Tuesday, June 21, 2005

கணித வாத்தியார் பி.கே.ஸ்ரீநிவாசன்

நேற்று மாலை நானும் சத்யாவும் உரையாடிக்கொண்டிருக்கும்போது ஏதோ காரணங்களுக்காக பி.கே.ஸ்ரீநிவாசனைப் பற்றி பேச்சு வந்தது. பல வருடங்களுக்கு முன் அவரைச் சந்தித்தது. இப்பொழுது உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என நினைத்துக்கொண்டேன். நேற்று காலைதான் மாரடைப்பால் உயிர் போனதாம்!

தி ஹிந்து செய்தி

1998 என்று நினைக்கிறேன். நானும் சத்யாவும் கல்வி தொடர்பாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். கணினியில் சின்னச்சின்ன விளையாட்டு மென்பொருள்கள் எழுதி அதைப் பள்ளிக்கூடங்களுக்கு விற்கலாம் என்று திட்டமிட்டோம். மேட்சயின்ஸ் நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்தபோது அவர்கள் பி.கே.ஸ்ரீனிவாசனைப் பற்றிச் சொன்னார்கள். அவரைச் சந்திக்கும் முன்னால், தெரிந்த சில நண்பர்கள் மூலம், சென்னைப் பல்கலைக்கழக கணிதத்துறைத் தலைவர் ரங்காச்சாரியை அவரது திருவல்லிக்கேணி இல்லத்தில் போய்ப் பார்த்தோம். கட்டுக்குடுமியுடனும் பஞ்சக்கச்சத்துடனும் கல்லூரிக்குச் செல்லும் ஆசாரசீலர். அவர் ஸ்ரீனிவாசனைப் பற்றியும் அவரது முயற்சியால் ஏற்படும் கணிதமையங்களைப் பற்றியும் ஸ்ரீனிவாசன் உருவாக்கும் சின்னச்சின்ன கணித விளையாட்டுகள் பற்றியும் சொன்னார்.

திருவல்லிக்கேணியிலேயே இருந்த ஒரு கணிதமையத்துக்குச் சென்றோம். பூட்டித்தான் இருந்தது. அப்பொழுது அங்கு பள்ளிச்சிறுவர்கள் யாரும் இல்லை. மையத்தை நடத்தும் நண்பர் வந்தார். பேசிக்கொண்டிருந்தார். பி.கே.ஸ்ரீனிவாசனைப் பற்றி, அவர் குழந்தைகளுடன் விளையாடுவது பற்றி, கணிதம் என்றால் கசக்கும் வேப்பங்காய் என்று நினைக்கும் சிறுவர்கள் கூட மகுடியால் கட்டப்பட்ட பெட்டிப்பாம்பு போல அவரது பேச்சில் மெய்மறந்து உட்கார்ந்திருப்பது பற்றி என்று நிறையப் பேசினார்.

ஸ்ரீனிவாசன் ஃபார்மல் முறைப்படி கணிதம் சொல்லிக்கொடுப்பதைவிட உள்ளுணர்வால் உந்தப்பட்டு கணிதத்தைப் புரிந்துகொள்வதை, ரசிப்பதை விரும்பினார். பள்ளிக்கூடத்தில் வாழ்நாள் முழுவதும் கணிதம் கற்றுக்கொடுத்தபின், ஓய்வு வாழ்க்கையில் அவருக்கு இரண்டு விஷயங்களில் பெரும் ஈடுபாடு ஏற்பட்டது. ஒன்று கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜத்தைப் பற்றிய அரிய செய்திகளைச் சேர்த்து அவருக்கென ஒரு நினைவுமண்டபம் கட்டுவது. இரண்டாவது கணித ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு கணிதத்தை ஒரு விளையாட்டு போலக் கற்பித்து அவர்கள் மூலம் மாணவர்களுக்கு கணிதத்தின் மேல் ஆர்வத்தை வரவழைப்பது.

ஸ்ரீனிவாச ராமானுஜம் எழுதி ஆங்காங்கு சிதறியிருந்த கடிதங்களை ஒன்றிதிரட்டிச் சேர்த்தார். பின் ராயபுரத்தில் ஓரிடத்தில் ராமானுஜன் அருங்காட்சியகத்தை உருவாக்கினார்.

நானும் சத்யாவும் அவரை அவரது நங்கநல்லூர் இல்லத்தில் சந்தித்தோம். கணினியில் சில மென்பொருள்கள் செய்வது பற்றிப் பேசினோம். விளையாட்டுகள் மூலம் கணக்கு சொல்லித்தருவதைப் பற்றிய அவரது வழிமுறைகளைக் கேட்டோம். ஏதோ காரணங்களால் அவருக்கு எங்கள் மீது உடனடியாக நம்பிக்கை ஏற்படவில்லை. அன்று ஏதும் முடிவாகவில்லை. பின்னர் ராயபுரம் ராமானுஜம் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டோம்.

ஒரு மென்பொருள் எழுதுபவரை வேலைக்கு அமர்த்தி நாங்களாகவே சில விளையாட்டுகளை உருவாக்கி அதைக் கொண்டுபோய் அவரிடம் காண்பிக்கலாம், ஒருவேளை அப்பொழுதாவது அவருக்கு நம்பிக்கை பிறக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் வேலைக்கு அமர்த்தியவர் சில நாள்களிலேயே பிய்த்துக்கொண்டு கிளம்பிவிட்டார். அத்துடன் எங்கள் மென்பொருள் ஆசையும் கழன்று கொண்டது.

சில மாதங்கள் கழித்து ஸ்ரீனிவாசன் ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றிருந்தோம். பள்ளிக்கூடக் கணித ஆசிரியர்கள் சிலர் தமது கோடை விடுமுறை நேரத்தில் ராயபுரம் ராமானுஜம் அருங்காட்சியகத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்த ஆசிரியர்களுக்கு கணிதத்தில் அவ்வளவு ஈடுபாடு இருந்ததுபோலத் தெரியவில்லை. சிறுவர்களைக் கட்டிப்போடுகிற திறமை பெரியவ்ர்களிடம் பலிக்கவில்லை என்பது தெரிந்தது. பி.கே.ஸ்ரீனிவாசன் எந்த அளவுக்கு கணிதத்தின் மீதான பற்றை வளர்க்க உதவினார் என்று தெரியவில்லை. அவர் ஏற்படுத்திய கணித மையங்கள் என்ன நிலையில் உள்ளன என்றும் தெரியவில்லை. அவரது மறைவுக்குப் பின்னர் பள்ளி மாணவர்களிடையே - அதுவும் விளிம்புநிலை மக்களிடையே - கணிதத்தை எடுத்துச்செல்ல யாருக்காவது ஆர்வம் உள்ளதா என்று தெரியவில்லை.

ஸ்ரீனிவாசன் தீவிர காந்தியவாதி. கதர் ஆடை மட்டும்தான் அணிவார். நெற்றியில் ஸ்ரீசூர்ணம். தலையில் காங்கிரஸ் குல்லாய். ஸ்ரீனிவாச ராமானுஜம் மீது ஆழ்ந்த பக்தி. ஏழைக் குழந்தைகளிடம் ஏகப்பட்ட அன்பு.

ராபர்ட் கனீகெல்லின் The Man Who Knew Infinity படித்திருக்கிறீர்களா? அந்தப் புத்தகத்தில் ராபர்ட், ஸ்ரீனிவாசனைச் சந்தித்தது பற்றி எழுதியிருப்பார். ஸ்ரீனிவாசன் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்த சில துண்டுகள், துணுக்குகள்தான் ராமானுஜத்தைப் பற்றி எழுத மிகவும் உதவி செய்திருக்கிறது.

இந்த வாரக்கடைசியிலாவது ஒருமுறை ராயபுரம் சென்று அருங்காட்சியகத்தைப் பார்க்கவேண்டும். பி.கே.ஸ்ரீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும்.

7 comments:

  1. இன்று அந்த ஹிந்து செய்தியைப் படித்தேன். இதற்கு முன் அவரைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. இன்னொரு முதியவர் செய்தி நேதாஜியின் இந்திய தேசியப் படையில் இருந்த ஒரு அம்மையாரைப் பற்றியது. இரண்டும் என்னை வியப்பிலாழ்த்தின.

    ReplyDelete
  2. //ஃபார்மல் முறைப்படி கணிதம் சொல்லிக்கொடுப்பதைவிட உள்ளுணர்வால் உந்தப்பட்டு கணிதத்தைப் புரிந்துகொள்வதை, ரசிப்பதை//
    ஆஹா, அந்த மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள்!

    கணிதத்தை ரசிக்கவும் முடியும் என்பதை நான் அறியக் காரணமாய் இருந்தவர்களை நினைத்துப் பார்க்கிறேன். இன்றும் 'அல்லாடி'யின் கணிதக் கட்டுரைகள் படிக்கக் கிடைத்தால், ஒன்றும் புரியவில்லையானாலும் படிப்பதில் ஒரு மகிழ்ச்சி...

    உங்கள் முயற்சிகள் பாராட்டத் தகுந்தது.

    நன்றி.

    ReplyDelete
  3. பிகே ஸ்ரீனிவாசனை சந்தித்திராவிட்டாலும், அவர் குறித்து அறிவேன். உங்கள் பதிவின் மூலமே அவர் இறப்பை அறிந்தேன். என் அனுதாபங்கள்!

    ReplyDelete
  4. I have been to P.K Srinivasan's lectures. Chennai is kind of gifted to have people like P.K.Srnivasan, Ananthan, M.S Swaminathan and KNR. These people have an enthusiasm that is contagious. Have you ever been to the Chidren's club Society at Mylapore?

    Btw, I have been reading your blog and Satya's blog for quite sometime now. Hope to get in touch with you guys once I come to Chennai.

    ReplyDelete
  5. பத்ரி - பதிவுக்கு நன்றி. பிகேஸ்ரீனிவாஸனைப் பற்றி என்னுடைய மேட்சயின்ஸ் நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். பெரிய இழப்புதான்.

    சென்னையில் மேட்சயின்ஸில் மாத்திரம்தான் பரவலாக்கம், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்றுவித்தல் போன்ற நல்ல காரியங்கள் நடக்கின்றதைப் போலத்தோன்றுகிறது.

    ReplyDelete
  6. >Speech by Thomas Friedman of The New York Times....
    >
    >"When we were young kids growing up in America, we were told to eat our
    >vegetables at dinner and not leave them. Mothers said, 'think of the
    >starving children in India and finish the dinner.' And now I tell my
    >children: 'Finish your maths homework. Think of the children in India
    >who would make you starve, if you don't.'"
    கணக்குக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பை நம்மை விட அடுத்தவர்களே தெரிந்து வைத்திருக்கிறார்கள்போலும். வெறும் 8-ம் வாய்ப்பாட்டை (டாலரை 8-ஆல் பெருக்கினால் அவர் நாட்டு மதிப்பு)வைத்துக்கொண்டு சில மாதங்கள் உடன் தங்கியிருந்த ஒரு சீன நண்பரை வாய் பிளக்க வைத்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  7. வங்கிகளில் கணினி, கணக்கீடு பொறிகள் ( calculator க்குத் தமிழில் என்ன ?). கூட்டல் கழித்தல் மட்டும் செய்யக்கூடிய பொறிகள் ( adding machines ) உபயோகிக்கும் காலத்திற்கு முன்னர் பணிபுரிந்த காலங்கள் உண்டு. நண்பர் ஒருவர் வாராவாரம் வெள்ளிக்கிழமை மட்டும் சென்ற வாரத்தின் நாளிறுதி வரவு செலவுக் கணக்குகளைப் பதிவுசெய்து மனதிலேயே கூட்டிக் கழித்து,அந்த வார இறுதிக் கணக்குகளை முதன்முறையிலேயே நேர் செய்யும் திறமை ( ) படைத்திருந்தார். அவர் இரண்டு இரண்டு இலக்கங்களாக மனதிலேயே கூட்டல் செய்யும் திறனும் பெற்றிருந்தார்.

    ReplyDelete