Saturday, June 18, 2005

மீடியா சாம்ராஜ்ஜியங்கள் உருவாவதை அரசு தடுக்குமா? - 1

ContentSutra வழியாக Business Standard கட்டுரை.

கடந்த ஒரு வருடமாகவே இந்திய மீடியா பரப்பில் பல தீவிர மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஊடக நிறுவனங்கள் பல்வேறு ஊடகங்கள் வழியான தமது சொத்துக்களை ஒருங்கிணைத்து, குவித்து, அதன்மூலம் தாம் பெறும் பலனை அதிகரிக்க முனைந்து வருகிறார்கள். முக்கியமாகக் கவனிக்க வேண்டிய நான்கு நிறுவனங்கள்
 1. ரூப்பர்ட் மர்டாக்கின் ஸ்டார்
 2. சுபாஷ் சந்திராவின் ஸீ (Zee)
 3. ஜெயின் சகோதரர்களின் (சமீர், வினீத்) டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (பென்னட் அண்ட் கோல்மன்)
 4. கலாநிதி மாறனின் சன் குழுமம்
இதில் முதலாவது ஆசாமி வெளிநாட்டவர். ஆஸ்திரேலியராகப் பிறந்து, இப்பொழுது அமெரிக்கக் குடிமகனாகி (இல்லாவிட்டால் அமெரிக்காவில் தொலைக்காட்சி சானல் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்றனர் அமெரிக்கர்கள்), சீனர் ஒருவரை இரண்டாவது மனைவியாக மணம்புரிந்தவர். உலகின் மிகப்பெரிய மீடியா முதலை. இப்பொழுது அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் இவரது நியூஸ் கார்ப் நிறுவனத்தின் மீடியா சொத்துக்கள் உலகளாவி உள்ளன. ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பாவின் பல தேசங்கள், இந்தியா சேர்ந்த ஆசியாக் கண்டத்தின் பல நாடுகள், தென்னமெரிக்கா என்று இவரது மீடியா சொத்து இல்லாத கண்டமே இல்லை எனலாம். சீனாவில் கூட நுழைந்துள்ளார். எக்கச்சக்கமான செய்திப் பத்திரிகைகள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, ஹாலிவுட்டில் சினிமா எடுக்கும் ஸ்டுடியோக்கள், புத்தகப் பதிப்பகங்கள் என்று மீடியாவின் அனைத்துத் துறைகளிலும் உள்ளார். தொலைக்காட்சி சானல்களை செயற்கைக்கோள் வழியாக விநியோகிக்கும் துறையில் பல நாடுகளிலும் மிகவும் பலமாகக் கால் ஊன்றியவர்.

இவருடைய இரண்டு மகன்களும், சீன நிகழ்கால மனைவியும் இவருக்கு உறுதுணையாக உள்ளனர். 75 வயதுக்கு மேலான இவருக்கு புற்றுநோய் வந்து அதிலிருந்து மீண்டிருக்கிறார்.

இவரது முக்கியமான பிராண்ட்கள்: ஆஸ்திரேலியாவில் சானல் 7, பல செய்தித்தாள்கள், செயற்கைக்கோள் விநியோகமான ஃபாக்ஸ்டெல். பிரிட்டனில் செயற்கைக்கோள் விநியோகமான ஸ்கை, தி டைம்ஸ், சன் போன்ற செய்தித்தாள்கள், கூடியவிரைவில் தரைவழி சானலான சானல் 5, ஐரோப்பாவின் பல நாடுகளில் செயற்கைக் கோள்வழி விநியோகம், அமெரிக்காவில் செயற்கைக்கோள் விநியோகமான டிரெக்டிவி, தொலைக்காட்சி ஃபாக்ஸ் நெட்வொர்க், ட்வெண்டியத் செஞ்சுரி பாக்ஸ் ஸ்டுடியோ, ஆசியா முழுமையிலும் ஸ்டார் டிவி நெட்வொர்க் (இந்தியா, சீனா).

இரண்டாவது ஆசாமி அரிசி வியாபாரத்திலிருந்து இப்பொழுது தண்ணீர் தீம் பார்க், பேக்கேஜிங் அட்டைகள் என்று என்னன்னவோ செய்கிறவர். ஒரு காலத்தில் இந்தியில் கொடிகட்டிப் பறந்த இவரது தொலைக்காட்சி சானல் இப்பொழுது பின்னடைவில். ஆனாலும் பல மொழிகளிலும் சானல்கள் நடத்தும் இவர் மிக முக்கியமானவர். இவரது ஸீ தொலைக்காட்சி நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம்.

இந்தியாவின் பல மொழிகளிலும் (கிட்டத்தட்ட 10க்கு மேற்பட்ட மொழிகளில்) தொலைக்காட்சிச்சேவை. இதுவரை வானொலியில் இல்லை. இப்பொழுது தைனிக் பாஸ்கர் என்னும் இந்திச் செய்தித்தாள் நிறுவனத்துடன் இணைந்து மும்பையில் DNA என்னும் ஆங்கில தினசரியை நடத்தப் போகிறார்கள்.

அத்துடன் சுபாஷ் சந்திராவின் மற்றுமொரு நிறுவனம் டிஷ் டிவி என்ற பெயரில் செயற்கைக்கோள் வழியாக தொலைக்காட்சி சானல்களை விநியோகிக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறது. சிடிகேபிள் என்னும் கேபிள் வழியாக தொலைக்காட்சி சானல்களைக் கொடுக்கும் சேவையைப் பல நகரங்களில் செய்து வருகிறது. ஸீ டெலிஃபில்ம்ஸ் இந்தியில் திரைப்படங்களை எடுக்கிறது.

மூன்றாவது ஆசாமி(கள்) சகோதரர்கள் சமீர் ஜெயின், வினோத் ஜெயின். இந்தியாவின் மிகப்பெரிய ஆங்கில செய்தித்தாளான டைம்ஸ் ஆஃப் இந்தியாவை நடத்துபவர்கள். பிற மொழிகளில் சில தினசரிகள். மிகப்பெரிய தொழில்துறை செய்திப் பத்திரிகையான எகனாமிக் டைம்ஸ். ஆங்கிலத்தில் வெளியாகும் பல பளபளப்பான இதழ்கள் (அதில் சில இப்பொழுது பிபிசியுடன் இணைந்து). ரேடியோ மிர்ச்சி என்னும் பல நகரங்களில் செயல்படும் பண்பலை வானொலிச் சேவை. சமீபத்தில் வந்துள்ள ஜூம் என்னும் தொலைக்காட்சிச் சேவை. ராய்ட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செய்தி, வணிகம் போன்றவற்றுக்கான தொலைக்காட்சிச் சேவையை அளிக்க இருக்கிறார்கள். டைம்ஸ் இண்டெர்நெட் மூலம் சுமாரான அளவிளான இணையச்சேவை, மிகப்பெரிய மொபைல் சேவை. முழுக்க முழுக்க தனியார் கைகளில் இருக்கும் நிறுவனங்கள்.

நான்காவது ஆசாமி நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான கலாநிதி மாறன். தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நம்பர் ஒன் தொலைக்காட்சிச் சேவை. தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் பண்பலை வானொலி. கோதுமை மாவு கொடுக்கும் குங்குமம் என்னும் வார இதழ். இப்பொழுதுதான் தினகரன் குழுமத்தை முழுக்க வாங்கியுள்ளதாகச் செய்தி. சில-பல எதிர்ப்புகளை மீறி கலாநிதி மாறன்+மனைவி பெயரில் நாடுமுழுதும் செயற்கைக்கோள் மூலம் தொலைக்காட்சிச் சேவைகளை வழங்கும் உரிமம் பெற்றுள்ளார். சுமங்கலி கேபிள் விஷன் என்று கேபிள் மூலம் தமிழகத்தின் பல இடங்களிலும் கேபிள் சேவை.

இவ்வளவு இருந்தாலும் இந்தியாவை முழுமையாகப் பார்க்கும்போது மேற்படி நால்வரில் கலாநிதி மாறன் நான்காவது நிலையில்தான் உள்ளார் (மொத்த விற்பனையில், மொத்த லாபத்தில், எத்தனை மக்களைச் சென்றடைகிறார் என்பதில்).

ரூப்பர்ட் மர்டாக்குக்கு இந்தியாவில் பல காரியங்களைச் செய்ய முடியாது. இப்பொழுதுள்ள சட்டங்கள் வெளிநாட்டவருக்குப் பாதகமாக உள்ளன. ஆனால் அவர் முடிந்தவரை சட்டங்களை வளைத்து ஏதோ செய்துவருகிறார். நியூஸ் தொலைக்காட்சிகளை நடத்த வெளிநாட்டாருக்கு உரிமை கிடையாது. இந்திய நிறுவனத்தில் அதிகபட்சம் 26% பங்குகளை மட்டுமே வெளிநாட்டினர் வைத்திருக்கலாம். அதனால் ஆனந்த பஜார் பத்ரிகா குழுமத்தின் அவீக் சர்க்காருடன் இணைந்து ஸ்டார் நியூஸ் சானலை நடத்துகிறார். வானொலி நிலையங்களை இதுநாள் வரை வெளிநாட்டு நிறுவனம் நடத்த முடியாது. (இப்பொழுது 26% வரை பங்கு தரலாம் என்று முடிவு செய்துள்ளார்கள்.) எனவே மிட்டல் நிறுவனத்துடன் இணைந்து அவர்களை ரேடியோ சிட்டி என்னும் பெயரில் வானொலி நிலையங்களைத் தோற்றுவிக்கச் செய்து அதற்கு புரோகிராம்கள் வழங்குகிறோம் பேர்வழி என்று அதனை முழுமையாக நடத்துபவர் மர்டாக். செயற்கைக்கோள் வழியான வீட்டுக்கே வரும் தொலைக்காட்சி விநியோகம் செய்ய டாட்டா குழுமத்துடன் ஒரு ஜாயிண்ட்-வென்ச்சர். அதிலும் மர்டாக் பெயரளவில் 26% வைத்திருந்தாலும் நடத்தப்போவது அவர்தான். இப்படியே இருந்துகொண்டே கொஞ்சம் கொஞ்சமாக விதிகள் தளர்த்தப்படும்போது தனது அதிகாரத்தை விரிவுபடுத்த அவர் எண்ணுகிறார்.

அடுத்து கலாநிதி மாறன் பற்றிப் பார்ப்போம்.

[தகவல் பிழைகள் சில சரி செய்யப்பட்டுள்ளன.]

6 comments:

 1. ஊடக சாம்ராஜ்யங்கள் உருவாவது எதற்குமே நல்லதல்ல... சரியான செய்திகள் சரியான படி சென்றடையாது... இதன் விளைவை தமிழகம் கண்கூடாக கண்டும் அனுபவித்தும் கொண்டிருக்கின்றது... இது தொ.கா., வானொலிக்கு மட்டுமல்ல பத்திரிக்கைகளுக்கும் பொருந்தும்

  வெளிநாட்டு முதலீடுகள் ஊடகத்துறையில் ஊடுறுவ விட்டால் கடும் கேடு நெருக்கடி காலங்களில் விளையும்

  ReplyDelete
 2. --சுபாஷ் சந்திராவின் ஸீ (Zee)

  --சமீபத்தில் வந்துள்ள ஜூம் என்னும் தொலைக்காட்சிச் சேவை
  Zee = ஸீ
  Zoom = ஸூம்? :-)

  I believe the content on Zoom TV is from Entertainment Tonight(ET) aka western 'kisu kisu' channel :-)

  ReplyDelete
 3. என்னதான் சன் குழுமம் நாலாவதாக இருந்தாலும் அவங்ககிட்ட மட்டும்தான் தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சர் இருக்காங்க. இவங்க ஆட்சி முடியறதுக்குள்ளே நெம்பர் ஒன் ஆகிடுவாங்க! அப்புறம் சோனி கூட வளர்ந்துவராங்க போலிருக்கே.

  ReplyDelete
 4. இந்த கட்டுரைத்தொடருக்கு நன்றி. மீடியா சாம்ராஜ்யங்கள் உருவாவது இந்த பத்தாண்டுகளில் ஒரு முக்கியமான நிகழ்வு என்று தோன்றுகிறது. இதில் நடக்கும் வெளிப்படையான அரசியல் கலப்பு/தலையீடு அதிர்ச்சியாக உள்ளது. இந்த விஷயத்தின் மேல் நுகர்வோர் கண்காணிப்பு இன்னும் தீவிரமாக இருக்க வேண்டும். இல்லாவிடில் பத்திரிக்கை தர்மத்தை மீறி நடப்பது எல்லா ஊடகங்களுக்கும் வாடிக்கையான விஷயமாகி விடும். சகிக்க முடியாமல் இருக்கும்.

  ReplyDelete
 5. IPTV and triple play may change the level playing field. But it may not happen overnight in India.

  ReplyDelete
 6. //இதில் முதலாவது ஆசாமி வெளிநாட்டவர். ஆஸ்திரேலியராகப் பிறந்து, இப்பொழுது அமெரிக்கக் குடிமகனாகி (இல்லாவிட்டால் அமெரிக்காவில் தொலைக்காட்சி சானல் நடத்த அனுமதிக்கமாட்டோம் என்றனர் அமெரிக்கர்கள்)//

  கவனிக்க. ஆனால் தமிழ்நாட்டில் தமிழனைத் தவிர்த்து யார் வேண்டுமானாலும் வாழலாம்.

  புமு.அகரன்

  ReplyDelete