களின் பள்ளத்தாக்கு கட்டுரைத் தொகுப்பில் சுஜாதா நம்மூர் கதை, திரைக்கதை சொல்லிகளின் கேவலமான திரைக்கதை அமைப்பைச் சாடியிருப்பார். அனந்து என்ற பாலசந்தரின் உதவியாளரை தமிழின் முதலாவது உருப்படியான திரைக்கதை அமைப்பவர் என்றும் சொல்லியிருப்பார்.

ஏதோ எனக்குத் தெரிந்ததை வைத்து சில சந்திரமுகி திரைக்கதை அமைப்பை எப்படி மாற்றியிருக்கலாம் என்று சொல்கிறேன்.

1. முதலில் சரவணன் ஒரு பெரிய உளவியல் மருத்துவர், அமெரிக்காவில் சக்கைபோடும் ஆசாமி என்பதை இந்தப் படம் எவ்வாறு காண்பிக்கிறது என்று பார்ப்போம். நம் படங்களில் யாரையாவது பணக்காரர் என்று காண்பிக்க வேண்டுமானால் அதைக் காட்சிப்படுத்துதல் மூலமாக மட்டும் செய்துவிட மாட்டார்கள். பார்ப்பவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்ற நினைப்பு திரைக்கதாசிரியர், இயக்குனர் ஆகியோருக்கு. உண்மையில் அவர்கள்தான் முட்டாள்கள். பணக்கார, நல்ல மனித கதாபாத்திரம் நின்றுகொண்டிருக்கும்போது இரண்டு கோயிந்தசாமிகள் சத்தமாகப் பேசுவார்கள். "இவரு எவ்ளோ பெரிய பணக்காரரு, ஆனா பாருங்க கொஞ்சம் கூட கர்வமே கிடையாது." "ஆமாமா, இவருக்கு இருக்குற சொத்துல இந்த ஒலகத்தையே வாங்கிப்போடலாம்". இப்படித்தான் ஒருவரது பணக்காரத்தன்மை திரைக்கதையாக, காட்சிகளாக, வசனங்களாக மாறுகிறது.

நல்ல ஹாலிவுட் படங்களைப் பாருங்கள். இப்படி யாரோ இரண்டு கோயிந்தசாமிகள் காட்சிக்குத் தேவையில்லாமல் வந்து வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள். திரைக்கதை, காட்சியமைப்புகளின்படி உங்களுக்கே தெரியும் பாத்திரம் எத்தனை பணக்காரர் என்பது.

ரஜினி பெரிய உளவியல் நிபுணர் என்பதை இங்கு பிரபு வந்து கே.ஆர்.விஜயாவிடம் நாலைந்து ஆங்கில வார்த்தைகள் மூலம் தெரிவிக்கின்றார். இங்கு திரைக்கதை அமைப்பு நீர்த்துப் போகிறது. இந்த மாதிரி ஒருவரது பண்புகளை, திறமைகளை அடுத்தவர் வாயிலாக சொல்லும்போது திரைக்கதையாசிரியரின் திறமையின்மை மட்டும்தான் வெளிப்படுகிறது. உதாரணத்துக்கு ஒரு மருத்துவ கான்ஃபரன்ஸ் நடப்பதுபோல இருக்கலாம். அது சென்னையில் தாஜ் கொரமாண்டலில் நடப்பதாக வைக்கலாம். அதில் உலகெங்கிலும் இருந்து உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் கீநோட் பேச்சு கொடுப்பவர் சரவணன். அதைத்தொடர்ந்து நான்கைந்து கேள்விகள். அதற்கு பிரமாதமாக பதிலளித்து கலக்குகிறார் சரவணன். அப்பொழுது, தான் அமெரிக்காவில் குணமாக்கிய ஒன்றிரண்டு split personility கேஸ்களைப் பற்றி விளக்குவதாக காட்சிகளை அமைக்கலாம்.

ஐந்து நிமிடங்களில் இதை அழகான காட்சியாக்கி உலகின் தலைசிறந்த உளவியல் மருத்துவர்களில் இவர் ஒருவர் என்று காட்டலாம்.

ஆனால் வாசு சற்றும் புத்தியின்றி இந்தக் காட்சியை அமைத்துள்ளார்.

2. படத்துக்கு முக்கியம் ரஜினியின் பாத்திரத்தை விளக்குவது. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி புகுந்து விளையாடும் சண்டை முக்கியம்தான். ஆனால் அதைப் போய் படத்தின் முதல் காட்சியாக வைக்கவேண்டியது அவசியமில்லை. இரண்டாவது காட்சியாக வைத்திருக்கலாம். முதல் காட்சியை மேற்படி மருத்துவ மாநாடாகவும், அதைத் தொடர்ந்த காட்சியை அடிதடிக் காட்சியாகவும் வைத்திருக்கலாம்.

3. செந்தில்/பிரபு பாத்திரம் சொதப்பல் பாத்திரம். அவர் NHAI ஒப்பந்தம் பெறுவது பற்றிய இடத்தில் திரைக்கதை, காட்சியமைப்பு படு கேவலம். நூறு கார்களில் வந்து NHAI-இடமிருந்து நாங்கள் ஒப்பந்தத்தைப் பெற்றுவிட்டோம் என்று பெருமைப்படுவது, தொடர்ந்து வில்லன் கோஷ்டி, "டேய் அவனை வெட்டுங்கடா, எப்படியாவது ஒப்பந்தத்தை நம்ம கைக்கு எழுதி வாங்குங்கடா" என்பது அபத்தம். சண்டைக் காட்சி வேண்டும் எனும்போது அதையும் லாஜிக்கலாகவே நுழைத்து இருக்கலாம். அரசு ஒப்பந்தம் பெற்றவர் தான் நினைத்தால் அதை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி மாற்றிக் கொடுக்க முடியாது. NHAI ஆசாமிகள் என்ன வெட்டிகளா?

4. கதை முழுவதும் கூடவே வளர்ந்த ரஜினியை பிரபு வாங்க/போங்க என்று மரியாதையுடன் கூப்பிடுகிறார். ஆனால் ரஜினி பதிலுக்கு பிரபுவை "வா/போ" தான். ஏன் என்று சொல்வதில்லை. மொழி உபயோகத்தைப் பற்றிய எந்தக் கவலையுமின்றி எடுத்துள்ளார்கள்.

5. பயங்கரமான மாளிகையை யாரிடமிருந்து வாங்கினார்கள்? விற்றவர்களைக் காணவேயில்லை. மேலும் அத்தனை சின்ன கிராமத்தில் மாளிகையை விற்றால் அந்தத் தகவல் எப்படி யாருக்குமே தெரியாமல் இருக்கிறது, செந்திலின் நண்பன் சரவணன் வந்து சொல்லும் வரை? இந்த இடத்தில் திரைக்கதையை மாற்றியமைத்து செந்தில் அந்த மாளிகையை வாங்க வருவதாகவும், வாங்குவதற்கு முன்னமேயே அவரது உறவினர்கள் வேண்டாமென்று தடுப்பதாகவும், அதையும் மீறி அவர் வாங்குவதாகவும் மாற்றி அமைத்திருக்கலாம்.

ஒரு NHAI ஒப்பந்தம் கிடைத்துவிட்டது, அங்கு சில நாள்கள் வேலை இருக்கிறது என்பதனால் மட்டும் ஒரு கேனத்தனமான கிராமத்தில் ரூ. ஐந்து கோடிக்கு மாளிகை வாங்குகிற மாங்கா மடையனை என்ன செய்வது? சும்மா சந்தடி சாக்கில் "ரூ. ஐம்பது கோடி மாளிகையை ஐந்து கோடிக்கு அவர்கள் தருகிறார்கள்" என்று அபத்தமான நம்பர்களைச் சொல்லாமல் விட்டிருக்கலாம். கதையை எந்த விதத்திலும் பாதித்திருக்காது.

6. அந்த வெட்டி கிராமத்தில் டாடா இண்டிகாம் "வாக்கி" போன் ஒரு காட்சியில் மட்டும் வருகிறது. மற்ற நேரமெல்லாம் வயர் உள்ள நம்மூர் பி.எஸ்.என்.எல் போன். யோவ்! டாடா இண்டிகாமிடம் காசு வாங்கிக்கொண்டு இதைக்கூடவா உருப்படியாகச் செய்யமுடியவில்லை வாசுவால்?

7. ஒரு மடிக்கணினியைக் காண்பித்து "Mail for Saravanan" என்று சொல்லி, அவர் அவசர அவசரமாக அமெரிக்கா போய் ஒரு பேஷண்டைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லிக் கிளம்பிவிட்டு, கோக்கு மாக்காக சபரி மலை போனேன் என்று திரும்பி வருகிறார்.

ஓர் இடத்தில் கூட கதையை பேப்பரில் எழுதிவைக்கவில்லையா வாசு?

ஏன் திரைக்கதையில் தலைவர் அமெரிக்கா வரை போய் அங்கு ஒரு பேஷண்டை சொஸ்தப்படுத்திவிட்டு டாடா இண்டிகாம் போனில் ஒரு கூப்பாடு போட்டதும் அலறியடித்துக்கொண்டு அடுத்த பிளேனிலேயே கிளம்பி வருமாறு அமைத்திருக்கக் கூடாது? விஷயத்தின் விபரீதத்தையும், சரவணனுக்கு செந்தில் மேல் உள்ள பாசத்தையும் காட்டுமாறு இருந்திருக்குமே?

இவை சில சாம்பிள்கள்தான். சந்திரமுகி டான்ஸ் நன்றாக வந்துள்ளது. வேட்டையன் காட்சிகள் திரைக்கதையில் நன்றாக உள்ளன. ரஜினிக்கான மசாலா படத்தையும் நல்ல நுட்பத்தோடு திரைக்கதை அமைப்பதன் மூலம் தமிழ் சினிமாவின் மானத்தைக் காக்கலாம்.

இதைப்பற்றி பிரகாஷ் போன்ற ரஜினி/சினிமா ரசிகர்களிடம் பேசினால் கூட அவர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.

37 comments:

  1. அதற்கென்ன?
    நாங்கள் புரிந்து கொள்கிறோமே!

    ReplyDelete
  2. கட்டுன வீட்டுக்கு வக்கன பேச ஆயிரம் பேரு !

    ReplyDelete
  3. பி.வாசு படங்களில் அறிவுக்கு பொருந்தாத சில காட்சிகளாவது இருக்கும். அது தான் அவரது டச். பத்ரிக்கு இதைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் வரவில்லை.

    ReplyDelete
  4. ///நல்ல ஹாலிவுட் படங்களைப் பாருங்கள். இப்படி யாரோ இரண்டு கோயிந்தசாமிகள் காட்சிக்குத் தேவையில்லாமல் வந்து வெட்டிப்பேச்சு பேசமாட்டார்கள். திரைக்கதை, காட்சியமைப்புகளின்படி உங்களுக்கே தெரியும் பாத்திரம் எத்தனை பணக்காரர் என்பது.///

    பத்ரி,
    இதில் நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபட்டுச் சிந்திக்கிறேன். நாமாகக் கதையில் பார்த்து புரிந்துகொள்ள இயலும்தான், ஆனால் கதையில் இரண்டு பேர்கள் பேசுவதாய் வந்து அதைச் சொல்லும்போது அதன் வலிமையே தனி.

    நிஜவாழ்வில்கூட இது அப்படியே பொருந்தும். நாமாகவே பார்த்துத் தெரிந்துகொள்வதைவிட அடுத்தவர் பாராட்டி,புகழ்ந்து சொன்னதின் மூலம் ஒருவரைத் தெரிந்துகொண்டால் ஒரு விதமான மிக உயர்வான தோற்றம் அவரைப்பற்றி வரும் என்பது கண்கூடு.

    நல்லது எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஹாலிவுட்டின் அனைத்து அம்சங்களையும் தரத்தில் உச்சமாய் முடிவுசெய்து பிறவற்றுடன் இணைவைத்துப் பார்ப்பது சரியாக இராது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. ரஜினிகாந்தின் சினிமா ஆளுமையை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க நினைக்கும், உங்கள் போன்றவர்களைக் கூட , ஆர்வமாகப் பார்க்க வைத்து, திரைக்கதையின் உள்ளே புகுந்து கூர்மையாக கவனிக்க வைத்து, அதிலே இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், ஓட்டைகளை அடைத்திருக்கலாம் என்று கிரியேட்டிவாக ஐடியா குடுக்க வைத்தது, ரஜினிகாந்தின் முதல் வெற்றி.

    வெற்றிகள் இனியும் தொடரும்.

    ReplyDelete
  6. இம்புட்டுதானா....இல்லே இன்னும் இருக்கா? கண்ணிலே வெளக்கெண்ணை ஊத்திகிட்டு படம் பார்த்தாப்புலே இருக்கு?!

    ReplyDelete
  7. மாயவரத்தான்: படத்தில் இன்னமும் நிறைய பிரச்னைகள் உள்ளன. உங்களுக்கெல்லாம் "இவனென்னடா ரஜினி படத்தில் குறை கண்டுபிடிப்பவன்" என்ற எண்ணம் மட்டும்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். எல்லாப் படங்களிலும் எது குறை, நிறை என்றுதான் நான் பார்ப்பேன். அதேபோலத்தான் படிக்கும் புத்தகங்களிலும்.

    என்னவோ போங்க... அலுவலகத்தில் எல்லோரும் இன்னொரு முறை படம் பார்க்க என்னையும் கூட அழைக்கிறார்கள். இன்னொரு முறை பார்த்துவிட்டு மிச்சம் மீதி குறைகளையும் எழுதிவிடுகிறேன். இம்முறை ரஜினி ராம்கியும் கூட வரப்போகிறார்.

    ReplyDelete
  8. வணக்கம் திரு பத்ரி அவர்களே,

    இங்கு வந்திருக்கும் பல பின்னூட்டுகளை வைத்தே இப்போது உங்களுக்கு புரிந்துபோயிருக்கும்,ஏன் தமிழ் திரைக் கதாசிரியர்கள் மண்டையை உடைத்துக் கொள்வதில்லை என்று.

    நீங்கள் ஒரு perfectionist என்று நினைக்கிறேன். நீங்கள் எதிப்பார்க்கும் ஒரு நுனுக்கத்தை ரசிப்பதற்கும் நமக்கு ஒரு தகுதி வேண்டும்.இப்போதைக்கு நமக்கு அந்த தகுதி இல்லை. அப்படியிருக்க திரைக்கதாசிரியர் மட்டும் என்ன செய்வார்?
    அனேகமாக நீங்கள் "the sixth sense" பார்த்திருப்பீர்கள்.DVDயில் அந்த படம் கிடைத்தால்,அதில் உள்ள ஷ்யாமலனின் செவ்வியை கேட்டுப்பாருங்கள். எவ்வளவு நுனுக்கமாக அவர் காட்சிகளை அமைத்திருக்கின்றார் என்று அவரே விளக்கி இருக்கிறார்.உங்களை போன்ற நுனுக்கங்களை ரசிப்பவர்களுக்கு அந்த படத்தின் காட்சியோட்டத்தை பற்றிய ஷ்யாமலனின் விரிவுரை நிச்சயம் ஒரு விருந்தாக அமையும்.

    ReplyDelete
  9. //உங்களுக்கெல்லாம் "இவனென்னடா ரஜினி படத்தில் குறை கண்டுபிடிப்பவன்" என்ற எண்ணம் மட்டும்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். //

    அது அப்படி இல்லீங்க... உங்களை தப்பு சொல்லலை. நீங்க சுட்டிக் காட்டுகிற குற்றங் குறைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதுவும் தவிர நீங்க சுட்டிக் காட்டுகின்ற பாய்ண்ட் நம்பர் மூணிலிருந்து, ஆறு வரை, factual errors. ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முதல் இரண்டு பாய்ண்ட்டுகளும், திரைக்கதை அமைப்பு பற்றியது.

    நான் எப்படிப் பார்க்கிறேன் என்றால், இதுவரையிலும், வந்த ரஜினிகாந்த் படங்களில் இருக்கும், தப்பு தவறுகளை விட, இந்தப் படத்தில் இருக்கும் தவறுகள் குறைச்சலானவை. குறிப்பாக, இதற்கு முந்தி வந்த பாபா, படையப்பா, அருணாசலம், முத்து , பாட்ஷா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, இந்த சந்திரமுகியின் திரைக்கதை நேர்த்தியானது. கதையின் நம்பகத்தன்மை பற்றி கேள்விகள் இருந்தாலும், அந்தக் கதையை குழப்பமில்லாமல், கொண்டு சென்றது முக்கியமானது.

    ஒரு கதைக்கு திரைக்கதை அமைக்கும் போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக, தங்கள் திறமைக்கும், capability க்கும் ஏற்றவாறு திரைக்கதை அமைக்கிறார்கள். முதல் காட்சியில் இன்ன விதமாக ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கலாம் என்று சொல்வது போலவே, நல்ல கற்பனை உடையவர்களுக்கும் இன்னும் நல்ல விதமாகவும் காட்சிகள் தோன்றும். நன்றாக ஓடி, வெற்றி பெற்ற தரமான படங்கள் பற்றி கூட இப்படி அபிப்ராயங்கள் எழலாம். ஆனால், இந்தப் படத்தை எடுத்தவ்ர் பி.வாசு. எல்லாவற்ற்றையும் ஆராய்ந்து, ஏரணங்களைச் சரி பார்த்து, ஓட்டைகளை அடைத்து, இன்னும் நம்பகமாகப் படம் எடுக்க, அவர் ரித்விக் கட்டக்கும் அல்ல, ஜேம்ஸ் கேமரூனும் அல்ல. தாலி செண்டிமெண்ட், செயற்கையான உணர்ச்சிகளை அதீதமாகக் காட்டுதல் போன்றவற்றிற்குப் பெயர் போன பி.வாசு.

    தப்பு கண்டுபிடிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை. யாரும் அப்படிச் சொல்ல முடியாது.

    ReplyDelete
  10. //ஒரு மருத்துவ கான்ஃபரன்ஸ் நடப்பதுபோல இருக்கலாம். அது சென்னையில் தாஜ் கொரமாண்டலில் நடப்பதாக வைக்கலாம். அதில் உலகெங்கிலும் இருந்து உளவியல் மருத்துவர்கள் கலந்துகொள்கிறார்கள். அதில் கீநோட் பேச்சு கொடுப்பவர் சரவணன். அதைத்தொடர்ந்து நான்கைந்து கேள்விகள். அதற்கு பிரமாதமாக பதிலளித்து கலக்குகிறார் சரவணன். அப்பொழுது, தான் அமெரிக்காவில் குணமாக்கிய ஒன்றிரண்டு split personility கேஸ்களைப் பற்றி விளக்குவதாக காட்சிகளை அமைக்கலாம். \\

    அதுசரி., இது குப்பானூரு, கொட்டாம்பட்டில இருக்குற என்னய மாதிரி ஆளுகளுக்கு புரியுமா?

    ReplyDelete
  11. \\ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க நினைக்கும், உங்கள் போன்றவர்களைக் கூட , ஆர்வமாகப் பார்க்க வைத்து, திரைக்கதையின் உள்ளே புகுந்து கூர்மையாக கவனிக்க வைத்து, அதிலே இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம், ஓட்டைகளை அடைத்திருக்கலாம் என்று கிரியேட்டிவாக ஐடியா குடுக்க வைத்தது, ரஜினிகாந்தின் முதல் வெற்றி. //

    அவர் கால் தடுக்கி கீழ விழுந்தாக் கூட., ஆகா... என்ன அழகா படுத்துகிட்டு மண்ண கும்பிடுறார்னு சொல்ல ஏகப் பட்ட கூட்டம் இருக்கும் போலருக்கே?., என்ன காந்த சக்திய்யா?.

    ReplyDelete
  12. என்னா திரைக்கதை அலசலோ? ஒரு தபா போயி மணிச்சித்திரத் தாழு பாத்துட்டு வந்து அப்புறம் சொல்லுங்க, படத்துல வாசு திரைக்கதை எங்க இருக்குன்னு...

    ReplyDelete
  13. இங்கு வழங்கப்பட்ட பின்னூட்டுகளைப் பார்த்தால், தமிழர்கள் முட்டாள்கள், ஆதலால் முட்டாள்தனமாக படத்தை எடுத்தால்தான் அவர்களுக்குப் புரியும் என்ற கருத்தே மேலோங்கி இருக்கின்றது. யதார்த்தமாவது கிதார்த்தமாவது! கார்டூண் எப்படி ஒரு தனிக் கலையோ, அது போலவே ரஜினிப்படங்களும் ஒரு தனிக் கலை. அங்கு யதார்த்தத்தைக் காண முடியாது; எதிர்பார்க்கவும் கூடாது. ரஜினி 10, 20 பேரை அடித்தே ஆக வேண்டும். முட்டாள் தனமான, இரட்டை அர்த்தம் கொண்ட நகைச்சுவைகள் இருந்தே ஆக வேண்டும். தன்னையே போற்றும் பாடல்களும் வசனங்களும் கட்டாயம் அவசியம். அதுபோல மேலோடமான அரசியல் விமர்சனமும் கண்டிப்பாக இருக்க வேண்டும். முடிந்தால், மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ரஜினி இலக்காகும் நிலையிலும் அவர் தனது பாசத்தைப் பொழிய வேண்டும்; கடமையுணர்ச்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.

    இப்படியெல்லாம் இல்லாவிட்டால் அது ரஜினிப்படமே கிடையாது. அனைவரும் பார்ப்பதனால், அதைப் பற்றிப் பேசுவதால், நமக்கெல்லாம் ரஜினிப்படங்களைப் பார்ப்பது ஒரு சமூகக் கடப்பாடாகவே உருவெடுத்து விட்டது!

    ஆகவே, ரஜினிப்படத்தில் இந்த பாழாய்ப் போன 'லாஜிக்'கை எதிர்பார்ப்பது குற்றத்தினும் குற்றம் அன்றோ? ஆனால் ஒன்று: கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளி வந்த ரஜினிப்படங்களில் இப்படம் சற்று வேறுபட்டு, ஏதொ ஓரளவிற்காவது ஏற்றுக் கொள்ளுமாறு இருந்தது.

    ReplyDelete
  14. //இம்முறை ரஜினி ராம்கியும் கூட வரப்போகிறார். //

    கூட படம் பாக்குறதுக்கா?!


    அதாவது ஒண்ணு புரிஞ்சிக்கிங்க அண்ணாச்சி..! ரஜினி படங்கள் கலைப்படங்கள். தமிழர்களின் கலை ரசனைக்கு படு பயங்கரமாக தீனி போடுபவை. தமிழ் சினிமா ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்துச் செல்லும் தகுதியுடயவை. அதற்காகவே (அடுத்தவர் தயாரிக்கும் படங்களில் மட்டும்) படு பயங்கரமாக ரிஸ்க் எடுத்து புதுப் புது உத்திகளை அவர் பயன் படுத்துகிறார் - இப்படியெல்லாம் 'நாங்க சொன்னோமா?!'

    ரஜினி படம் என்றால் இப்படி தான் என்று சாதாரண பொதுமக்கள் நினைக்கிறார்களோ இல்லையோ, அறிவுஜீவிகள் தாங்களாகவே கற்பனை செய்து கொன்டு அப்படியே விமரிசனங்களிலும் ஈடுபடுவது புதிதல்ல.(உங்களை சொல்லலை சார்!) ரஜினி படங்கள் தமிழர்களின் ரசனையை கட்டிப் போடுகிற்ன்றன... முட்டாளாக்குகின்றன என்பதெல்லாம் த்ரீ மச்சாக தெரியவில்லையா? ஒரு திரைப்படம் பார்த்து விடுவதால் மட்டும் என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது? ஐயா, எங்களை மாதிரியான ஆட்களுக்கெலாம் அப்படி ஒரு கலைப் படமோ, கஷ்டப்பட்டு எடுக்கும் படமோ புரியாதுங்க சார். கொடுக்கிற காசுக்கு மூணு மணி நேரம் ஜாலியா போனா போதும். அந்த மாதிரியான மேட்டர் ரஜினி படத்திலே ரொம்பவே ஜாஸ்தி. அதனால போறோம்.

    அதற்காக விமரிசனத்திற்கு அப்பாற்பட்டது ரஜினி படம் என்று சொல்லவில்லை. இதே அளவு விமரிசனத்தை வேறு எந்த எந்த படங்களுக்கு (அல்லது) புத்தகங்களுக்கு செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.

    பத்து, இருபது பேரை அடித்தே நொறுக்க வேண்டும் என்று கூறுகிறார்களே.. தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு படத்திலாவது அப்படி ஒரு காட்சியமைப்பு இல்லாமல் இருக்கிறதா, சொல்லுங்கள்!?

    உலக சினிமா தெரியவேண்டாம்... சினிமா என்ன சோறா போடப் போகிறாது?! பொழுது போக்கு அம்சத்தை பொழுது போக்காகவே பார்த்து விட்டுப் போய்த் தொலைக்கிறோம். எங்களை முட்டாள்கள் என்று சொல்லிக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்கிறதா? அதுவே ரஜினி என்ற மாஸ் எந்த ரூபத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சாட்சி.

    எது எப்படியோ, ரெண்டாவது தடவை(யாவது) படத்தை பாமரனின் கண்ணோட்டதோடு பார்த்து ரசியுங்கள். விளக்கெண்ணை ஊத்திக் கொண்டு திரைக்கதை, காட்சியமைப்பு, கேமரா கோணம், லைட்டிங் என்றெல்லாம் சிந்தித்து மூன்று மணி நேரத்தை ஏகப்பட்ட பட்டியல்கள் மட்டும் இட்டுக் கொண்டு வந்தீர்களேயானால், கடைசியாக வீடு திரும்பியவுடன் சாரிடானும், பில்டர் காபியும் தான் தேவைப்படும். :)

    எல்லாரும் வழக்கமாக சொல்லும் டயலாக் ... ரஜினி படத்தை ரஜினி படமாக பாருங்க சார் - அதாவது ரஜினி படத்தை ஒரு சராசரி தமிழ் ரசிகனாக இருந்து பார்த்து ரசிங்க சார்.

    ReplyDelete
  15. காஞ்சி: Sixth Sense இன்னமும் பார்க்கவில்லை. டிவிடி வாங்கி அதில் உள்ள ஷ்யாமளன் பேட்டியையும் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  16. கடைசியில் படத்தின் நிறைகளைப் பற்றி இரண்டு வரிகள் எழுதும்போது கூட தங்கத் தலைவி 'எங்கள் ஜோ'வைப் பற்றி எழுதாத பத்ரியை வலையுலக ரசிகர் குழாம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  17. மீனாக்ஸ்: "சந்திரமுகி டான்ஸ் நன்றாக வந்துள்ளது." என்று சொல்லியிருக்கிறேனே! போதாதா?

    ReplyDelete
  18. நல்ல அலசல் பத்ரி.

    //உதாரணத்துக்கு ஒரு மருத்துவ கான்ஃபரன்ஸ் நடப்பதுபோல இருக்கலாம். அது சென்னையில் தாஜ் கொரமாண்டலில் நடப்பதாக வைக்கலாம். //
    பார்த்தாலே பரவசம் படத்தில் இந்த மாதிரி ஒரு Dynamic அறிமுகம் கொடுத்திருப்பார் மாதவனுக்கு, பாலச்சந்தர்.

    //சண்டைக் காட்சி வேண்டும் எனும்போது அதையும் லாஜிக்கலாகவே நுழைத்து இருக்கலாம். //
    // டாடா இண்டிகாமிடம் காசு வாங்கிக்கொண்டு இதைக்கூடவா உருப்படியாகச் செய்யமுடியவில்லை வாசுவால்?//
    லாஜிக் சேர்ப்பது எவ்வளவு எளிது என்பதுகூட யோசிக்கத் திரணி இல்லாத இயக்குனர், என்செய்வது? இத்தனை நாள் தமிழ்த் திரையில் ஒதுக்கப்பட்டவர், இன்னமும் ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை, பாவம்!

    ReplyDelete
  19. //பத்து, இருபது பேரை அடித்தே நொறுக்க வேண்டும் என்று கூறுகிறார்களே.. தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு படத்திலாவது அப்படி ஒரு காட்சியமைப்பு இல்லாமல் இருக்கிறதா, சொல்லுங்கள்!?//



    எத்தனை படங்கள் வேண்டும்?
    கமல் படங்களிற்கூட, ஏன் ரஜனி பங்களிற்கூட நிறைய இருக்கின்றனவே.
    மும்பை எக்ஸ்பிரஸ் உட்பட.

    சமீபத்தில் வந்த கண்ணாடிப்பூக்கள், அழகிய தீயே, அமுதே... இப்படியே போகலாம்.

    ReplyDelete
  20. இதே பி.வாசு முன்னே சந்தானபாரதி கூட கூட்டு போட்டு பாரதி-வாசு'ன்னு டைரக்ட் செஞ்ச 'பன்னீர்புஷ்பங்கள்' பார்த்திருக்கரீங்களா பத்ரி, அந்த படம் எடுக்கும் போது வாசு கூட இப்ப நீங்க நினைக்கிற மாதிரிதான் நினைச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.. எல்லாம் காலத்தின் கோலம்.. லட்சியவாதிகள், எதார்த்தவாதிகள் ஆன சரித்திரம் அது..

    ReplyDelete
  21. Dear Mr.Badri,

    I have not yet seen the movie

    Shall I join with u for the second time? to see the movie...

    ReplyDelete
  22. பத்ரி,

    நோயாளியை குணப்படுத்த அமெரிக்கா போவதாக படத்தில் கூறப்படவில்லை. இ-மெயில் மட்டும்தான் வருகிறது.

    மற்றபடி நீங்கள் கூறிய சாத்தியங்களை உணராதவரல்ல வாசு. ஆனால் புத்திசாலிதான்.

    தங்களை மணிச்சித்திரதாழ் படத்தை பார்க்க நான் சிபாரிசு செய்கிறேன். என்னிடம் படத்தின் குறுந்தகடு உள்ளது. நல்ல படம். உங்களுக்கு விருப்பம் என்றால் தெரிவிக்கவும்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  23. //என்னிடம் படத்தின் குறுந்தகடு உள்ளது. நல்ல படம். உங்களுக்கு விருப்பம் என்றால் தெரிவிக்கவும்.//

    தலீவா.... எனக்கு ஒரு காப்பி....

    ReplyDelete
  24. சந்திரமுகி 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட். ஓ.கே.
    படம் நல்ல வசூல். ஆனா 'நல்ல காமெடி' என சில, பலரால் ஒத்துக் கொள்ளப்பட்ட 'மும்பை எக்ஸ்பிரஸ்' பார்த்தீர்களா?
    சில பூச்சுற்றல்கள் இருந்தாலும் என்னால் ரசிக்க முடிந்தது. உங்கள் ரிப்போர்ட் என்ன?

    ReplyDelete
  25. /////இன்னொரு முறை பார்த்துவிட்டு ........///////

    பத்ரி, நீங்க பிஸியா இருக்கிற ஆளுன்னுல்ல நெனச்சிட்டு இருந்தேன். :-))))

    ராஜ்குமார், அப்படியே என்னையும் கவனிக்கவும்.

    ReplyDelete
  26. நல்ல திரைக்கதைனு பார்த்தா 5% படம் கூட தேறாது.. சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உங்களை ஆட்டோவில் தேடுவதாய் கேள்வி.. என்னையும் சேர்த்து தான் :)
    நல்ல ஆராய்ச்சி பத்ரி!

    வீ எம்

    ReplyDelete
  27. அன்பின் பத்ரி,
    நீங்களே இப்படிச்செய்யலாமா?

    சந்திரமுகி படத்தை ஆர்வக்கோளாறில் ஒருமுறை தியேட்டரில் போய்ப் பார்த்தது சரி, இரண்டாம் முறை ஏன்?

    படத்தை அலசவேண்டுமெனில் (+) மணிச்சித்திரத்தாழ், (-) சந்திரமுகி என்று சொல்லிவ்ட்டுப்போங்களேன், அல்லது சிடி வாங்கி வைத்து பார்த்து திட்டுங்களேன்.

    இம்மாதிரிப் படத்துக்கெல்லாம் தியேட்டருக்கு போவது, பி.வாசூவின் திறமையின்மையை நாமும் அங்கீகரிப்பதும் அரவணைப்பதும் போலத்தான்.

    நல்ல படங்களைத்தான் காசு கொடுத்துப்பார்க்க வேண்டும், அதுததன் நல்ல படத்துக்கும் நல்லது, நமக்கும் நல்லது!

    எம்.கே.குமார்

    ReplyDelete
  28. எந்தப் (புதிய) படத்தையும் திரையரங்கில் காசு கொடுத்து மட்டுமே பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. திறமையின்மையைத் திட்டுவதென்றால் கூட அப்போது தான் நமக்கு அந்த உரிமை வருவதாக நான் கருதுவேன்.

    ReplyDelete
  29. பத்ரி,
    நல்ல அவதானிப்புகள். படம், கிடம் எடுக்கிற ஐடியா எதுவும் இருக்கா?

    ReplyDelete
  30. ரஜினி ராம்கிகள் கூட கமல் படத்தை புகழ்கிறார்கள். கமல் குமார்களுக்கு மட்டும் ஏனோ கவலை? வயிற்றெரிச்சலாக இருக்கமோ?

    ReplyDelete
  31. அட.. அது என்ன 'ரஜினி ராம்கிகள் கூட..'?! ஆ, வூன்னா ரஜினி ராம்கியை இழுக்காட்டா உங்களுக்கெல்லாம் தூக்கமே வராதா? மறுபடியும் மாயுரம் மாபியா சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    ReplyDelete
  32. ரஜினி படம் பாத்து (தமிழ் படம் பாத்தே) ரொம்ப நாள் ஆகுதுங்கறதால நோ கமெண்ட்ஸ்... அப்புறம் ரஜினி படத்து திரைக்கதையெல்லாம் ஆராய்ச்சி பண்ணி... இது ரொம்பவே ஓவர்

    ReplyDelete
  33. Badri, are you writing under by name "JBR", cinesouth published this article :

    http://tamil.cinesouth.com/specials/specials/rajini.shtml

    ReplyDelete
  34. //அதாவது ரஜினி படத்தை ஒரு சராசரி தமிழ் ரசிகனாக இருந்து பார்த்து ரசிங்க சார். //

    என்ன இருந்தாலும் மாயவரத்தான் சராசரி தமிழ் ரசிகர்களை இவ்வளவு கேவலப்படுத்தக்கூடாது....

    ReplyDelete
  35. சராசரி தமிழ் சினிமா ரசிகர்களை நான் எங்கேயும் பா.ம.க. தொண்டரடிப்பொடிகள் என்று கூறவேயில்லையே குழலி?!

    ReplyDelete
  36. http://tamil.cinesouth.com/specials/specials/rajini.shtml

    இதை எழுதியவர் ஜான்பாபு என்றுள்ளது ..

    //இதைப்பற்றி பிரகாஷ் போன்ற ரஜினி/சினிமா ரசிகர்களிடம் பேசினால் கூட அவர்கள் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறார்கள்.//


    இதை கூடவா காப்பி அடிப்பாவர்கள்? தேவுடா.. தேவுடா

    ReplyDelete
  37. ஈயடிச்சான் காப்பின்னா என்ன?!

    ReplyDelete