Sunday, June 05, 2005

கலைப்படங்களின் வணிகர்

பதினேழு வயதுவரை நான் வளர்ந்த நாகையில் ஆங்கிலத் திரைப்படங்கள் என்றாலே பலான படங்கள் என்றுதான் அனைவரும் நினைத்தார்கள். இதில் ஹாங்-காங்கிலிருந்து வரும் சீன-ஆங்கில மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களும் அடக்கம். 'காந்தி' ஒன்றுதான் இந்தக் கருத்திலிருந்து தப்பித்த படம் என்று நினைக்கிறேன். 'ஓமர் முக்தார்' கூட பலான சீன் உள்ள படம் என்றுதான் பார்க்கப் போனோம்;-) மேற்படி இரண்டு படங்களைத் தவிர உருப்படியான எந்த ஆங்கிலப்படமும் அந்த ஊருக்கு அப்பொழுது வந்ததில்லை என்று நினைக்கிறேன். அவ்வப்போது "ஏப், சூப்பர் ஏப்" போன்ற படங்கள் மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் போட்டுக் காண்பிக்கப்படும். அந்தப் படத்தில் ஜோடி ஜோடியாக மிருகங்களும், கடைசி ஒரு காட்சியில் மனித ஜோடியும் கலவி புரிவதைக் காண்பிக்க, வெகுண்டெழுந்த ஆசிரியர்கள் "போதும் பார்த்தது" என்று எங்களைத் துரத்திவிட்டார்கள்.

ஐஐடி சென்னை வந்ததும் வாரம் ஒன்றாக ஆங்கிலத் திரைப்படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். ஓ.ஏ.டி என்றழைக்கப்படும் திறந்த வெளி அரங்கில் சில சமயம் கொட்டும் மழையிலும்கூட உட்கார்ந்து பெரிய திரையில் காண்பிக்கப்படும் ஹாலிவுட் படங்களைப் பார்த்து அதிசயித்து இருக்கிறேன். ஆனால் 21 வயதுக்குப் பிறகுதான் நல்ல ஆங்கிலப் படங்கள் பார்க்கக் கிடைத்தன.

அப்பொழுது நான் இதாகாவில் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். பல்கலைக்கு உள்ளேயே வில்லார்ட் ஸ்டிரெயிட் தியேட்டர் என்ற அரங்கு உண்டு. அதைத் தவிர அந்த கிராமத்தில் நான்கைந்து பலதிரை அரங்குகள் உண்டு. பொதுவாகவே ஒரு படத்துக்கு பத்து பேருக்கு மேல் இருப்பது அதிசயம். ஆனாலும் படங்கள் சில நாள்களுக்கு ஓடும்.

நல்ல சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது கூட வசித்த மாணவர்கள்தான். முதலில் பார்த்தது A Room with a View தான் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில்தான் முதன்முதலாக டேனியல் டே-லூயிஸ் நடிப்பைப் பார்த்ததும். நடிகர்கள் அனைவருமே ஆரவாரமில்லாத, அமைதியான நடிப்பை வெளிக்காட்டியிருப்பார்கள். அழகான படப்பிடிப்பு. எளிமையான கதையை மிக அழகான திரைக்கதையாக்கி இருப்பார்கள். பாத்திரங்கள் ஒவ்வொன்றுக்குமான நடிகர்கள் பொருத்தமாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பார்கள். சின்னச் சின்ன பாத்திரங்கள் கூட நம் மனதில் நிற்கும்.

நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் இந்தப் படத்தைத் தயாரித்தவர் ஓர் இந்தியர் என்றார்கள். மெர்ச்சண்ட் என்ற பெயர் எந்தவிதத்திலும் இந்தியப் பெயராக எனக்கு அப்போது தோன்றவில்லை. (விஜய் மெர்ச்சண்ட் ஏனோ ஞாபகத்துக்கு வரவில்லை.) பின்னர்தான் அவரது முழுப்பெயர் இஸ்மாயில் மெர்ச்சண்ட் என்றும், பல பார்சி குடும்பப் பெயர்களும் ஆங்கிலப் பெயர்களாக இருக்கும் என்றும் தெரிந்தது.

தொடர்ந்து இதாகாவில் வெளியாகும் மெர்ச்சண்ட் படங்கள் அனைத்துக்கும் போனோம். Howards End, The Remains of the Day ஆகியவற்றைப் பலமுறை பார்த்தோம். முன்னரேயே ஆந்தனி ஹாப்கின்ஸ் பற்றித் தெரிந்திருந்தாலும் இந்தப் படங்களில்தான் எம்மா தாம்சன் என்னும் நடிகரைப் பற்றித்தெரிந்துகொண்டதும். ஹாப்கின்ஸை ஹானிபால் லெக்டராக Silence of the Lambs படத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதாகாவில் இருக்கும்போதுதான் மெர்ச்சண்ட் இயக்கிய In Custody என்ற படமும் பார்க்கக் கிடைத்தது. கடல் கடந்து எங்கேயோ வந்து போபால் நகரையும் அங்கு அழிந்துகொண்டிருக்கும் முஸ்லிம் உருதுக் கவிஞனையும், அவனது வாழ்வையும் குரலையும் பிடிக்க நினைக்கும் ஓர் இந்து பள்ளிக்கூட வாத்தியாரையும் காண முடிந்தது. சென்னைக்கு இந்தப் படம் வந்திருக்குமா, வந்து ஒரு நாளாவது தாங்கியிருக்குமா என்று தெரியவில்லை.

மெர்ச்சண்ட் படங்களைத் தொடர்ந்துதான் E.M. Forster என்னும் நாவலாசிரியர் அறிமுகமானது. நூலகங்களிலிருந்து அவரது புத்தகங்களைத் தேடி எடுத்துவந்து படித்தார்கள் சக தோழர்கள். அவர்களிடமிருந்து வாங்கி சில புத்தகங்களைப் படித்தேன்.

1996-ல் இந்தியா திரும்பிவிட்டதால் மீண்டும் தியேட்டருக்குச் சென்று நல்ல படங்கள் பார்ப்பது தடைப்பட்டுப்போனது. இப்பொழுது சமீபத்தில்தான் அபூர்வமான படங்கள் கிடைக்கும் டிவிடி கடை ஒன்று கண்ணில் பட்டுள்ளது. ஆனால் அங்கு வாங்கும் படங்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் விற்கப்படுவதா அல்லது பைரேடட் டிவிடிக்களா என்று தெரியவில்லை!

மெர்ச்சண்ட், ஐவரி ஆகியோர் நினைவிலிருந்து மறந்துபோனார்கள்.

பின் 2000-ல் பிரிட்டனில் வில்ட்ஷயர் கவுண்டியில் ஒரு வருடம் வசித்தேன். அப்பொழுது அங்கு வசிக்கும் நண்பர், Howards End போன்ற மெர்ச்சண்ட்-ஐவரி படங்கள் படமாக்கப்பட்ட வீடுகளையும் தெருக்களையும் காண்பிக்கிறேன், வா என்று அழைத்துப் போனார்.

பிறகும் மெர்ச்சண்ட் நினைவிலிருந்து மறந்துபோனார்.

இரண்டு வாரங்களுக்கு முன் அவர் இறந்துபோனார்.

4 comments:

  1. மச்சான், நீ பார்க்கும் ஆங்கிலப் படங்களைப் பற்றி தொடர்ந்து எழுது.

    ReplyDelete
  2. // இப்பொழுது சமீபத்தில்தான் அபூர்வமான படங்கள் கிடைக்கும் டிவிடி கடை ஒன்று கண்ணில் பட்டுள்ளது. //

    இந்த டிவிடி கடை இருப்பது சென்னையில் தானே ? சென்னையில் தான் என்றால் எங்கே உள்ளது என்று கூறமுடியுமா ??

    ReplyDelete
  3. மதி: Mystic Masseur பார்க்கவேண்டிய படம். நம்ம டிவிடி கடையில் என்னவெல்லாம் கிடைக்கும் என்று போய் ஒரு நோட்டம் விட்டுவிட்டு வரவேண்டும். சொல்லிவைத்தால் அவரே தேடி வைத்திருப்பார்.

    சந்தோஷ்: தனி அஞ்சல் அனுப்புங்கள், இடத்தின் முகவரியை அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete