Friday, December 05, 2003

கம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி

காசி தனது வலைப்பதிவில் கம்பியில்லா இணைப்புகள் பற்றி எழுதி வருகிறார். இதுவரையில் இவர் எழுதியவை 1 | 2 | 3

கணினிகளை இணைத்துப் பின்னும் வலைப்பின்னலை சிலகாலம் முன்னர் வரை கம்பிகள் மூலமாகவே இணைத்து வந்தனர். ஆரம்ப காலத்தில், இப்பொழுதெல்லாம் இந்தியாவில் தொலைக்காட்சி ஓடைகளை அனுப்பப் பயன்படும் கோ-ஆக்ஸியல் கம்பிகளைப் பயன்படுத்தி இந்த வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. பின்னர் UTP (un-twisted pair) எனப்படும் பின்னப்படாத இரட்டை-செப்புக் கம்பிகள் உள்ளடக்கிய குழாய் கொண்டு இந்த வலைப்பின்னல் நிகழ்ந்தது. [கம்பி மூலமான தொலைபேசிகள் பின்னப்பட்ட இரட்டை செப்புக் கம்பிகளாலானவை (twisted pair copper wire) மூலமாக இன்னமும் இயங்குகின்றன]. பின்னப்பட்ட/பின்னப்படாத செப்புக் கம்பிகள் என்னும்போது நேரடியான, மெல்லிய செப்புக் கம்பிகள் மீது மெல்லிய பிளாஸ்டிக் உறை ஒன்று இருக்கும் - மின்சாரம் ஏந்திச் செல்லும் கம்பிகள் போல். இந்த இணைய 1, 0 பிட்டுகளும் சரி, கம்பித் தொலைபேசி சிக்னல்களும் சரி, அவையும் மின்சார சிக்னல்கள்தானே?

ஆனால் வீடுகள் மற்றும் சிறு அலுவலகங்கள் ஆகியவற்றில் இரண்டிலிருந்து பத்துக்குள் இருக்கும் கணினிகளை முழுக்க முழுக்க கம்பியில்லா இணைப்புகள் மூலம் பின்னி, இணைத்து வைக்கலாம். இதனால் பல பயன்கள் உள்ளன. கணினிகளை நகர்த்தும் போது முன்னமே வலைப்பின்னலுக்கான கம்பிகள் அருகில் உள்ளதா என்று பார்க்கும் கவலை இல்லை. மடிக் கணினியாக இருந்தால் அதனை பக்கத்து அறைக்குக் கொண்டு சென்று வேலை செய்யலாம். அப்பொழுதும் அது அந்த சுற்றுப்புறத்துக்கான பின்ன்னலுக்குள்ளேயே (LAN) இருக்கும்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்தக் கம்பியில்லா வலைக்கான உபகரணங்கள் எளிதாகக் கிடைப்பதில்லை.

நான் பல நாட்களாக ஒரு வயர்லெஸ் ரவுட்டர்/ஸ்விட்ச் தேடிக் கொண்டிருக்கிறேன். இது என் வீட்டுக்கு வரும் டிஷ்நெட் டி.எஸ்.எல் சேவையோடு தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன் என் மடிக்கணினிக்கும், வீட்டில் இருக்கும் மற்ற இரண்டு கணினிகளுக்கும் வயர்லெஸ் அடாப்டர் ஆகியவை தேவை.

அமெரிக்கா/இங்கிலாந்து ஆகிய இடங்களில் கிடைக்கும் எதையேனும் வாங்கினால் டிஷ்நெட் சேவையோடு ஒத்துப் போகுமா என்று தெரியாது. டிஷ்நெட் காரர்களுக்கு இதைப்பற்றிக் கேட்டால் தலையும் புரிவதில்லை, காலும் புரிவதில்லை.

இன்னும் சிலகாலம் பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment