Saturday, December 27, 2003

மீண்டும் திசைகள்?

பாரா பெரிய மனது பண்ணி என்னையும் ஒரு முக்கியமான எழுத்தாளராக்கி விட்டார். அதெல்லாம் ஒன்றுமில்லை.

சிலநாட்களுக்கு முன்னர் சென்னையில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்புக்கு என்னைக் கூப்பிடவில்லை என்று பெரிய ரகளை செய்துவிட்டேன். அப்பொழுது நான் செய்த அழும்பைப் பார்த்து அதிர்ந்தவர்கள் இப்பொழுது 'இலக்கியம்+சென்னை' என்று எது நடந்தாலும் என்னை அழைக்காமல் இருப்பதில்லை.

போனவாரம் ஒருசில படைப்பாளிகள் மாலனின் வீட்டுக்குப் போனபோது, ஒட்டிக் கொண்டு சென்றேன். கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களில் சிலர் இணையத்தை ஒருபோதும் தொட்டிருக்காதவர்கள். ஒருசிலர் சென்னைக்கு வெளியேயிருந்து இந்தக் கூட்டத்திற்கெனப் பிரத்தியேகமாக வந்திருந்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு என்ன பின்புலம்? என்ன அவசியம்? மாலனுக்கும், வந்த மற்றவர்களுக்கும் வெவ்வேறு கருத்துகள் இருக்கலாம். ஒரு வாசகனாக என்னுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்கிறேன்.

சிறுவயதில் பள்ளிச்சிறுவனாய் இருந்தபொழுது தமிழில் படிப்பது ஆரம்பித்தது. முதலில் காமிக்ஸ் புத்தகங்கள். அற்புதமாக தமிழில் பல காமிக்ஸ் புத்தகங்கள் அப்பொழுது கிடைத்து வந்தன. முழுக்க முழுக்க தமிழ்க்கதைகள் (சுட்டிக்குரங்கு கபீஷ்!), முழுக்க முழுக்க ஆங்கிலக் கதைகள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டவை (இரும்புக்கை மாயாவி, முகமூடி அணிந்த வேதாளம், மந்திரவாதி மாண்டிரேக்!). இப்பொழுது இவையெல்லாம் எங்கே போயினவென்றே தெரியவில்லை. பின்னர் வாரப்பத்திரிகைகள், மாத நாவல்கள் என்று வெகுஜன இதழ்கள் ஒன்றை விட்டது கிடையாது. [அதற்கப்புறம் பெருமாள் கோயில் வெளிச்சுற்றில், பிற நண்பர்கள் வீட்டில் என்று மறைத்துவைத்துப் படித்த சரோஜாதேவி முதலான உன்னத இலக்கியங்களை வெளியே சொல்ல வேண்டாம்!]

அதையடுத்து அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நூலகத்தில் ஒரு பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தேன். அப்பொழுதுதான் மௌனி, தி.ஜா என்று ஆரம்பித்தேன். பின்னர் கிரிக்கெட் என்னை ஆக்ரமித்துக் கொண்டது. எட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ் படிப்பது முழுதும் நின்றுபோனது. தமிழில் எழுதுவது என்பது வீட்டிற்கு எழுதும் கடிதங்களாக மட்டுமே இருந்து, அதுவும் நின்றுபோய்ப் பத்து வருடங்களாகி இருந்தது. மீண்டும் தமிழ் உலகில் வாசகனாகப் புகுந்தது ஏப்ரல் 2003இல்தான். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்ப் புத்தகங்கள், அச்சில் வெளிவரும் இதழ்கள் (சிறிது, பெரிது), இணைய இதழ்கள், ராயர்காபிகிளப், மரத்தடி என்று நிறையப் படிக்க ஆரம்பித்தாயிற்று.

இந்த ஒன்பது மாதங்களில் ஒன்பது சந்தேகங்கள் எழுந்தன.

1. விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களில் ஏன் நல்ல படைப்புகள் மிகக் குறைவாகவே வருகின்றன? கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுத்தான் தேடவேண்டும் போல் இருக்கின்றது?

2. ஏன் ஒவ்வொரு சிற்றிதழிலும் குறிப்பிட்ட ஒரு சிலரே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிற்றிதழில் வாடிக்கையாக எழுதுபவர்கள் அடுத்த சிற்றிதழுக்குக் கூட மாற்றி எழுதுவதில்லை? ஒவ்வொரு சிற்றிதழிலும், வாடிக்கை ஆசாமிகளைத் தவிர வேறு யாரும் எழுதுவதில்லை? (எழுதப்பட விடுவதில்லை?)

3. ஏன் சிற்றிதழ்களில் எழுதும் யாரும் வெகுஜன இதழ்களில் எழுதுவதே இல்லை?

4. சிற்றிதழ்கள் என்று சொல்லப்படுவன ஏன் சிலநூறுகளுக்கு மேல் செல்லுபடியாவதில்லை?

5. இணையத்தில் எழுதும் அற்புதமான ஒருசில எழுத்தாளர்கள் ஏன் வெகுஜன இதழ்கள் அல்லது சிற்றிதழ்களில் காணக் கிடைக்கவே மாட்டேன் என்கிறார்கள்? இது இந்த எழுத்தாளர்களில் பிரச்சினையா அல்லது இதழாசிரியர்களின் பிரச்சினையா?

6. ஒரு அருமையான படைப்பை (அது அச்சிலாகட்டும், இணையத்திலாகட்டும்) ஒருவர் படித்து விட்டு, இணையத்தில் 100-200 பேர் இருக்கும் ஒரு யாஹூ குழுமத்தில், 10-20 மட்டுமே பேசிக் கொண்டால் போதுமா?

7. சுவையான வாசிப்பு அனுபவத்தை பெரும்பான்மைப் பொதுமக்களிடம் கொண்டுபோகவே முடியாதா? அதென்ன அவர்களுக்கு வாய்த்தது வெகுஜன இதழ்களில் வரும் குப்பைகள்தானா? (எல்லாமே குப்பைகள் இல்லை, ஆனால் பெரும்பான்மையானவை குப்பைகள் என்பது என் எண்ணம்.) ஏன் இரா.முருகன் போன்றவர்கள் இப்பொழுது விகடன் போன்ற இதழ்களில் எழுதுவதில்லை, இவர்களை எழுதச் சொல்லி யாருமே கேட்பதில்லையா? இல்லை, இவர்கள் எழுதி அனுப்பினாலும் அவர்கள் தூக்கி எறிந்து விடுகிறார்களா?

8. இணையத்தில் பரவியிருக்கும் உலகத்தமிழர்களை (படைப்பாளிகள்/வாசகர்கள்), தமிழகத்தில் குறுக்கப்பட்டிருக்கும் படைப்பாளிகள்/வாசகர்களுடன் இணைக்க முடியுமா?

9. தமிழ் பேசும், படிக்கும் பெரும்பான்மை மக்களுக்குத் தற்காலத் தமிழில் சிறந்த படைப்பாளிகள் பலரைத் தெரியுமா?

ராகாகி மூலமாக ராகவன், முருகன், வெங்கடேஷ் என்று ஆரம்பித்து சில படைப்பாளிகளின் பழக்கம் கிடைத்தது. பதிப்பகங்கள், சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் ஆகியவை பற்றி பல விஷயங்கள் தெரிய ஆரம்பித்தன.

வாசகனாக, ஒத்த கருத்தினருடன் ஒன்று சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னென்ன செய்ய வேண்டும்?

1. படைப்பாளிகளை வாசகர்களுடன் நெருக்கமாக இணைக்க வேண்டும்.

2. சிற்றிதழ், வெகுஜன இதழ் என்ற பேதம் என்னைப் பொறுத்தவரை செயற்கையாகத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி படைப்பை வெளிக்கொணரும் முன்னால், 'இது சிற்றிதழுக்கென, இது வெகுஜன இதழுக்கென' என்று நினைத்துச் செயல்படும்போது அந்த படைப்பு குறைபடுகிறது என்று தோன்றுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு இதழுக்கும் என ஒரு துல்லியமான நோக்கும், குறிக்கோளும் இருப்பதனால் (நிஜமாகவே இது இருக்கிறதா?) சில ஒழுங்குகளும், வரைமுறைகளும் ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். எல்லா படைப்புகளுமே எல்லா இதழ்களுக்கும் பொருந்துமெனச் சொல்ல முடியாது என்றும் புரிகிறது. ஆனாலும் ஒரு படைப்பாளியின் அனைத்துப் படைப்புகளையும் முழுவதுமாக மக்களிடம் கொண்டுபோக வேண்டும். இதற்கு வெகுஜன இதழ், சிற்றிதழ்களுக்கிடையேயான பிளவினைக் குறைக்க வேண்டும்.

3. தற்பொழுது சிறு வட்டத்தில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளை, பெரும்பான்மை மக்களிடம் கொண்டுபோக வேண்டும்.

4. வெளித்தெரியாமல் இருக்கும் திறமை மிக்க படைப்பாளிகளை வெளியே கொண்டுவர வேண்டும். புதிய, இளைய படைப்பாளிகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்குக் களம் அமைத்துத்தர வேண்டும்.

5. இணையம் (வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள், மின் புத்தகங்கள்), அச்சுப் பதிப்பகம், இதழ் வெளியீடு ஆகிய பலவற்றையும் ஒருங்கிணைத்து, படைப்புகளுக்கான சந்தையை விரிவுபடுத்தி,
(அ) தங்கள் படைப்புகளை வெளிக்கொணர, படைப்பாளிகளுக்கு, ஒரு நல்ல மேடையும், நல்ல வருமானமும்
(ஆ) வாசகர்களுக்குத் தரமான படைப்புகளும்
கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

வரும் நாட்களை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

1 comment:

  1. உங்களுடைய பழைய பதிவை இன்று படித்தேன். எழுதியதை செயல்படுத்தி காட்டியுள்ளீர்கள்.

    தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete