எனக்கு பத்மநாப ஐயரை அவ்வளவாகத் தெரியாது. என் நண்பர், எழுத்தாளர் இரா.முருகன் சிலமுறை பத்மநாப ஐயர் பெயரை என்னிடம் சொல்லியிருக்கிறார். ராயர் காபி கிளப் எனப்படும் யாஹூ! குழுமத்தில் முருகன் சிலமுறை ஐயரைப் பற்றி எழுதியிருக்கிறார்.
நான் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் லண்டனில் வசித்தேன். கிரிக்கெட் தொடர்பான ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவந்தேன். அப்பொழுது எனக்குத் தமிழின் மீது அவ்வளவு ஈடுபாடில்லை. அதனால் ஐயரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. கேள்விப்பட்டிருந்தால் பலமுறை அவருடன் அளவளாவியிருப்பேன்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், பெப்ரவரி 2003-ல் நான் திடீரென தமிழில் எழுதத் தொடங்கினேன். தமிழ்ப் புத்தகங்களைக் கூடை கூடையாக வாங்கிச் சேர்க்கத் தொடங்கினேன். ஓரளவுக்குப் படிக்கவும் செய்தேன். ஒரே வருடத்தில்... பெப்ரவரி 2004-ல், தமிழில் புத்தகங்கள் பதிப்பிக்கும் நிறுவனம் (கிழக்கு பதிப்பகம்) ஒன்றையும் தொடங்கி விட்டேன்.
அதற்குப் பின்னர் ஜூலை 2004-ல் லண்டன் செல்லவேண்டி இருந்தது. அப்பொழுதுதான் பத்மநாப ஐயரைச் சந்தித்தேன்.
ஐயருக்கு இலக்கியத்தில் ஈடுபாடு உண்டு என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் யோசித்துப் பார்க்கும்போது இலக்கியங்களையும் மீறி, அவரது ஆர்வம் உண்மையில் புத்தகம் என்னும் ஸ்தூல உருவத்தின் மீதுதான் இருக்கிறது என நினைக்கிறேன். இலக்கியம், எழுத்து, படைப்பு, கவிதை, கதை என்று சொல்லும்போது அவை அச்சில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. இன்று இணையத்திலேயே பிட்களாகவும் பைட்களாகவும் இலக்கியம் வெளிவருகிறது. ஆனால் அச்சிட்ட புத்தகங்கள் - அவை வெறும் குப்பைகளை உள்ளடக்கியிருந்தாலும் - ஆர்வத்தைத் தூண்டுவன.
நான் லண்டனில் இருந்தபோது இரண்டு நாள்கள் ஐயரைச் சந்தித்தேன். முதல் நாள் நித்தியானந்தத்தின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு ஐயரது நண்பர்கள் பலரும் இருந்தனர். இடியாப்பமும் சொதியும் தேங்காய்த் துவையலும் உருளைக்கிழங்கு கறியுடன் இரவு உணவு. அதன்பின்னர் இரவு வீடு திரும்பும் முன்னர் ஐயருடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அதுதான் ஐயரை முதன்முதலாகச் சந்திப்பது என்பதால் அவரது சிறுவயது இலங்கை வாழ்க்கை, அவர் புத்தகங்கள், இதழ்கள் ஆகியவற்றை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பியது, அவரது மனைவி, குழந்தைகள் போன்று பலவற்றையும் பற்றிப் பேசினோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து அவர் இந்தியாவுக்கு தோணி மூலம் வந்து சென்னையில் சில புத்தகங்களை அச்சிட்டு, மீண்டும் அவற்றை எடுத்துக்கொண்டு ஊர் திரும்பியதைப் பற்றிச் சொன்னார். தரமான புத்தகங்கள் அச்சிடுவது, வித்தியாசமான முறையில் புத்தகங்களை அச்சிடுவது ஆகியவற்றைப் பற்றி நிறையப் பேசினார்.
அடுத்த நாள் ஒரு பெட்டி நிறைய எக்கச்சக்கமான புத்தகங்களையும், சஞ்சிகைகளையும் கொண்டுவந்து கொடுத்தார். அதிலிருந்து சில புத்தகங்களையும் எடுத்துக்காட்டி, அவற்றைப் பற்றிப் பேசினார். ஒன்று குழந்தைகளுக்கான புத்தகம். தீவிர இலக்கியவாதிகள் இந்தப் புத்தகத்தை சட்டை செய்யமாட்டார்கள். குழந்தைக்கான கதை. ஒவ்வொரு பக்கமும் எழுத்துக்களுடன் படங்கள் உண்டு. அதற்கும் மேலாக ஒவ்வொரு பக்கத்திலும் சில பகுதிகள் வெவ்வேறு வடிவங்களில் வெட்டப்பட்டிருக்கும். அதனால் அடுத்த பக்கத்தில் இருக்கும் சில படங்களும் எழுத்துக்களும் முதல் பக்கத்திலிருந்து பார்க்கும்போதே தெரியும்.
இந்தப் புத்தகம் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்ததையும், நேர்த்தியோடு ஒரு பெட்டி மாதிரியான மேலட்டைக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற புத்தகங்கள் தமிழில் வரவேண்டும் என்று தனக்கு இருக்கும் ஆசையைச் சொன்னார்.
சிறுவர்களுக்கான புத்தகங்களை நான் பதிப்பிக்கும்போது நிச்சயம் ஐயரது ஆசையை மனத்தில் வைத்திருப்பேன்.
'ஐயரின் சூட்கேஸ்' என்று என் வீட்டில் அழைக்கப்படும் பெட்டியில் ஐயர் கொடுத்தனுப்பியிருந்த புத்தகங்களை ஒன்றன் பின் ஒன்றாக நான் மெதுவாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதைப் படித்து முடிக்க எனக்கு பல வருடங்கள் ஆகும்! ஆனால் ஐயர் கொடுத்த ஒரு புத்தகத்தை மட்டும் நான் உடனடியாகப் படித்துவிட்டேன். அது அண்டன் பாலசிங்கம் எழுதியிருந்த 'விடுதலை' என்ற புத்தகம். அதைப்பற்றி நான் எனது வலைப்பதிவில் ஓர் அறிமுகப் பதிவை எழுதியிருந்தேன் (ஒன்று | இரண்டு | மூன்று). யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று அந்தப் பதிவை வெளியிட விரும்புவதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கேட்டு ஐயர் எனக்கு எழுதியிருந்தார். கடல் கடந்து வரும் பத்திரிகையில் என் எழுத்து வெளிவருவது எனக்கு சந்தோஷம்தான்!
ஐயரை நான் சந்திப்பதற்கு ஒரு மாதம் முன்னரே - ஜூன் 2004-ல் - நான் கொழும்பு செல்லவேண்டியிருந்தது. இந்தப் பயணத்தைப் பற்றி ஐயரிடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தேன். ஐயர் உடனேயே தனது நண்பர்கள் சிலருக்குத் தகவல் தெரிவித்து என்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இதனால் எனக்கு சு.வில்வரத்தினம், தெளிவத்தை ஜோசப், மு.பொன்னம்பலம், ரமனேஷன் போன்றவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. [ஒன்று | இரண்டு]
இத்தனைக்கும் என்னைச் சந்திக்கும் ஒரே காரணத்துக்காக வில்வரத்தினம் திருகோணமலையிலிருந்து கொழும்பு வந்திருந்தார்! அப்படி ஐயர் அவர்களிடம் என்னைப்பற்றி என்னதான் சொல்லியிருந்தாரோ? அவர்களும் ஒருவேளை சாகித்ய அகாதெமி விருது வாங்கிய பெரும் தமிழ் எழுத்தாளர் யாரோ வருவதாக எண்ணியிருந்திருக்கலாம்! அதன்பின்னர் அவர்களிடம் பேசும்போது, நான் ஒரு சாதாரண வாசகன்தான்; எழுத்தென்று சொல்லிக்கொள்ளுமாறு நான் ஒன்றும் செய்தது கிடையாது; ஒரு பதிப்பகம் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன என்று விளக்கவேண்டியிருந்தது.
ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படுவதில்லை என்று ஐயர் வருத்தப்படுவதாக எனக்குத் தோன்றியது. ஐயர் தன் சொந்தச் செலவில் தமிழகத்தில் கிடைக்கும் புத்தகங்கள், இதழ்களை வாங்கி ஈழத்தில் தன் நண்பர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்து வந்தார் என்று அறிகிறேன். ஆனால் அதேபோல ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகள் பரவலாக தமிழகத்தில் கிடைக்குமாறு யாரும் முயற்சிகள் செய்யவில்லை.
இப்பொழுது ஓரளவுக்கு ஈழ எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் இது தொடர்ச்சியாக, இன்னமும் பெரும் அளவில் நடக்க வேண்டும். அதற்கென பலரும் சேர்ந்து உழைக்க வேண்டியிருக்கும்.
புத்தகங்களைத் தவிர்த்துப் பார்க்கையில் ஐயர் தான் பெரும் சோம்பேறி என்று தன்னைச் சொல்லிக்கொள்கிறார். சில நாள்கள் சமையல் செய்ய சோம்பலாக இருப்பதால் சமைக்காமல், தேநீர் அருந்த வெந்நீர் கூடப் போட விரும்பாமல், ஒன்றையுமே சாப்பிடாமல் தன் புத்தகங்களோடு தனித்து வாழ்க்கை நடத்தி வருகிறார் ஐயர்.
ஐயர் புத்தகங்கள் மீது கொண்ட காதலால் புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது அவரது முகம் சாக்லேட்டைப் பற்றிப் பேசும் குழந்தையின் முகம் போலத்தான் தோற்றமளிக்கும்.
கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், டோராண்டோ பல்கலைக்கழக தெற்காசியக் மையமும் இணைந்து வழங்கும் 2005-ஆம் ஆண்டுக்கான 'இயல் விருது' ஐயருக்கு வழங்கப்படுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவருக்குக் கிடைக்கும் C$1,500 ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்பதையும் நான் அறிவேன். கையில் உள்ள காசைப் பிறருக்கெனப் புத்தகம் வாங்கச் செலவிடுவதில் அவர் சமர்த்தர் ஆயிற்றே!
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
15 hours ago
நல்ல பதிவும் அறிமுகமும் பத்ரி. கொஞ்சம் நேரடியாக பேசுவதுபோல இருக்கிறது நடை. நன்றிகள்!
ReplyDeleteபொதுவாக பெரிய விருதுகள் கிடைத்த ஒருவரைப் பற்றி எழுதும் குறிப்புக்கள் எனக்கு ரொம்ப போரடிக்கும். ( தெரிந்த விஷயங்களையே எழுதுவார்கள்.) ஐயரைப் பற்றிய இந்தக் குறிப்பு, இரா.முவின் தினமணிக் கட்டுரை போன்றவை விதிவிலக்காக இருக்கின்றன. [ரமணீதரன் ரொம்ப பிசியாக இருக்கிறார் போலிருக்கிறது]. எனக்குக் கிடைக்கும் தெரிதல் இதழ்களுக்காக ஐயருக்கு, இந்த இடத்திலே நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteபத்ரி அவர்களே
ReplyDeleteஓர் ஆண்டுகளுக்குள்ளே! தமிழ் புத்தகம் படித்து தமிழ் வலைப்பதிவில் முன்னணியா? வியப்பாக இருப்பதுடன் உங்களைப் பாராட்டுகிறேன். சரி, தீடீர் தமிழ்ப் பற்றுக்கு ஏதேனும் பின்புலம் இருக்கிறதா?
பத்நாப ஐயரைப்பற்றி தீராநாதியில்(ஏப்ரல்) நேர்காணல் வந்ததும் அது காலச்சுவட்டில்(மே) திருட்டுதனமாக “தினக்குரலி”லிருந்து சுட்டு பிரசுரிக்கப்பட்டது என விமர்சிக்கப்பட்டதும் அறிந்தீர்களா? அதைப்பற்றி ஏதேனும் சிறு செய்தி கொடுத்திருக்கலாமே. ஏனென்றால் இம்மாத தீராநாதியில் அதற்கான மறுப்பு கடிதம் வரவில்லை. எதிர்வினையில் மட்டும் அ.மார்க்ஸ் அவர்கள் சிறிது தொட்டு எழுதியுள்ளார். ஆனால் அவரின் பதில்கள் உறுதியானதாக படவில்லை.
மேலும் ஈழத்தைப்பற்றி புஷ்பராஜாவின் நேர்காணலுக்கு அருணா சுந்தரராசன் அவர்களின் பதிலில் ஈழத்த்தின் போராட்ட செய்திகள் உள்ளன.
பத்நாப ஐயரிடம் தொடர்பு இருந்தால் அவரின் நேர்காணலின் உண்மை நிலைமையைப் பற்றி எழுதுங்களேன்.
ஆண்டன் பாலசிங்கம் அவர்களின் “விடுதலை” கட்டுரை தொகுப்பு புத்தகத்தின் ஒரு பிரிவான பிரபா-எம்.ஜி.ர் உறவைப்பற்றி மலேசியாவிலிருந்து வெளிவரும் செம்பருத்தி நாளிதழில் ஜனவரி2004லிருந்து பிப்ரவரி2005வரை வெளிவந்தது.
அதில் விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ர் அவர்கள் ஐந்து கோடி கொடுத்ததும், சென்னை துறைமுகத்திலிருந்து ஆயுதத்தை எடுத்து திருவான்மையூரில் கொண்டு சேர்க்க காவற்துறையை உதவிக்கு அனுப்பியதையும் சுவைப்பட விவரித்துள்ளார்.
விரைவில் பிரபா-ராஜிவ் உறவைப்பற்றி விரைவில் வெளிவருவதாக அறிகிறோம். பார்க்க: www.semparuthi.com/x
புமு.சுரேசு
மலேசியா.
Prakash,
ReplyDeleteSo you guys really get 'Therithal'?
Iyer had asked me if you guys are getting it, so many times. :(
I hope other friends are also receiving copies.
Will write later Prakash.
Thanks for sharing your article Badri
பத்ரி அவர்களே தங்களைச் சந்தித்த இனிமையான அனுபவம் பற்றி ஐயர் என்னிடம் சொல்லியிருக்கிறார்.புத்தகங்களின் தரம் பற்றிய ஐயரின் பிரக்ஞை உங்களைப் போன்ற பதிப்பாளர்களுக்கு வழிகாட்டலாக இருக்கும் என்பது உண்மை.இந்தப் பதிவுக்கு நன்றிகள்.
ReplyDeleteசுரேஷ் தீராநதி நேர்காணலுக்கான கலாச்சுவட்டின் எதிர்வினைக்கு தீராநதி தரப்பிலிருந்து எந்தப் பதிலுமில்லை.பதில் உயிர்மையிடமிருந்து வந்திருக்கிறது.
பொறாமைப் பட வைக்கிறீர்கள் பத்ரி!
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ஐயருடனான உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. அவர் தமிழக-ஈழ இலக்கியத்துக்கு ஒரு பாலம். அப்பாலத்தின் வழி நடந்து தமிழக இலக்கியத்தை ஈழமக்கள் அனுபவிக்கும் அளவுக்கு எதிர்திசையில் நடக்காதது தமிழ் நாட்டுக்காரர்களின் 'பெரியண்ணன்' மனோபாவமா அல்லது அவர்கள் யாரோ நாம் யாரோ என்ற அசிரத்தையா? இந்த புத்தக விளையாட்டில் கூட அது வெளிப்படையாகவே தெரிந்தது.
ReplyDeleteநன்றி ஈழநாதன்.
ReplyDeleteஉயிர்மை வாங்கி படித்துவிட்டு கருத்து கூறுகிறேன்.
புமு.சுரேசு
மலேசியா
சுந்தரமூர்த்தி: ஐயர் போல ஈழ இலக்கியத்தை தமிழகத்துக்கு அறிமுகம் செய்து, தொடர்ச்சியாக அதிலேயே முனைப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்க யாருமில்லை.
ReplyDeleteஐயர் தமிழக இலக்கியத்தை ஈழத்துக்கு எடுத்துச் செல்ல இருந்த உள்நோக்கங்களில் ஒன்று தமிழகத்தில் நடக்கும் புதுமை முயற்சிகள் (அது எழுத்திலும் சரி, புத்தகத் தயாரிப்பிலும் சரி) ஈழத்தில் உள்ளோர்க்குத் தெரிய வேண்டும், அவர்கள் எக்காரணம் கொண்டும் பின்தங்கிவிடக் கூடாது என்பதுமாக இருந்தது.
ஆனால் தமிழக இலக்கிய கர்த்தாக்கள் தாம் படைப்பதுதான் இலக்கியம், பிற நாடுகளில் உள்ள தமிழர்கள் அப்படியென்ன பெரிதாக சாதித்துவிடுவார்கள் என்ற இறுமாப்பு கொண்டதால் ஒருவேளை பிற நாடுகளில் உருவாகும் தமிழ் இலக்கியங்களைக் கண்டுகொள்ளவில்லை போலும்.
இதில் வாசகர்களைக் குற்றம் சொல்லவே முடியாது. தமிழக சிற்றிதழ்களைத்தான் மொத்தமாகக் குற்றம் சொல்லவேண்டும். இப்பொழுது நிலைமை ஓரளவுக்குத் தேவலாம்.
'காலம்' போன்ற இதழ்கள் - ஈழ, (அ) புலம்பெயர்ந்த ஈழ, படைப்பாளிகளை மட்டும் தாங்கி ஒரே சமயத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும், கனடாவிலும் வெளிவருமாறு செய்யலாம். சில தமிழக சிற்றிதழ்கள் 50% இடத்தை அயலகத் தமிழ் படைப்புகளுக்காக ஒதுக்கலாம். அதிலிருந்து சில எழுத்துக்களாவது வெகுஜன இதழ்களில் நுழையும்.
அரசியல் சார்புநிலைகள், பல நேரங்களில் பிரச்னைகளைக் கொண்டுவரலாம். அரசியல் சார்பு ஏதும் இல்லாது எழுதும் முத்துலிங்கத்தின் படைப்புகள் தமிழகத்தில் பரவலாகக் கவனம் பெற்றுள்ளதை நீங்கள் பார்க்கலாம். (பிற முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துகளுக்குக் கிடைக்கும் அதே கவனத்துடன்)
பத்மநாபன் என்பது அவர் இயர் பெயர். ஐயர் என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?
ReplyDeleteஐயரவர்களைச் சந்தித்தபோது அவர் மிகவும் எளிமையான மனிதர் என்பது புரிந்தது. எனக்காகவும் அவர் சில புத்தகங்களைக் கொண்டு வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது!
ReplyDeleteநரசிம்மன் என்ற பெயரிலே எழுதியவருக்கு,
ReplyDeleteநான் அறிந்தவரையிலே பத்மநாப ஐயரை ஐயர் என்று அழைக்கின்றவர்களுக்கு அஞ்சல் எழுதும்போது, மட்டுமே ஐயர் என்று அவர் அஞ்சல்களை முடித்துக் கண்டிருக்கிறேன். மிகுதியான பேருக்கு அவர் பத்மநாபன் என்றே எழுதுவதை அறிவேன். கற்சுறா அண்ணையும் இது குறித்து விளாசியிருக்கிறார். இது பற்றி விளக்கமாக எழுதுவேன்.
//கற்சுறா அண்ணையும் இது குறித்து விளாசியிருக்கிறார்//
ReplyDeleteயாரிவர்?
//பத்மநாபன் என்பது அவர் இயர் பெயர். ஐயர் என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா?//
ReplyDeleteபடித்து வாங்கியப் பட்டங்களைச் சுமப்பது மட்டும் உயர்வானதாக்கும். ஜாதிப்பட்டங்களை ஒழித்தபிறகு படித்து, படிக்காமல் வாங்கிய பட்டங்களை சுமப்பது ஒரு பெரிய வியாதியாகிவிட்டது. பத்மநாப ஐயர், வி.ஆர். கிருஷ்ண ஐயர் போன்ற பெயர்கள் அவர்களுக்கும், அவர்களை அறிந்தவர்களுக்கும் பெயரின் ஒருபகுதி. அவ்வளவே. அது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றே.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஒருமுறை இரண்டு ஐயர்கள் போட்டியிட்டார்கள்: ஆர். வெங்கடராமன், வி.ஆர். கிருஷ்ண ஐயர். இதில் யார் ஐயர் என்று யோசித்துப் பாரும். நான் சொல்வது விளங்கும்.
கற்சுறா ஆள் விஷயகாரன் எண்டாலும், ஐயர் விசயத்திலை தென்னைத்தேள்கொட்டலுக்கு பனையிலை நெறியைத் தேடுகிறார் எண்டது என்ரை கருத்து - என்னை ஐயர் அபிமானி எண்டு சொன்னாலுஞ் சரி. கற்சுறா பிழையெண்டு சேத்துநெத்தலி நான் நிறுவிப்போட்டுத்தான் விடுவன்
ReplyDeleteசுந்தரமூர்த்தி சொன்னதாவது:
ReplyDelete||இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஒருமுறை இரண்டு ஐயர்கள் போட்டியிட்டார்கள்: ஆர். வெங்கடராமன், வி.ஆர். கிருஷ்ண ஐயர். இதில் யார் ஐயர் என்று யோசித்துப் பாரும். நான் சொல்வது விளங்கும்.||
AnionMass எ. அனோனிமாசு சொல்வதாவது:
|அப்படியாகப் போடுங்கள் அரிவாளை. இதைவிடத் தெளிவாகவும் நறுக்காகவும் வேறெந்த வகையிலும் இந்தப்பெயர்ச்சிக்கலை உதாரணம் மூலம் விளங்குறுத்தலாம் எனத் தோன்றவில்லை|
//கற்சுறா ஆள் விஷயகாரன் எண்டாலும், ஐயர் விசயத்திலை தென்னைத்தேள்கொட்டலுக்கு பனையிலை நெறியைத் தேடுகிறார் எண்டது என்ரை கருத்து - என்னை ஐயர் அபிமானி எண்டு சொன்னாலுஞ் சரி.//
ReplyDeleteஇப்போதுதான் படித்தேன். ஹ¤ம்ம்ம்ம்....என்னத்தைச் சொல்றது? எங்கயுமே பாலிடிக்ஸ¤க்கு பஞ்சமில்லை போலிருக்கிறது . லைம்லைட்டுக்கு வராதிருத்தலே, வல்லடி வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான வழி என்று என் சிற்றறிவு சொல்கிறது
ஐயன் திருவள்ளுவன் என்றால் எவ்வளவு பொருத்தமோ அதுமாதிரித்தான் இதுவும் நரசிம்மன்.யாராவது எங்காயாவது ஒரு ஓட்டைப் பல்கலைக்கழகத்தில் ஐயர் என்று பட்டம் கொடுத்தால்தான் ஏற்றுக்கொள்வீர்கள் போல.பெயரிலி இதுசம்பந்தமாக கருணாநந்தன் பதிவு பார்த்த போதே எழுதவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் நீங்கள் ஆரம்பியுங்கள்
ReplyDeleteoho...ஈழத்திலும் ஐயர்கள் உண்டோ! ஒரு இடம் விடமாட்டாஙக போல !
ReplyDeleteபுதுவை பித்தன்
மதிப்பிற்குரிய பத்மநாப ஐயரையும் விடவில்லையா மக்கள்?
ReplyDeleteஐயர் என்றால் உயர்ந்தவர் என்று பொருள் என்று எங்கோ படித்திருக்கிறேன். அவரைப் பற்றி எழுதியவர்களும், பழகிய இரா.மு/பத்ரி சொன்னதில் இருந்து அப்படி அழைக்கப்படுவதற்கு அவருக்கு முழு தகுதியுள்ளதாய் என் சிற்றறிவு சொல்கிறது. பிறந்த குலத்தைத் தவிர வேறெதும் உயர்வாகச் சொல்லிக் கொள்வதற்கு இல்லாத சில அரைகுறைகளே தெருமூலை ஜம்பம் அடித்துக் கொண்டு பிறந்த குலத்தை கெட்டியாக பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கும்போது, உண்மையிலேயே உயர்ந்தவராகிய அவருக்கென்ன..?? தாராளமாய் வைத்துக்கொள்ளட்டும்.
Brahminism is everywhere.
ReplyDeleteGREAT TO KNOW HIM! GREAT SERVICE TO TAMIL WORLD!
ReplyDelete