Wednesday, June 08, 2005

சங்கீத் நாடக் அகாடெமி குழப்பங்கள்

சங்கீத் நாடக் அகாடெமி தலைவராக இருந்த ஒடிஸ்ஸி நாட்டியக் கலைஞர் சோனால் மான்சிங் பதவியிலிருந்து தூக்கப்பட்டு காங்கிரஸ் அரசியல்வாதி ராம் நிவாஸ் மிர்தா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சங்கீத் நாடக் அகாடெமி என்பது தில்லியில் இந்தியாவின் நாட்டிய, இசை, நாடகக் கலைகளை வளர்க்கும் நிறுவனமாக அமைக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் இருந்த சமயம் சோனால் மான்சிங் இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கும் துணைத்தலைவராக இருந்த கே.என்.பணிக்கருக்கும் இடையே நடந்த சச்சரவில் பணிக்கர் பதவி விலகினார். தொடர்ந்து பணிக்கருக்கு ஆதரவாக பாலமுரளிகிருஷ்ணா விலகினார். இன்னமும் சிலர் சோனால் மான்சிங் பதவியில் தொடர வேண்டும் என்றனர். இதுபற்றிய விஷயங்கள் முன்னணி செய்திப் பத்திரிகைகளில் இடம் பெறாவிட்டாலும் அவ்வப்போது தெஹெல்காவில் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

இதற்கிடையில் சென்ற ஆண்டுக்கான சங்கீத் நாடக் அகாடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டன. விருது பெற்றவர்களில் ஒருவர் இந்திரா பார்த்தசாரதி. இந்த விருது வழங்கும் விழா மே மாதம் நடைபெறுவதாக இருந்தது. விருது பெற்றவர்களுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விருது வழங்குவதாக இருந்தது. ஆனால் சோனால் எதிரி கோஷ்டியினர் அந்த விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு (குடியரசுத் தலைவருக்கும் சேர்த்து!) கறுப்புக்கொடி காட்டுவோம் என்று பயமுறுத்தியிருக்கின்றனர். இதனால் குடியரசுத் தலைவர் மாளிகை விழாவை காலவரையின்றி தள்ளிப்போட அறிவுரைத்தது.

சோனால் மான்சிங்கின் நாள்கள் மிகவும் குறைவு என்பது அப்பொழுதே தெரிந்துவிட்டது. நேற்று ராம் நிவாஸ் மிர்தா அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். கலை இலக்கிய அமைப்புகளில் அரசுத் தலையீடு கூடாது, அரசியல்வாதிகள் கூடாது என்று ஒருசாரார் சொன்னாலும், கலைஞர்கள் தாமே பொறுப்பேற்று நடத்தும் அமைப்புகளில் அரசியல்வாதிகளை விட மோசமாக நடந்துகொள்கிறார்கள்.

2 comments:

  1. //கலைஞர்கள் தாமே பொறுப்பேற்று நடத்தும் அமைப்புகளில் அரசியல்வாதிகளை விட மோசமாக நடந்துகொள்கிறார்கள்//

    சத்தியமான வார்த்தைகள். இது அனைத்து துறை கலைஞர்களுக்கும் பொருந்தும்

    ReplyDelete
  2. இதே கதை தான் சென்சார் போர்டு தலைமைக்கும் நடந்தது. அனுபம் கெர் பாரதிய ஜனதாவால் நியமிக்கப்பட்டவர். காங்கிரஸ் பொறுப்பேற்றவுடன், அவரை நீக்கிவிட்டு, ஷர்மிளா தாகூர் என்று நினைக்கிறேன், நியமித்தனர். இதில் கூத்து என்னவென்றால், அனுபம் கெர்ரினை பதவியிறக்க சொன்ன காரணம், அவருக்கு நேரமில்லை, அவர் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்வதற்காக வெளிநாடு செல்கிறார் என்கிற சப்பைக் கட்டினை சொன்னார்கள். ஆனால், புதிதாக நியமிக்கப்பட்ட ஷர்மிளா தாகூர், பதவியேற்க வரவேயில்லை. அவர் லண்டனில் இருந்தார். பின் அவர் பொறுமையாக வந்த பின்புதான் பதவி மாற்றம் நடந்தது.

    கலைஞர்கள் நல்ல நிர்வாகிகளாக இருக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம்.

    ReplyDelete