Tuesday, June 14, 2005

விஸ்வநாதன் - ராமமூர்த்தி பாராட்டு விழா

ஞாயிறு மாலை 6.00 மணிக்குத் தொடங்கி மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன், T.K.ராமமூர்த்தி ஆகியோருக்கு சென்னை காமராஜர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. கணேஷ் க்ருபா இசைக்குழுவினரின் ஆர்கெஸ்டிராவில் பல திரையிசைக் கலைஞர்களும் பங்கேற்றுப் பாடினர். பாராட்டி விழாவுக்குத் தலைமை பாலமுரளிகிருஷ்ணா. முன்னிலை இளையராஜா. பழம்பெரும் பின்னணி இசைக் கலைஞர் T.K.தக்ஷ்ணாமூர்த்தி சுவாமிகள் வந்திருந்து கலந்துகொண்டார். தன் யூஷுவல் தொப்பிக்கு பதில் அற்புதமான தலைப்பாகையை அணிந்து கொண்டு வந்திருந்தார் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ்.

அதைத்தவிர A.R.ரஹ்மான், கங்கை அமரன் போன்றோரும், பின்னணிப் பாடகர்கள் டி.எம்.சவுந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியன், சுசீலா, சித்ரா, எஸ்.பி.ஷைலஜா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இசைக்குழுவினரின் பாடகர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருக்கும்போது முதலில் மேடை ஏறிய பிரபலம் கங்கை அமரன். வந்தவுடனேயே மேடையை டாமினேட் செய்ய ஆரம்பித்துவிட்டார். கையில் எடுத்த மைக்கை கீழே வைக்கவேயில்லை. நிறைய அபத்த உளறல்கள், சில நல்ல சங்கதிகள். அவரைப் பாடக் கேட்டுக்கொண்டார் இசைக்குழுத் தலைவர். "அன்பு மனம் கனிந்தபின்னே அச்சம் தேவையா" என்ற பாடலை கங்கை அமரன் பாடினார். அற்புதமான பாடல், கங்கை அமரன் குரலுக்கு ஒத்துவரவில்லை என்று சொல்லலாம்.

அடுத்து மேடைக்கு வந்த பிரபலம் எல்.ஆர்.ஈஸ்வரி. பெருந்திருடன் ஆதிகேசவலு போட்டிருக்கும் நகையைப் போன்று கழுத்து முழுக்க நிறைந்து வயிறு வரை தொங்கும் சங்கிலி. பாவம், இவரது குரல் முழுவதுமாகப் போயே போய்விட்டது. ஆனாலும் ஒரு பாடலை கஷ்டப்பட்டு பாடி முடித்தார். வருத்தமாக இருந்தது. என்ன குரல், இப்படி ஆகி விட்டதே என்று.

பின் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். இதே அரங்கில சில வாரங்களுக்கு முன் இவரது பாடல்களைக் கேட்டிருந்தேன். மொத்தமாக மூன்று பாடல்களைப் பாடினார். இரண்டு சோலோ. ஒன்று எஸ்.பி.ஷைலஜாவுடன். கம்பன் ஏமாந்தான், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது. நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர். அமைதியாக மறுத்த எஸ்.பி.பி, இந்த விழா எங்கள் தேவுடுவான விஸ்வநாதன்-ராமமூர்த்திக்காக. எனவே அவர்கள் இசையமைத்த பாடல்களை மட்டும்தான் பாடப்போகிறேன் என்றார்.

'கம்பன் ஏமாந்தான்' பாடும்போதுதான் இளையராஜா உள்ளே நுழைந்தார். அப்பொழுது எஸ்.பி.பி இளையராஜா, பாவலர் வரதராசன் ஆகியோருடன் ஓர் இசைக்குழு அமைத்து அதில் பாடியதையும், அதில் இளையராஜா ஹார்மோனியம் வாசித்ததையும் நினைவுகூர்ந்து அதை இப்பொழுது இளையராஜா "ரிவைண்ட்" செய்து இப்பொழுதெல்லாம் பார்க்கிறாரா என்று தெரியவில்லை என்றார். அதற்கு இளையராஜா "ரிவைண்ட்" செய்யத் தேவையில்லை. "It always remains" என்றார்.

சுசீலா அம்மாவைப் பேசச்சொல்லி வற்புறுத்தியும், அவர் "எனக்குப் பெசத்தெரியாது, பாட மட்டும்தான் தெரியும்" என்றார். பின் முன்னால் அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைப் பார்த்து "எனக்கு முதன்முதலில் மலையாளப் படம் ஒன்றில் பாட வாய்ப்புக் கொடுத்தவர்" என்று நினைந்தார். பின் இரண்டு பாடல்களுக்கு இடையில் இளையராஜா (அப்பொழுதுதான் எழுந்து வெளியே போனார்), தன்னையும் லதா மங்கேஷ்கரையும் ஒப்பிட்டுச் சொன்னதாகச் சொன்னார்.

சித்ரா ஒரு பாட்டு, பின் சிப்பி இருக்குது முத்தும் இருக்குது டூயட், பின் இசைக்குழுவின் சொந்தக் கலைஞர்கள் பாட்டு (பல டி.எம்.எஸ் குரல் பாட்டுகள், ஆனால் டி.எம்.எஸ் மெதுவாகத்தான் வந்தார், பாடல்கள் எதையும் பாடவில்லை).

அதன்பின் கிட்டத்தட்ட 8.15 ஆனபோது திடீர்க் கூத்துகள் ஆரம்பமாயின. இசை வாத்தியங்களை பின்னுக்குத் தள்ளிவைத்து மேடையில் நான்கைந்து நாற்காலிகளைப் போட்டனர். அதற்குள் கீழே முன்வரிசையில் அமர்ந்திருந்த விஸ்வநாதன், ராமமுர்த்திக்கு "வேத" முறையில் ஏதோ சடங்குகள் செய்யப்பட்டன. எப்பொழுதும் சினிமாவில் பார்ப்பனப் புரோகிதராகத் தலைகாட்டும் ஒருவர் மற்றும் ஒருவருடன் கையில் பூர்ணகும்பங்களை எடுத்து வந்தார். தவில், நாயனம் ஒலித்தது. விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு பரிவட்டங்கள் கட்டி கையிலே கும்பத்தைக் கொடுத்து அதில் அங்கேயே பூஜை செய்யத் தொடங்கினார். திடீரென கூட்டத்துக்கும் வெறி பிடித்துவிட்டது. ஏதோ கோவில் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதைப் போல அடித்துப் பிடித்துக்கொண்டு முன்வரிசையை நோக்கி ஓடினர். அரங்கில் கிட்டத்தட்ட 5,000 பேர் என்று நினைக்கிறேன். இதனால் அரங்கில் பின்னால் உட்கார்ந்திருந்த யாராலும் எதையும் பார்க்கமுடியவில்லை.

பின் ஒருவழியாக ஏதோ சமஸ்கிருத மந்திர உச்சாடனங்களுக்குப் பிறகு மேடையேறினார்கள் அனைவரும். அங்கும் மந்திரங்கள் தொடர்ந்தன. இரவு 8.30க்கு நான் கிளம்பிவிட்டேன். அதன்பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருக்கவேண்டும்.

பின் பலரும் பாராட்டிப் பேசியிருப்பார்கள்.

இதுபற்றிய சுருக்கமான செய்தி தினமணியில் வெளியானது. தி ஹிந்துவில் எந்தச் செய்தியும் இல்லை.

9 comments:

  1. இது என்ன " all are welcome " நிகழ்ச்சியா அல்லது " by invitation only " நிகழ்ச்சியா? முன்கூட்டியே தெரிந்திருந்தால் நானும் வந்திருப்பேன்.

    ReplyDelete
  2. //நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர்.//

    ஹி...ஹி..!

    ReplyDelete
  3. //சுசீலா அம்மாவைப் பேசச்சொல்லி வற்புறுத்தியும், அவர் "எனக்குப் பெசத்தெரியாது, பாட மட்டும்தான் தெரியும்" என்றார். பின் முன்னால் அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைப் பார்த்து "எனக்கு முதன்முதலில் மலையாளப் படம் ஒன்றில் பாட வாய்ப்புக் கொடுத்தவர்" என்று நினைந்தார். பின் இரண்டு பாடல்களுக்கு இடையில் இளையராஜா (அப்பொழுதுதான் எழுந்து வெளியே போனார்), தன்னையும் லதா மங்கேஷ்கரையும் ஒப்பிட்டுச் சொன்னதாகச் சொன்னார்.//

    இந்த சுசீலா அம்மா ஒரு பாவப்பட்ட ஜென்மம். இவர் வடநாட்டில் பிறந்திருந்தால் லதா மங்கேஷ்கர் விட பல மடங்கு தலையில் வைத்து கொண்டாடப்பட்டு, பல விருதுகளையும் வாங்கி குவித்திருப்பார். ஆயிரக்கணக்கில் தமிழ் பாடல்களை பாடியதாலோ என்னமோ குறுகிய எல்லைக்குள் மட்டுமே அடையாளங்காணப்பட்டு, விருது என்ற வாசனை கூட தெரியாமல், லதா மங்கேஷ்கருடன் ஒப்பிடும் போது சிலிர்த்துப் போகிறார். கேனைக்குமாரி பி.சுசீலா. பாவம் அவர்!!

    ReplyDelete
  4. இதுபற்றிய சுருக்கமான செய்தி தினமணியில் வெளியானது. தி ஹிந்துவில் எந்தச் செய்தியும் இல்லை.

    இப்படி ஒரு விழா நடக்க இருப்பது இங்குவரும் பத்திரிக்கையிலோ, இணையத்திலோ படித்தஞாபகம்.

    ஆனால் இன்றைய தமிழ்முரசில் இந்த செய்தி, நான்கைந்து புகைப்படங்களோடு (பூரணகும்பத்துடனும் பெரிய மாலையுடனுமான புகைப்படம், பி.சுசீலா அவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்கியது, டி.எம்.எஸ் உரையாடுவது, ரகுமான் சால்வை போத்துவது, PBS அவர்களில் காலில் விழுந்து ஆசிவேண்ட - விஸ்வநாதன் அவர்கள் PBஸ்-ன் காலைத்தொட்டு ஆசி வேண்டியதும்) வெளியிடப்பட்டுள்ளது.

    இளையராஜா பேசும்போது:
    .... நானும் மற்ற இசையமைப்பாளர்களும் அவர்கள் போட்ட பிச்சை என்று பேசியிருக்கிறார்.

    ரகுமான் பேசும்போது:
    சூர்யா "தொட்டால் பூ மலரும்" மெட்டை மாற்றிப்போட சொன்னபோது பயந்துகொண்டே ஒத்துக்கொண்டதாகவும், அதுபற்றி MSV என்ன நினைப்பாரோ என்ற நிலையில் - ஒரு நிகழ்ச்சியில் கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும் பேசியிருக்கிறார்.
    மேலும் சில...

    (அதெல்லாம் இருக்கட்டும்... நான் திணமணி இன்னும் படிக்கவில்லை - ஆனால் திணமணியை மறுபிரசுரம் செய்யும் உரிமை தமிழ்முரசுக்கு உண்டு என்று கேள்விப்பட்டேன்).

    ReplyDelete
  5. பிரகாஷ்: இது "all are welcome" - if you pay the ticket price - நிகழ்ச்சி.

    நான் (ABBAS-ல்) வருடாந்திர உறுப்பினர் கட்டணம் செலுத்துவதால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எனக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகள் கிடைத்துவிடும்.

    மற்றபடி பலருக்கும் தெரிந்திருக்கிறது. அரங்கு முழுதும் கூட்டம். அதான் சொன்னேனே - கிட்டத்தட்ட 4,000-5,000 பேர் இருந்தனர் என்று. எனக்கு முன்கூட்டி எந்தத் தகவலும் இல்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி நடப்பதாகவும், நிகழ்ச்சி அன்று நுழைவுச்சீட்டுகளை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தொலைபேசியில் தகவல் வந்தது. சென்றேன்...

    சொல்ல மறந்தது: எஸ்.பி.பி சொன்ன பேச்சுக்கு அவரது குரல் அடிமை போல வேலை செய்கிறது. பாடுகிறார், திடீரென நிறுத்தி பேசுகிறார், பின் பாடுகிறார். குரல் வளைகிறது.

    ஞாயிறு அன்று அவருக்கு நட்சத்திரப்படி பிறந்த நாளாம். 59 முடிந்து 60க்குள் அடி எடுத்து வைக்கிறார். ஆங்கிலத் தேதிப்படி ஜூன் 4 பிறந்தநாளாம்.

    பாட்டுக்கு இடையில் திடீரென "happy birthday" மெட்டில் ஆர்கெஸ்டிரா கலைஞர்கள் இசைக்க ஆரம்பித்தனர். அதன்பின் ரசிகர்களிடம் உண்மையை ஒப்புக்கொண்டார் எஸ்.பி.பி.

    ReplyDelete
  6. //நினைத்தது போலவே கூட்டத்தில் இருந்த கோமாளிகள் "தேவுடா" பாடு என்று ஆணையிட்டனர//.

    “நச் வரிகள்- நாயை குளுப்பாட்டி நடு வீட்டில் வைத்தால்...“

    //பின் ஒருவழியாக ஏதோ சமஸ்கிருத மந்திர உச்சாடனங்களுக்குப் பிறகு மேடையேறினார்கள் அனைவரும். அங்கும் மந்திரங்கள் தொடர்ந்தன.//

    வர வர உங்கள் எழுத்து நடை நக்கலும் நையாண்டியும்தான். உங்கள் எழுத்து வளம் சிந்திக்க வைக்கிறது? கண்டிப்பாக "கலைஞர்"களின் சொல்லாடல் பக்கம் போகவேண்டாம் மறுபடியும் தமிழும் தமிழினமும் அம்போதான்.

    தமிழினம் என்றுதான் திருந்துமோ!
    இளையராசாவின் சிம்பொனி இசையில் திருமந்திரமா? வேதமந்திரமா?
    எதிர்பார்ப்புடன்...
    புமு.சுரேசு
    மலேசியா

    ReplyDelete
  7. மெல்லிசை மன்னர்கள் மிகுந்த பாராட்டுகளுக்கும் புகழுக்கும் உள்ளவர்கள். பி.சுசீலாவும் சரி இவர்களும் சரி.....தமிழில் பணியாற்றியதாலேயே இன்றைக்குத் தமிழில் மறந்து போகப் பட்டவர்கள்.

    இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்?

    ReplyDelete
  8. /*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்? */

    எல்லாம் ஒரு மொழிப்பற்று தான்...ஏன் தமிழ் குடிதாங்கிகள் மட்டும் தான் இருக்கணுமா என்ன? சும்மா..ஒரு தெலுங்கு குடிதாங்கி தான், இந்த பாலு!தெலுங்கு...நைனா...தெலுங்கு...

    ReplyDelete
  9. /*இந்த விஷயத்தில் எனக்கு எஸ்.பீ.பியின் மீது கூடக் கோவம் உண்டு. மேடைக்கு மேடை....விஸ்வனாதன் அண்ணாவுக்கு பத்ம விருதுகள் கொடுக்கக் கூடாதா என்று கேட்கிறார். ஆனால் எங்கு கேட்க வேண்டுமோ அங்கு கேட்கவில்லை. கண்டசாலாவின் பெயரில் அவ்வளவு செய்தவர், தமிழில் பிழைக்க வைத்த, அதனால் மற்ற மொழிகளிலும் நிலைக்க வைத்த விஸ்வனாதனுக்கு என்ன செய்திருக்கிறார்? */

    சரியா சொன்னீர்கள் ராகவன். தமிழை பிழைப்புக்காக மட்டும் பயன்படுத்தும் கூட்டத்தின் பேர்வழியில் இவரும் ஒருவர்.

    //எல்லாம் ஒரு மொழிப்பற்று தான்...ஏன் தமிழ் குடிதாங்கிகள் மட்டும் தான் இருக்கணுமா என்ன? சும்மா..ஒரு தெலுங்கு குடிதாங்கி தான், இந்த பாலு!தெலுங்கு...நைனா...தெலுங்கு...//

    எஸ்.பி.பி நன்¡றக பாடுவார். தமிழை நன்றாக உச்சரிப்பார் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை. ஆனால் மாற்றினத்தார் தமிழைக் பேசுவதிலும் எவ்வித தடங்களும் இல்லை. ஆனால் சில பச்சோந்திகள் (அதாவது வீட்டில் ஒரு மொழியும் வெளியில் ஒரு மொழியும்) பேசி தமிழை நாங்கள்தான் வாழ வைக்கிறோம் என்று அறைகூவல் விடவேண்டாம்.

    இன்று தமிழை தெலுங்கரும், மலையாளியும் வணிகத்திற்காக மட்டும்தான் படிக்கிறார்கள். சும்மா மொழிப்பற்று என்பது அவர்களிடம் செயல் என்பது சுழியம்தான்.

    தமிழ்மொழியை தமிழன் சிறப்பாக பேச முற்பட்டாலே போதும். மற்றவர்கள் வாழ வைக்க அவசியமில்லை. தமிழ்நாடும் தமிழருக்கே என்று வணிகத்துறையிலும் தமிழ் இடம் பெறும்.

    பொறுத்தது போதும் பொங்கி எழு தமிழா!

    புலி...பாயும்புலி

    ReplyDelete