Tuesday, June 28, 2005

இணையத்தில் புத்தகங்கள் பற்றிய தகவல்கள்

ரவி ஸ்ரீநிவாஸ் தன்னுடைய பதிவில் பல முக்கிய விஷயங்களைத் தொட்டுப்பேசியிருக்கிறார்.

சந்தர்ப்பவசமாக நேற்று மாலை ஓர் இடதுசாரி நண்பருடன் இதுபற்றி நானும் பேசிக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் நூலகம் சார்ந்த ஓர் இயக்கம் சரியான முறையில் வரவேண்டும். வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் உபயோகமாக, இணையத்தைப் பயன்படுத்திப் பல காரியங்களைச் செய்யமுடியும் என்றெல்லாம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். ரவியின் கருத்துகள்:
  1. தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும்.
  2. அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் புத்தகங்கள் குறித்த தகவல்கள், மதிப்புரைகளைக் கொண்ட ஒரு வலைப்பதிவாவது இருக்க வேண்டும்.
  3. மேலும் இப்போது வெளியாகும் நூல்களை மின் நூல்களாகவும் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை பதிப்பாளர்களும், எழுத்தாளர்களும் ஆராய வேண்டும்.
அத்தனையும் முக்கியமான, செய்யவேண்டிய விஷயங்கள். எப்படிச் செய்வது, யார் செய்யலாம் என்பது பற்றி நேற்று மாலை நாங்கள் பேசியதை, கீழே சுருக்கமாகத் தருகிறேன்.

தமிழில் சுமார் 500 பதிப்பகங்கள் உள்ளன. இதில் சுமார் 50தான் வருடம் முழுவதும் புத்தகங்கள் வெளியிடுகின்றன. மற்றவை ஜனவரி புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு 10-15 புத்தகங்கள் தயார் செய்தால் பெரிய விஷயம். இந்த ஐநூறில் சொந்தமாகப் புத்தகங்கள் பதிப்பிக்கும் எழுத்தாளர்களும் அடங்குவர். பாடப்புத்தகங்கள், கோனார்/வெற்றி போன்ற கையேடுகள் தயாரிப்போரை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

எனவே இந்த முக்கியமான ஐம்பது பதிப்பாளர்கள் மாதாமாதம் தாம் வெளியிடும் புத்தகங்கள் பற்றிய முழுத்தகவலைக் கொடுத்தால், பிற சிறு பதிப்பாளர்கள் தாமாகவே வந்து இணைந்துகொண்டு தமது தகவல்களை அளிக்க முன்வருவர். ஆனால் இந்த ஐம்பது பெரிய ஆசாமிகளிடம் தகவல் வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது. சிலர் பேசவே மாட்டார்கள். பபாஸி என்றொரு #$^%%^*&^ பதிப்பாளர் சங்கம் உள்ளது. அது இதுபோன்ற நல்ல காரியங்களில் ஈடுபட விரும்புவதில்லை.

இந்த விஷயத்தை ஒரு பதிப்பாளர் தொடங்கினால் என்னவோ ஏதோ என்று சந்தேகத்துடன் பிற பதிப்பாளர்கள் பார்க்க நேரிடும். எனவே இது ஒரு வாசகர் இயக்கமாகத்தான் ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்காக சில தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டுவதாகச் சொல்லியிருக்கிறார் நண்பர். ஒவ்வொரு மாதமும் பதிப்பாளர்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து அவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பது இவர்கள் வேலையாக இருக்கும். என்னென்ன தகவல்களைச் சேகரிப்பார்கள்?
  • புத்தகத்தின் பெயர்
  • ஆசிரியர் பெயர்
  • பதிப்பின் பெயர்
  • பக்கங்கள்
  • விலை
  • அட்டைப்படம் (ஸ்கேன் செய்யப்பட்டது, குறிப்பிட்ட அகலம், உயரம் பிக்செல்களில்)
  • பின்னட்டைச் சுருக்கம் (பதிப்பாளரே வெளியிடுவது)
  • ISBN எண் (இருந்தால்)
சேமித்த தகவல்களை இணையத்தில் ஒரு தளத்தில் சேர்த்ததும், அங்கு இன்னமும் சில தகவல்களைச் சேர்க்கவேண்டும் (எந்தத் துறையைச் சேர்ந்தது). பின் இந்தத் தளத்தில் பல்வேறு RSS ஓடைகளை உருவாக்கலாம். வேண்டுபவர்கள் இந்த ஓடைகளைப் பின்பற்றி புதிதாக வந்திருக்கும் புத்தகங்கள் பற்றி முதல் தகவல் அறிந்து கொள்ளலாம்.

இணையம் பற்றிய புரிதல் இருக்கும் பதிப்பகங்கள் (அதாவது இரண்டு அல்லது மூன்று பேர்) நேரடியாகவே இந்தத் தகவல்களை இணையம் மூலமாகவே சேர்த்துவிடலாம். அதை ஒரு தள நிர்வாகி பார்த்து, அனுமதி தந்தவுடன் தரவுத்தளத்தில் தகவல்கள் சேர்ந்துவிடும். சிறு பதிப்பாளர்கள், தனியார் ஆகியோரும் இந்த வழியாக புத்தகங்களைச் சேர்க்கமுடியும்.

பதிப்பில் இல்லாத புத்தகங்களை, அப்புத்தகங்களை வைத்திருக்கும் வாசகர்கள் தாங்களே சேர்க்கலாம் - இந்தப் புத்தகம் பதிப்பில் இல்லை என்ற தகவலுடன்.

இந்த முதல்படிக்கு அடுத்தபடியாக, புத்தகங்களுக்கான அறிமுகவுரை எழுதுவது. இதற்கு புத்தகங்களை இலவசமாக வழங்க பதிப்பாளர்கள் முன்வரவேண்டும். அது உடனடியாக நடக்காது என்று தோன்றுகிறது. அதனால் முதலில் தனி ஆர்வலர்கள் தாம் காசு கொடுத்து வாங்கும் புத்தகங்களை அறிமுகப்படுத்தி சிறு பதிவுகள் எழுதினால், அதையும் மேற்படி தரவுத்தளத்தில் சேர்த்து வைக்க முடியும். IMDB போன்றோ, கிரிக்கின்ஃபோ போன்றோ நாளடைவில் தானாகவே ஒரு தளம் பிறக்கும்.

இந்த முயற்சியில் தன்னார்வலர்களாக ஈடுபட விரும்புவோர் என்னிடம் தொடர்பு கொள்ளலாம். இது எந்தப் பதிப்பகமும் நேரடியாக ஈடுபடாத ஒரு தன்னார்வல இணையம் சார்ந்த அமைப்பாக இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

மூன்றாவது விஷயம் - மின் நூல். நான் கிழக்கு பதிப்பகம் ஆரம்பித்தது முதற்கொண்டே மின் நூல்கள் பற்றி யோசித்து வருகிறேன். சரியான, எளிதான தொழில்நுட்ப மாதிரியும், கருவிகளும் எனக்குக் கிடைக்கவில்லை. விவரம் தெரிந்தவர்கள் சரியான வழியைக் காட்டினால் சவுகரியமாக இருக்கும். தமிழோவியம் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த சில மின் நூல்கள் எனக்கு முழு நிறைவைத் தரவில்லை. அங்கு செயல்பட்ட DRM முறை திருப்திகரமாக எனக்குத் தோன்றவில்லை. (இது தமிழோவியம் மீதான குற்றச்சாட்டு அல்ல. நண்பர் கணேஷ் சந்திரா தனக்கு சாத்தியமான நுட்பத்தை மேற்கொண்டிருந்தார். ஆனால் நான் எதிர்பார்ப்பது இன்னமும் திண்ணமான, உயர்வான முறை.) சரியான நுட்பம் கிடைத்தால் நாளையே எங்களது அத்தனை புத்தகங்களையும் மின் நூல்களாக்கி வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

அதைப்போலவே, இந்த முறை சரியாக இயங்கினால், பல பழைய புத்தகங்களையும் - அதாவது பலரும் பதிப்பிக்கத் தயங்கும் புத்தகங்களையும் - மின் நூல் வடிவில் விற்க முயற்சி செய்யலாம்.

====

ரவி எழுப்பியுள்ள பிற விவாதங்கள் பற்றியும் எழுத வேண்டும் (பாரதி புத்தகாலயம், இடதுசாரிகள் etc.) - விரைவில்...

23 comments:

  1. மிக மிக நல்ல யோசனைகள். ஒன்று கூடிவது என்பது தானே பிரச்சனை? முயலுங்கள். படைப்புலகம் தரம் உயரட்டும்.

    ReplyDelete
  2. நல்ல யோசனை பத்ரி. செயல்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. இது ரவியின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம்..


    //தமிழில் இப்போது ஏராளமான நூல்கள் வெளியாகின்றன.. இவை குறித்த தகவல்கள் இணையத்தில் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. அப்படி கிடைக்க யாராவது ஏற்பாடு செய்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும். அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது //

    ஆமாம், இது தமிழில் வரும் நூட்களைப் பற்றிய எல்லாம் விவரங்களையும் தரும் வண்ணம் இருக்கவேண்டும். பிறகு கிழக்கு பதிப்பகம் போன்ற இணைய அறிவு நிரம்பியர்கள் பணியாற்றும் பதிப்பகம் அல்லது பதிப்பகங்கள் முன்னின்று இணையத்தில் புத்தகங்களை, அவற்றின் விவரங்களை, விமர்சனங்களைத் கிடைக்கச்செய்வதன் பலன்கள், அதற்கான வழிமுறைகள், பதிப்பக உலகமும், படிப்போரும் இணையத்தில் இணையும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் மற்ற தமிழ் பத்திப்பகத்தார்களுக்கு ஒரு சிறு பயிற்சிப்பட்டறையை அளித்து ஒன்றுதிரட்டினால் அதனால் மிக்க பயன் ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இவ்விவரங்களை பெரும்பாலான தமிழ் பதிப்பகங்கள் அறியமாட்டார்கள். அல்ல்து ஒவ்வொருவரும் அறியவரும் போது ஒவ்வொரு வழியப்பின்பற்றுவார்கள். அது இணையத்தமிழ் மாதிரி ஒவ்வொரு முறையில் இருக்கும். அதை இப்போதே ஒருங்கிணைத்தால் தவிர்க்கலாம்

    ReplyDelete
  4. மிகவும் நல்லதும் அவசியமானதுமான முயற்சி.
    என்னால் ஏதாவது உதவி செய்ய முடியும் பட்சத்தில், அது உங்களுக்குப் பயன்படுமாயின் அல்லது தேவைப்படுமாயின் மனமுவந்து செய்கிறேன்.

    ReplyDelete
  5. மின் புத்தகங்கள் குறித்து:

    உங்கள் காமதேனு தளத்தையே நீட்டி, பணம் செலுத்தி வாங்கிய புத்தகங்களை, பயனர்கள் அங்கயே திறந்து படிக்குமாறு வடிவமைக்கலாம். Flash பக்கங்களாக புத்தகங்களை உருவாக்கினால் அவைகளை copy-paste செய்யும் சாத்தியமில்லாது வழங்க இயலும். ஆக, காப்புரிமை மீறப்படும் அபாயமுமில்லை.

    மேலும், கணிமையின் செயல்திறன்களையும் சாதகமாக்கிக் கொண்டு எழுத்தளவு மாற்றம், எழுத்துரு மாற்றம், பக்கத்தை நினைவு கொள்ளுதல் (like bookmark - அடுத்த முறை பயனர் login செய்யும்போது விட்ட இடத்திலிருந்து தொடரும் வசதிக்காக), ஆகிய அம்சங்களுடன் அச்சுப் புத்தகத்தை விட சுகமானதொரு வாசிப்பனுபவத்தையும் வழங்கலாம்.

    ஆனால் இதனைப் பயனிப்பதற்கு இணையத்துடன் தொடர்ந்த இணைப்பு இருக்க வேண்டும். அகலப்பாட்டை பரவிவரும் இந்நாளில் அது ஒரு பெரிய கவலையில்லை என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  6. VoW: நீங்கள் சொல்வது போன்ற மின்புத்தகம் அவ்வளவு சரியானதாகத் தோன்றவில்லை.

    நான் எதிர்பார்ப்பது இதுதான்:

    1. PDF சரியில்லை. அதை எளிதாக உடைக்க முடியும்.
    2. Flash, இணையத்திலேயே இருந்தவாறு படித்தல்... வசதியானதாக இருக்காது என்று தோன்றுகிறது.
    3. என்னமாதிரி இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்: முதலில் ஒரு மென்பொருள் படிப்பானை ஒருமுறை இறக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அதுவே DRM வேலைகளைச் செய்யும். ஒவ்வொரு புத்தகத்துக்கும் பணம் கட்டி, கீழே இறக்கிக்கொண்டால், இந்தப் படிப்பான் மென்பொருளுக்குள் வாங்கிய புத்தகத்தின் உரிமம் சென்று உட்கார்ந்துகொள்ளும். ஒருமுறை புத்தகத்தை இறக்கிக்கொண்டால் எவ்வளவுமுறை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அந்தக் கணினியில் மட்டும்தான் செய்யமுடியும்.

    இவ்வளவு கெடுபிடிகள் வேண்டுமா என்று தெரியவில்லை. பொதுவாக அச்சில் உள்ள புத்தகத்தை இரவல் தருவது சகஜம். ஆனால் மின்புத்தகம் என்றால் அது இரவலுக்கு இருபடி மேலே போய் செலவில்லாமல் நகலெடுப்பதைப் போன்று முடியும் என்பதாலேயே பலரும் பயப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

    நான் audible.com தளம் மூலம் ஒலிப்புத்தகங்களை வாங்கிப் படிக்கிறேன். அந்த முறை எனக்குப் பிடிக்கிறது. அதைப்போல மின்புத்தகங்களுக்கு ஒரு வழி வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதைச் செய்வது வேறோர் இடைத்தரகராக இருந்தாலும் பரவாயில்லை. நான்தான் செய்யவேண்டும் என்று இல்லை.

    அந்தத் தரகரின் வழியாக புத்தகத்தைத் தயார் செய்து விற்க நான் ரெடி.

    ReplyDelete
  7. //அது போல் இணையத்தில் தமிழ் புத்தகங்களுக்கான ஒரு மதிப்புரை இதழுக்குத் தேவை இருக்கிறது என்று தோன்றுகிறது. அல்லது குறைந்தபட்சம் புத்தகங்கள் குறித்த தகவல்கள், மதிப்புரைகளைக் கொண்ட ஒரு வலைப்பதிவாவது இருக்க வேண்டும்.//

    பத்ரி - வலைப்பதிவு ஆரம்பிப்பது அவ்வளவு சிரமமில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் வெவ்வேறு இடங்களில் பதிப்பிக்கப்படும் மதிப்புரைகளை ஒரு இடத்தில் தொகுத்தாலே பெரும் உபயோகமாக இருக்கும். சினிமா குறித்த வலைப்பதிவுகளைத் தொகுத்து வருவதுகூட பெரிய சிரமமான வேலையாகத் தெரியவில்லை - புத்தக தகவல்கள்/மதிப்புரைகளுக்கு அப்படியொரு வலைப்பதிவையாவது (குறைந்தபட்சம்) யாரேனும் கொண்டுவருவது அவ்வளவு சிரமமான ஒன்றாக இருக்காதென்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் மதிப்புரைகளைத் "தொகுப்பதற்காவது" ஒரு வலைப்பதிவு தொடங்கப்பட்டால் நன்றாகத்தான் இருக்கும். weblogs.us போன்ற தளங்களில் உள்ள வலைப்பதிவுகளில் யூனிகோடு தமிழ் தேடலும் (search) நன்றாகவே இருப்பதுபோலத் தோன்றுவதால், குறிப்பிட்ட புத்தகத்தின் பெயரை/ஆசிரியர் பெயரை இட்டுத் தேடுவதும் படிப்பவர்களுக்கு சுலபமாகவே இருக்கும்.

    ReplyDelete
  8. அட: சினிமா குறித்த வலைப்பதிவு என்பதற்குத் தவறான சுட்டியைக் கொடுத்துவிட்டேன் - சரியானது இதோ

    ReplyDelete
  9. /எனவே இந்த முக்கியமான ஐம்பது பதிப்பாளர்கள் மாதாமாதம் தாம் வெளியிடும் புத்தகங்கள் பற்றிய முழுத்தகவலைக் கொடுத்தால், பிற சிறு பதிப்பாளர்கள் தாமாகவே வந்து இணைந்துகொண்டு தமது தகவல்களை அளிக்க முன்வருவர். ஆனால் இந்த ஐம்பது பெரிய ஆசாமிகளிடம் தகவல் வாங்குவது என்பது மிகுந்த சிரமமானது./
    இந்தாம் (INTAMM) நூலகம் ஓரளவுக்கு இதனைச் செய்து வந்தது. ஆனால், தற்போது, இயக்கமில்லை.

    ReplyDelete
  10. மாண்ட்ரீஸர்: IMDB போன்ற தளங்கள் இருப்பதனால், வெறும் விமர்சனங்கள் அடங்கிய வலைப்பதிவைச் செய்வது வசதியாகப் போகிறது. பொதுவாக வலைப்பதிவுகளில் புத்தக விமர்சனம் எழுதுபவர்கள் புத்தகங்கள் பற்றிய முழு விவரங்களைத் தருவதில்லை. புத்தக அட்டைகள் இருப்பதில்லை. அவற்றையும் நாம் தர முயற்சி செய்யவேண்டும்.

    மற்றபடி விமர்சனம்/மதிப்புரை/அறிமுகம் தர நிறைய பேர்கள் தேவைப்படும். அவை இல்லாவிட்டாலும் புத்தகம் பற்றிய குறைந்தபட்சத் தகவலாவது கொடுப்பதுதான் முதல் நோக்கமாக இருக்கவேண்டும்.

    ரமணி: நீங்கள் குறிப்பிட்ட தளத்தை நான் பார்த்திருக்கிறேன். நாம் செய்யவேண்டியது நிறைய. அவர்களுடனும் நான் தொடர்புகொள்கிறேன். இணைந்து என்ன செய்யமுடியும் என்று பார்ப்போம்.

    ReplyDelete
  11. //3. என்னமாதிரி இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்: முதலில் ஒரு மென்பொருள் படிப்பானை ஒருமுறை இறக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். அதுவே DRM வேலைகளைச் செய்யும். ஒவ்வொரு புத்தகத்துக்கும் பணம் கட்டி, கீழே இறக்கிக்கொண்டால், இந்தப் படிப்பான் மென்பொருளுக்குள் வாங்கிய புத்தகத்தின் உரிமம் சென்று உட்கார்ந்துகொள்ளும். ஒருமுறை புத்தகத்தை இறக்கிக்கொண்டால் எவ்வளவுமுறை வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அந்தக் கணினியில் மட்டும்தான் செய்யமுடியும்.//

    பத்ரி, நீங்கள் குறிப்பிடுவது போன்ற நுட்பத்தை Microsoft Reader வழங்குகிறது. MS Passport கணக்கை வைத்து DRM செயல்பாடு நடைபெறுகிறது. ஆனால் பொதுவாக MS நுட்பங்களிலுள்ள ஓட்டைகளைக் கணக்கில் கொண்டால், இது எவ்வளவு நம்பகமானத் தீர்வென்று தெரியவில்லை.

    உங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் நானளித்த தீர்வுக்கும் அதிக வேறுபாடில்லை, 'தொடர்ந்த இணைய வசதி' என்ற ஒரு நிபந்தனையைத் தவிர. மின்புத்தகங்கள் படிக்குமளவு மேம்பாடடைந்தவர்கள் இந்த அடிப்படை வசதியைப் பெற்றிருப்பார்களென எதிர்பார்க்கலாமென்று நினைக்கிறேன். வேறெந்த வகையிலும் வசதிக் குறைவில்லை என்பதே என் எண்ணம். பயனர் கணக்கை வைத்துக் கொண்டு ஒரு பயனர், தான் வாங்கிய புத்தகங்களை, எவ்வளவு முறை வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் (கைக்கணினி, மடிக்கணினி ஆகியவற்றிலிருந்தும்) படிக்கலாம், அவை இணையத்திலேயே இருப்பதால்.

    ReplyDelete
  12. நல்ல யோசனை. நானும் சில சமயங்களில் யோசித்ததுண்டு. பத்ரி, இந்த வார இறுதியில் தொடர்பு கொள்கிறேன். இதைப் பற்றிப் பேசுவோம்.

    ReplyDelete
  13. அவசியமானதுமான முயற்சி.

    ReplyDelete
  14. மிகவும் தேவையான முயற்சி. இதன் மூலம் பற்பல வழிகளில் தகவல் விரிவு சாத்தியமாகும்.
    என்னால் உங்கள் முயற்சிக்கு ஏதேனும் செய்ய இயலுமானால் மகிழ்ச்சி.

    ReplyDelete
  15. பத்ரி - இதைப்பற்றிய ஒரு சோதனை முயற்சியை என் இன்றைய பதிவில் எழுதியிருக்கிறேன்.

    http://www.domesticatedonion.net/blog/?item=539

    ReplyDelete
  16. பத்ரி, நல்ல திட்டம். என்னாலும் உதவ முடிந்தால் கலந்து கொள்கிறேன். கொஞ்சம் சம்பந்தப்பட்ட என் முயற்சி இங்கே.

    ReplyDelete
  17. நல்ல முயற்சி! என்னால் ஏதேனும் உதவ முடிந்தால் மகிழ்ச்சி. அண்மைக் காலமாகத் தமிழ்ப் பதிப்பாளர்களின் முகவரிகளைத் திரட்டிக்கொண்டுள்ளேன் (150-200 வரை இருக்கும்). அது பயன்படுமெனில் தெரிவியுங்கள்.

    -இராதாகிருஷ்ணன்

    ReplyDelete
  18. மாண்ட்ரீஸர்
    //பத்ரி - வலைப்பதிவு ஆரம்பிப்பது அவ்வளவு சிரமமில்லை என்று நினைக்கிறேன். இணையத்தில் வெவ்வேறு இடங்களில் பதிப்பிக்கப்படும் மதிப்புரைகளை ஒரு இடத்தில் தொகுத்தாலே பெரும் உபயோகமாக இருக்கும்.//

    இதையே உங்களுடைய சினிமா மதிப்புரை ஆவணக் களஞ்சியத்தை உதாரணமாகக் காட்டி புத்தக விளையாட்டு கலாட்டாவின் போது என் பதிவில் எழுதினேன். இதை நீங்களே செய்யலாம் சிரமமில்லையென்றால். எடுபிடி வேலைக்கு வேண்டுமானால் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள்.

    சமீபத்தில் டிஜேவும் (பாமாவின் 'வன்மம்' நாவல்), கறுப்பியும் (யூமா வாசுகியின் 'ரத்த உறவு' நாவல் மதிப்புரைகள் எழுதியுள்ளார்கள். அங்கிருந்து ஆரம்பிக்கலாம். ஈழநாதன் இதுபோன்ற முயற்சியை தன்னளவில் ஏற்கனவே செய்துள்ளார் http://padippakam.blogspot.com/.அவர்கூட எல்லோரும் எழுதும் மதிப்புரைகளைத் தொகுக்கும் வேலையைச் செய்யலாம்.

    என் பதில் எழுதியது:
    "3. அனைவரும் சும்மா பட்டியல் வெளியிடாமல் அவ்வப்போது தாங்கள் படித்த நூல்களின் மதிப்புரையை (விமர்சனம் அல்ல) எழுதலாம். அவற்றை மாண்ட்ரீஸர் திரைப்பட மதிப்புரைகளைத் தொகுப்பது போல ஓரிடத்தில் யாராவது தொகுத்து வைக்கலாம்."

    ReplyDelete
  19. பத்ரி, கூகிள் பிரிண்ட் சேவையை இதற்கு பயன்படுத்த முடியுமா..?

    http://vanampadi.blogspot.com/2005/06/blog-post_30.html

    ReplyDelete
  20. "கம்ப்யூட்டரில் படிக்கலாம் ஒரு லட்சம் புத்தகங்கள். தனி வெப்சைட் ஆரம்பிக்கிறது கர்நாடக் அரசு. "

    இது இன்றைய தினமலர் தினசரியில் கண்ட செய்தி.

    தமிழ் நாட்டில் இதுப்போல் அரசு செய்தாலென்ன. செய்வார்களா?

    சுட்டி: http://www.dinamalar.com/2005july04/ind1.asp

    =இஸ்மாயில் கனி

    ReplyDelete
  21. தங்களது வலையம் அருமை....நான் கிழக்கு பதிப்பக புத்தகங்களின் தீவிர ரசிகன்...Kizhakku Pathippagam Orkut Community:http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=49824800

    வருகை தாருங்கள்..வளப்படுத்துங்கள்...

    ReplyDelete
  22. புத்தகம் பேசுது இது போன்ற ஒரு முயற்சியில் உள்ளது. ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தன்று துவங்க உள்ளது. அனைத்து பதிப்பகங்களும் அவர்களே அப்லோட் செய்யும் வகையில் அல்லது உதவி கேட்டால் செய்யும் வகையில் இயங்க உள்ளது.
    nagaraj, thamizhbooks@gmail.com

    ReplyDelete