Sunday, December 07, 2003

ப.சிதம்பரம் - அரச தர்மம்!

ப.சிதம்பரம் - அரச தர்மம்!
கல்கி 7/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 7

அரசாங்கம் vs நீதிமன்றங்கள்தான் இந்த இதழிலும். கடந்த இரண்டு மாதங்களாக நிகழ்ந்த மூன்று வழக்குகள் பற்றி. அவை:

1. தி ஹிந்து பத்திரிக்கை vs தமிழக சட்டமன்றம்: "ஒரு சட்டமன்றம் நிறைவேற்றும் தீர்மானத்தை, அறிவிக்கும் தீர்ப்பை, நீதிமன்றம் பரிசீலிக்க முடியுமா, முடியாதா" என்பதுதான் கேள்வி என்கிறார் சிதம்பரம். கேள்வி அதுமட்டுமல்ல, அதற்கு மேலாகவும் செல்கிறது என்று தி ஹிந்துவில் வந்த ஒரு செய்தி கூறுகிறது. இந்தச் செய்தியின்படி தி ஹிந்துவின் மீதான அவதூறு வழக்குகளும், சட்டமன்ற உரிமை மீறல் பிரச்சினையோடு சேர்த்து ஒன்றாக விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

2. ஜெயலலிதா மற்றும் பலர் மீதான சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு: தமிழக அரசின் மீதான உச்ச நீதிமன்றத்தின் கடுமையான குற்றச்சாட்டு ("அரசு வழக்கறிஞரும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் கைகோத்துக் கொண்டு நீதியின் பாதையைச் சீர்குலைக்க முயன்றார்கள்.") மற்றும் இந்த வழக்கு தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டிருப்பது பற்றி எடுத்துச் சொல்லி, சிதம்பரம் இனி கொஞ்ச காலத்திற்காவது "தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா" என்று பாட முடியாது என்கிறார். இந்த நிலை ஒன்றும் புதிதல்லவே? வந்து பல வருடங்களாகிறதே?

3. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: இந்த வழக்கில் ஜெயலலிதா மீது சட்டப்படி குற்றம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் (காசி: இதைக் கவனிக்கவும்!), என்று சொல்லும் சிதம்பரம் இவ்வாறும் சொல்லுகிறார்:
ஒவ்வொரு வார்த்தையையும் ஆழமாகப் படித்துவிட்டுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்தால், நாமும் மகிழ்ச்சியடைவோம். அந்தத் தீர்ப்பைப் படித்துவிட்டு யாருடைய மனசாட்சியும் குறுகுறுக்கவில்லை என்றால், நம்முடைய மனசாட்சியும் உறங்கட்டும்."
எனக்கென்னவோ தற்போதைய சூழ்நிலையில் மனசாட்சியெல்லாம் ஒத்துவராத விஷயங்கள். முதலில் சட்டப்படி ஒழுங்காக ஆட்சி நடத்த முயற்சிப்போம். பின்னர் மனசாட்சிப்படி, சட்டத்துக்கும் மேலாக, "தார்மீக நெறிப்படி" ஆட்சி செலுத்துபவர்களைத் தேடலாம்.

4. நீதிபதி கற்பகவிநாயகம் பற்றி. இது ஷெரிஜா பானு கஞ்சா வழக்கு பற்றி. நீதிபதி கற்பகவிநாயகம் அதிரடித் தீர்ப்புகளால், வித்தியாசமான தீர்ப்புகளால் பெரிதும் செய்தித்தாள்களில் பேசப்படுபவர். [கதை விவரம்: மேற்குறிப்பிட்ட கஞ்சா வழக்கில் (இதுபற்றித் தனியாக எழுத வேண்டும்) மதுரை காவல்துறைக் கமிஷனரை விசாரிக்கும்போது நீங்கள் யாரையோ திருப்திப்படுத்த இம்மாதிரி அவசர அவசரமாக ஷெரிஜா மீது வழக்குப் போட்டு இரவோடு இரவாக சென்னைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள் என்று சொல்லியுள்ளார். உடனே இதுதான் சாக்கு என்றமாதிரி கருணாநிதி தான் செய்தித்தாள்கள்களுக்கு அனுப்பும் கேள்வி-பதில் சர்க்குலரில் (இதில் கிரிக்கெட் நடுவர் ஹரிஹரன் கிரிக்கெட் மைதானத்தில் கொடுக்கும் தீர்ப்பு பற்றிய கருத்து முதல் கற்பகவிநாயகம் தீர்ப்பு பற்றிய கருத்து வரை இருக்கும்!) நீதிபதி காட்டிய கை ஜெயலலிதாவை நோக்கிப் பாய்கிறது என்றவண்ணம் சொல்லியிருந்தார். உடனே அதிமுக வக்கீல் ஜோதி நீதிபதி கற்பகவிநாயகம் இந்த வழக்கு விசாரிப்பிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று மனு கொடுத்து பின்னர் அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதனிடையே நீதிபதியே தற்போதைய அரசாட்சி பிரமாதம் என்று புகழ்ந்து, கருணாநிதியை கடிந்து கொண்டு, தானும் வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். நீதிபதி சொக்கலிங்கம் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு ஷெரிஜா மீதான பெயிலைத் தள்ளுபடி செய்தார். கற்பகவிநாயகம் ஒருவேளை பெயில் கொடுத்திருப்பாரோ என்னவோ?]

சிதம்பரம் "திமுக, அஇஅதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எல்லாமே பகடைக்காய்தான், நீதிமன்றம் உட்பட" என்கிறார்.

கட்டுரையை முடிக்கும்போது "அரசியல் கலாசாரச் சீரழிவுக்கு முக்கிய காரணங்கள் ஊழலும் வன்முறையும். இந்த இரண்டு நோய்களும் முற்றிவிட்டால், தமிழர் நாகரிகமே சிதைந்துவிடும். விழிப்புள்ள தமிழர்கள்தான், தமிழர் நாகரிகத்தைக் காப்பாற்ற வேண்டும்." என்கிறார்.

கல்கி 30/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 6

No comments:

Post a Comment