புனைவு, அ-புனைவு ஆகிய இரண்டு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அ-புனைவுதான். அதிலும் எனக்கு அதிகமாகப் பிடித்தவை பொதுவாகவே கட்டுரைத் தொகுப்புகள்தான். கடந்த இரு வருடங்களில் நான் வாங்கும் புத்தகங்களில் அதிகமாக இருப்பது காலச்சுவடு, உயிர்மை, தமிழினி வெளியிடும் கட்டுரைத் தொகுப்புகள்தான். சில அடையாளம் வெளியீடுகளும் உண்டு. கிழக்கு பதிப்பகம் சார்பாக நான் பதிப்புக்கும் புத்தகங்களிலும் நான் அதிகம் விரும்பி ரசித்தவை கட்டுரைத் தொகுப்புகளே.
ஆ.இரா.வேங்கடாசலபதியின் அந்தக் காலத்தில் காபி இல்லை, தொ.பரமசிவத்தின் பண்பாட்டு அசைவுகள், எஸ்.வி. ராஜதுரையின் பதி பசு பாகிஸ்தான், மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும், ராஜ் கவுதமனின் தலித்திய விமர்சனக் கட்டுரைகள், பா.ராகவனின் 154 கிலோபைட், சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள், சுஜாதாவின் கடவுள்களின் பள்ளத்தாக்கு, ஞானியின் கண்டதைச் சொல்லுகிறேன், கனிமொழியின் கறுக்கும் மருதாணி, சுந்தர ராமசாமியின் இவை என் உரைகள், தொல்.திருமாவளவனின் அடங்க மறு போன்றவை நான் ரசித்துப் படித்த சில தொகுப்புகள்.
இதையும் தவிர இன்னமும் பல கட்டுரைத் தொகுப்புகள் வாங்கிப் பிரிக்காமல் உள்ளன. பல கட்டுரையாளர்களின் கட்டுரைகளைச் சேர்த்துப் பதித்த புத்தகங்களை நான் கணக்கில் எடுக்கவில்லை. முக்கியமாக இனி படிக்க வேண்டியது அ.முத்துலிங்கத்தின் "அங்க இப்ப என்ன நேரம்?"
இதுவரையில் கிழக்கு பதிப்பகம் சார்பாக நான் பதிப்பித்திருக்கும் கட்டுரைகள்: இரா.முருகனின் ராயர் காபி கிளப், மாலனின் சொல்லாத சொல், ஆர்.வெங்கடேஷின் நேசமுடன், அசோகமித்திரனின் கட்டுரைத் தொகுப்புகள் ஒன்று, இரண்டு, ரா.கி.ரங்கராஜனின் நாலு மூலை, ஜே.எஸ்.ராகவனின் வரி வரியாகச் சிரி. ஒவ்வொன்றையும் நான் மிகவும் விரும்பிப் படித்திருக்கிறேன்.
புனைவுகளை விட, பாசாங்குகளற்று நேரடியாக நம்மோடு உறவாடும் கட்டுரைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. புனைவுகளின் இல்லாத ஒன்று - கட்டுரையாளர் நம் அருகிலேயே இருப்பதைப் போன்ற உறவு. சொல்லப்போனால் புனைவுகளில் புனைவாசிரியரின் நேரடித் தலையீடு பிரதிக்கும் வாசகனுக்குமான உறவுக்கு இடையூறாகத்தான் இருக்கும். ஆனால் கட்டுரைகளில் இந்தப் பிரச்னையே இல்லை. இங்கு கட்டுரையாசிரியன் தன் கருத்தை, அதைத்தான் பிரபஞ்ச உண்மையென்று வாதிடாமல், தன் கருத்தாக மட்டுமே முன்வைக்கும்போது வாசகனுக்கு மிகவும் நெருங்கி வருகிறான் என்று நினைக்கிறேன்.
பொதுவாக அரசியல், சமூகம், இலக்கியம், கலாசாரம் ஆகிய துறைகளில் பல கட்டுரைத் தொகுப்புகள் வரும்போது, குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது வெங்கட்டின் குவாண்டம் கணினி. சமீபத்தில் அறிவியல், கணினி தொடர்புடையதாக வந்த ஒரே தொகுப்பு இதுமட்டும்தான். இதுவே ஒருவிதத்தில் பிரச்னையானதும் கூட. அறிவியலைப் பொறுத்தவரை கட்டுரைத் தொகுப்புகள் வருவதற்கு முன்னர் குறிப்பிட்ட துறைகளில் முழுமையான, அதே சமயம் எளிமையான பல சிறு புத்தகங்கள் வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்படி இருபது, முப்பது புத்தகங்கள் வந்தபின்னர் பல கட்டுரைத் தொகுப்புகள் வருவது சரியாக இருக்கும். இல்லாவிட்டால் இந்தக் கட்டுரைகளைப் படிக்கக்கூடிய அடிப்படை வாசகர்களின் எண்ணிக்கை வளராது. கட்டுரைகளின் தரத்தை வெகுவாக முன்னெடுத்துச் செல்லவும் முடியாது.
இப்பொழுது காலச்சுவடில் வெளியாகும் வெங்கட்டின் அறிவியல் கட்டுரைகளுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்று தெரியவில்லை. வாசகர் கடிதத்தில் எதுவும் காணப்படுவதில்லை.
வலைப்பதிவுகளில் தொடர்ச்சியாக எழுதும் பல அயலகத் தமிழர்களும் அறிவியல் துறைகளில் சிறு புத்தகங்களையும், கட்டுரைத் தொகுப்புகளையும் கொண்டுவரலாம். அதற்கான தகுதியும் திறமையும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் உழைப்பும் முனைப்பும்தான் காணக்கிடைப்பதில்லை.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
4 hours ago
பத்ரி,
ReplyDeleteஎனக்கும் ஒரு பத்தாண்டுகள் தீவிரமாக புனைவு (அ-புனைவும் தான்) படித்தபிறகு புனைவு படிப்பதில் ஆர்வம் வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் 'இந்த மாதிரி நாம் கூட எழுதலாம்' என்ற நிலை வரும்போது இப்படி நடக்கும் என்று நினைக்கிறேன். அதுவும் நம் ஆட்கள் எழுதும் விமர்சனக் கட்டுரைகளைப் படித்துப் படித்தே புனைவு மீதிருந்த கொஞ்சநஞ்ச ஆர்வமும் குன்றிவிட்டது. இந்த இலக்கிய விமர்சனத்தை (ஆங்கிலத்தில் இருப்பது போல) வெறும் academic exercise ஆக மட்டும் செய்தால் போதும். கடைசி மட்ட வாசகன் வரை எடுத்துச் சென்று இலக்கியத்தின் மீதே வெறுப்பேற்றத் தேவையில்லை என்பது என் தாழ்மையான கருத்து. இப்போதேல்லாம் கடைசியாகப் படிப்பது (அல்லது படிக்காமலே விட்டுவிடுவது) சிறுபத்திரிகைகளில் வரும் துக்கடாக் கவிதைகளைத் தாம்.
இலக்கிய விமர்சனத்தை வெறும் academic exercise ஆக வைத்திருக்கலாம் என்பதில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் பொதுமக்கள் விமர்சனங்களைத் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்று தெரியவில்லை.
ReplyDeleteகவிதைகள் பற்றி நான் எதையாவது பேசினால் என்னை எல்லோரும் அடிக்க வந்துவிடுவார்கள். தீம்தரிகிடவில் கூட ஞாநி சில பக்கங்களை கவிதைகளுக்காக ஒதுக்குகிறார். ஏன் என்று தெரியவில்லை. நல்லவேளையாக அவை கடைசிப் பக்கங்களாகப் போகிறது. ஒட்டுமொத்தமாக கவனிக்காமல் விட்டுவிடலாம்.
காலச்சுவடு, உயிர்மை கவிதைகளைப் படிக்கும்போது, இப்பொழுதெல்லாம் தினமலர் வாரமலர் கவிதைகளே தேவலாம் என்பது போல ஆகிவிட்டது.
அண்மைக் காலத்தில் மிகவும் விரும்பிப் படித்தது முகுந்த் நாகராஜனின் 'அகி' கவிதைத் தொகுப்பு மட்டும்தான்!
புனைவுகள் ஆரம்ப காலங்களில் வசீகரமாய் இருந்தன. பரவலாக வாசிப்பனுபவம் உடையவர்களிடம் பேசும்போதுதான் புனைவிலக்கியத்தின் மேல் கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வம் குறைந்து, இப்போது செத்தே போய்விட்டது. கவிதைகள் பற்றிய என் கருத்துக்கள் பிரச்சனையையும், விவாதத்தையும் கிளப்பிவிடும். ;-) ஆகவே தவிர்க்கிறேன்.
ReplyDeleteஅ-புனைவுகள் மீதான என் நம்பிக்கை/நம்பிக்கையின்மை ஒருபுறமிருக்க, தமிழில் அ-புனைவுகள் எழுதுபவர்கள் இன்னமும் குறைவாக தான் இருக்கிறார்கள். நீங்கள் பட்டியலிட்டத்தில் குறைவாகவே படித்திருந்தாலும், பேரா. தொ. பரமசிவத்தின் "பண்பாட்டு அசைவுகள்" தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான அ-புனைவாக பார்க்கிறேன்.
கிறிஸ்துவமும் சாதியும் கூட ஆய்வு நூல் என்பதை தாண்டி, நல்ல அ-புனைவு நூல். பண்பாட்டு அசைவுகள் பற்றிய ஒரு அறிமுகம் நீங்கள் தருவது நிறைய பேர்களுக்கு புத்தகத்தினை கொண்டு சேர்க்கும் என்று தோன்றுகிறது. வழக்கம் போல, நல்ல பதிவு.
பத்ரி,நல்லகருத்து.நானும் கட்டுரைத் தொகுப்புகளேயே விரும்பிப்படிப்பேன்.மற்றும்படி படைப்புகளைப் படிப்பதற்கு போதிய அமைதியில்லை.இன்றைய படைப்புச் சூழலில் பெரும்பாலும் படைப்புகள் போலித்தனமாக வாசகனோடு உறவாட முனைகிறது.பெருபாலன படைப்புகளைச் சொல்கிறேன்.விதிவிலக்குண்டு.
ReplyDeleteவணக்கம் பத்ரி,
ReplyDeleteஇது காமதேனு தொடர்பான கேள்வி. நீங்கள் உங்களுக்குப் பிடித்த சில கட்டுரைத் தொகுப்புகளின் பெயர்களையும், அவற்றைப் பெறுவதற்கான சுட்டிகளையும் உங்கள் பதிவில் கொடுத்திருந்தீர்கள். (இத்தகைய புத்தகங்கள் இங்கு மலேசியாவில் கிடைப்பதில்லை. இன்னும் கூட லஷ்மி, சாண்டில்யன், மு.வ. போன்றோரின் புத்தகங்கள்தான் இங்குள்ள புத்தகக் கடைகளில் காணக்கிடக்கின்றன.) அவற்றையும், இன்னும் சில புத்தகங்களையும் வாங்க எனக்கு விருப்பமாக உள்ளது. இருப்பினும், புத்தகங்களை அனுப்பும் கொள்கைதான் எனக்குச் சரியாக விளங்கவில்லை. அனுப்புவதற்கான செலவு ஒரு புத்தகத்தின் எடையைப் பொறுத்தது. ஆனால், புத்தகங்களின் எடை எங்கும் குறிப்பிடப்படவில்லை. எப்படி அறிந்து கொள்வது? இது சென்னையிலோ தமிழகத்திலோ உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை; அயல் நாட்டில் உள்ளோர்க்கு பிரச்சனையே!
நன்றி.
Ev: காமதேனு.காம் புத்தகங்களைத் தேடி எடுத்தபிறகு அடுத்த பக்கங்களுக்குச் சென்றால் புத்தகங்களின் விலையுடன் எடையும் சேர்ந்து வரும். அதாவது - check out செய்யும் முன்பாக.
ReplyDeleteநீங்கள் இப்பொழுதைக்கு மலேசியாவிலிருந்து காமதேனு வழியாக புத்தகங்கள் வாங்கினால் போஸ்டல் விலை அதிகமாக இருக்கும். ஆனால் எனக்குத் தெரிந்து மலேசியாவில் ஒரு கடையில் இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இருக்கின்றன. அதன் முகவரியை இன்று அலுவலகம் சென்றவுடன் கொடுக்கிறேன்.
விரைவில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு மிகக்குறைந்த அஞ்சல் செலவில் புத்தகங்கள் அனுப்பும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம். அப்பொழுது தகவல் தெரிவிக்கிறேன்.
எனக்கும் கட்டுரைகள்தான் மிகவும் பிடித்தவை. ஒருவேளை மற்றவை புரியாததலோ, உடனடிப்பலன் இல்லாததாலோ இருக்கலாம். கட்டுரைகளிலும் - சமகால கட்டுரைகள்தான் அதிகம் ஈர்க்கிறது. அந்த வகையில் சுஜாதாவின் கற்றதும் பெற்றதும், ஓரிரு எண்ணங்கள் போன்று ராகாகி, நேசமுடன், நாலுமூலைகளிலும்...,அள்ள அள்ள பணம் (படித்தபோது சில விடயங்கள் குறித்துவைத்தேன், உங்களுக்கு அனுப்ப நினைத்து விட்டுவிட்டேன்), காலம் உங்கள் காலடியில் போன்ற புத்தகங்கள் படித்தேன், தேடிப்படிக்கிறேன்... (அதற்கு மாறாக ரொம்ப ரசித்துப் படித்தது துணையெழுத்து - அதுவும் ஒருவேளை இந்தவகையிலானதால்தான் இருக்கும்) சமீபத்தில் ஓரிரு ஆயிரத்தில் மற்ற கவிதை/கதை நூல்கள் தருவித்திருந்தாலும் நான் இதுவரை படித்தவை இவைகள்தான்.
ReplyDeleteமேலும் பல நூல் அறிமுகப்படுத்தி, காசுக்கு வேட்டுவைத்ததற்கும், என் மனைவியின் அர்ச்சனைக்கு ஏற்பாடு செய்ததற்கும் நன்றி:)
விரைவில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு மிகக்குறைந்த அஞ்சல் செலவில் புத்தகங்கள் அனுப்பும் முறை ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
மிக்க நன்றி, உங்களுக்கு புண்ணியம் கிட்டும்.
அப்பொழுது தகவல் தெரிவிக்கிறேன்.
- தகவலுக்கு காத்திருக்கிறேன்.