Sunday, June 05, 2005

அத்வானியின் பாகிஸ்தான் யாத்ரா

அத்வானி யாத்திரை கிளம்பினாலே கலவரம் வெடிக்கும் போல இருக்கிறது. பாகிஸ்தான் சென்ற அத்வானி வரிசையாக இரண்டு அணுகுண்டுகளைப் போட்டுவிட்டார்.

எஸ்.வி.ராஜதுரை தனது பசு, பதி, பாகிஸ்தான் கட்டுரையில் வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளைப் பிணைக்கும் மூன்று விஷயங்கள் பசு (வதைத் தடுப்பு), (கண)பதி (ஊர்வலங்கள்), பாகிஸ்தான் (மீதான வெறுப்பு) என்பார். இந்த மூன்றிலும் ஆதாரமான விஷயங்கள் முஸ்லிம் எதிர்ப்பு. முதலாவதில் தலித் எதிர்ப்பும் உள்ளது. இந்தியாவில் தலித்கள் காலம் காலமாக மாட்டிறைச்சி சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் இந்துத்துவ அமைப்புகளின் கூக்குரலான பசு வதை தடுத்தல் (பிற மிருகங்களைச் சாப்பிடுவது பிரச்னைக்குரிய விஷயம் அல்ல போலிருக்கிறது) முஸ்லிம், தலித்களுக்கு எதிராக பிற இந்துக்களை ஒன்று திரட்ட வழிவகுக்கிறது.

கணபதி ஊர்வலங்களும் இந்துக்களை ஒன்றுதிரட்டி எப்படியாவது முஸ்லிம் தெருக்கள் வழியாகச் சென்று ஏதாவது வம்பு வழக்கு வராதா, அதைச் சாக்கிட்டு கல்லடி முதல் கத்திக்குத்து வரை சென்று உணர்ச்சிகளைத் தூண்டிவிடலாமா என்று ரத்த ஆற்றில் மீன்பிடிப்பது. கணபதி என்பது ஒரு குறியீடுதான். ராமர் ஊர்வலங்களும் நடக்கும், அதுதான் அந்த சமயத்துக்கு ஏற்றது என்றால்.

கடைசியாக எதையெடுத்தாலும் பாகிஸ்தான் மீது பழியைப் போடுவது. நக்சலைட் பிரச்னையா, ஐஎஸ்ஐ உதவி செய்துள்ளது. அசாம் பிரச்னையா, ஐஎஸ்ஐ. இந்த ஐஎஸ்ஐ என்னும் அமைப்பு ஒன்றும் மதர் தெரசா இல்லை. அடுத்த நாட்டின் குழப்பத்தைப் பெரிதுபண்ணத்தான் இந்த அமைப்பு உள்ளது. ஆனால் பிரச்னையை ஆரம்பித்து வைப்பது இந்தியாவின் உள்-முரண்பாடுகளே. அதைக் காற்றடித்துப் பெரிது பண்ண பகை நாட்டின் உளவு அமைப்புகள் தயாராகத்தான் உள்ளன. ஆனால் எல்லாப் பழியையும் பாகிஸ்தான் மீது எடுத்த எடுப்பிலேயே போட்டுவிட முடியாது. மேலும் வலதுசாரி இந்துத்துவவாதிகள் பாகிஸ்தான் என்னும் அமைப்பையே ஏற்றுக்கொள்ளாதவர்கள். அகண்ட பாரதம் என்னும் கருத்துருவாக்கத்தில் ஊறியவர்கள். ஜின்னா ஒரு கொடூரன். முஸ்லிம் லீக் வெறுக்கத்தக்கது. செகுலரிஸம் (மதச்சார்பின்மை) என்பது பொய்யான வாதம். (எனவேதான் சூடோ-செகுலரிஸம் என்னும் வார்த்தை உருவாக்கப்பட்டது.)

ஆனால் இந்த அத்வானி என்ன காரணத்துக்காகவோ பாகிஸ்தான் போய் இரண்டு விஷயங்களைச் சொல்லிவிட்டார்.

1. பாபர் மசூதி இடிக்கப்பட்டது வெட்கக்கேடானது. (சரி, அதற்குப் போய் ஏன் பாகிஸ்தான் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்கிறார்? இந்திய முஸ்லிம்களிடம் அல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்?)

2. ஜின்னா ஒரு சிறந்த தேசபக்தர். (எந்த தேசம்?) இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்குப் பாடுபட்டவர். பாகிஸ்தானை ஒரு செகுலர் தேசமாகக் கட்டமைக்க விரும்பினார்.

கொதித்துப் போயுள்ளனர் சுவயம்சேவக்குகள், விஸ்வ இந்து பரிஷத்காரர்கள். அத்வானி ஊர் திரும்பும்போது அவரது உயிருக்குப் பாதுகாப்பு தேவைப்படலாம். கட்சியிலும் சில மாறுதல்கள் ஏற்படலாம்.

சில நாள்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சரசங்கசாலக் 70 வயசுக் கிழவர் சுதர்சன், பாஜகவின் கிழத் தலைவர்கள் வாஜ்பாயி, அத்வானி ஆகியோர் இடத்தைக் காலி செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்பொழுது ஏற்பட்டிருக்கும் அத்வானியின் மனமாற்றம் அதையொட்டி நடந்ததாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நாள் கழித்து அத்வானி ஐஎஸ்ஐ உளவாளி என்று தோகாடியா சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

3 comments:

  1. இங்கிருக்கும்போது 'யாத்ரா' செய்து இந்துக்களை தூண்டி விடுவது. அங்கு போய் 'பாபர் மசுதி இடிக்கப் பட்டது வெட்கக் கேடானது'... யார் சாமி இடிச்சது?., காங்கிரஸ்காரர்களா?. இது என்ன வகையான அரசியல்?. இவர்களை நம்பும் மக்கள் எவ்வளவு தூரம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?.

    ReplyDelete
  2. ஹா, ஹா,,.... இது மாதிரி போகிற இடத்துக்குத் தகுந்த மாதிரி பேசுவது எல்லா அரசியல்வாதிகளுக்கும் (சங்கப் பரிவாரங்கள், கம்யூனிஷ்டுகள் உட்பட) இயல்புதான். ஆனால் அதை திராவிட இயக்கங்களைச் சார்ந்த குணமென்பதாக ஒரு கருத்து உருவாக்கப்பட்டு வந்தது.. இப்போது கொஞ்சம் கொஞ்சம் அது கலைந்தால் சரி...

    நன்றி செய்திக்கு..

    ReplyDelete
  3. அன்புள்ள பத்ரி,

    'அரசியல்வாதி' பின்னே எப்படிப் பேசுவார்?

    மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காமிக்கறதுதான் தெரிஞ்ச விஷயமாச்சே!!!!

    ReplyDelete