இந்தியன் எக்ஸ்பிரஸ் இதைப்பற்றி எழுதிய பிறகு நீங்கள் இந்த செய்தியைப் பற்றி கேள்விப்படாமல் இருந்திருக்க முடியாது. முதலில் கல்கத்தாவிலிருந்து வெளியாகும் தி டெலிகிராஃப் செய்தித்தாள்தான் இதைப்பற்றி சம்பவம் நடந்த அன்றே எழுதியது.
சத்யேந்திர துபே என்னும் ஐஐடி கான்பூரில் படித்தவர், பிரதமர் வாஜ்பாயியின் தங்க நாற்கோண சாலை அமைக்கும் திட்டத்தில் ஒரு திட்ட நிர்வாகியாக இருந்திருக்கிறார். இந்தத் திட்டம் நாட்டிற்கு மிக முக்கியமான திட்டம் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. நாட்டின் நான்கு மூலைகளையும் இணைக்கும் சாலைகள், அதிலிருந்து கிளை பிரிந்து பக்கத்தில் உள்ள இடங்களையெல்லாம் இணைக்கும் சாலைகள் என்று திட்டம். இந்த வேலைகளைச் செய்வதற்காக நடந்தேறிய ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளதைக் கண்டுபிடித்து அதனை ஒரு கடிதத்தில் பிரதமருக்கு எழுதி அனுப்பியுள்ளார் துபே. அதே சமயம் சட்டத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட, கொலைவெறி கூத்தாடும் பீஹாரில் இருப்பதால் தன் பெயரை வெளியிட வேண்டாமென்றும், அது தன் உயிருக்கே ஆபத்தாய் முடியும் என்றும் வேண்டுகோளும் விடுத்துள்ளார் துபே. பிரதமரது அலுவலகத்திலிருந்து ஒரு வருடத்தில் இந்தக் கடிதம் பல அலுவலகங்களுக்குப் பயணித்து (துபேயின் முழுப்பெயருடன்) கடைசியாக எதிரிகளின் கையில் போய்ச் சேர்ந்து, 27 நவம்பர் 2003 அன்று துபே அடையாளம் தெரியாத மனிதர்களால் புத்தர் பூமியான கயாவில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.
பீஹார் அரசாங்கம் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.
இந்த விசாரணையில் ஒன்றும் உருப்படியாக நிகழப்போவதில்லை. கொலைகாரர்கள் கண்டுபிடிக்கப் படாமலிருக்கலாம். கண்டுபிடிக்கப்பட்டாலும் தண்டனை என்னவாகும் என்று தெரியவில்லை.
ஆனால் வேறு சில காரியங்கள் நிகழ வாய்ப்புள்ளது. பிரதமர் வாஜ்பாயி இந்த இளைஞர் இறந்ததற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும். இவரது அலுவலகமும், அதில் வேலை செய்யும் சுரணையற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும்தான் இதற்குக் காரணம். துபே அடையாளம் காட்டிய அத்தனை ஊழல் ஒப்பந்தக்காரர்களின் மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தங்க நாற்கோணத் திட்டத்தின் நிர்வாகிகளாக திறமையும், நேர்மையும் மிக்கவர்களை நியமிக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் முழு விவரங்களையும் அரசின் இனைய தளத்தில் ஏற்றி ஒவ்வொரு மாதமும் தளத்தை நிகழ்நிலைப் படுத்த வேண்டும். திட்டத்தின் ஒப்பந்தக்காரர்கள் அனைவரைப் பற்றிய முழு விவரமும் இணைய தளத்தில் இருக்க வேண்டும். இதில் ஒவ்வொரு ஒப்பந்தக்காரரும் என்ன செய்ய ஒப்புக்கொண்டுள்ளார், அதற்கு எத்தனை செலவாகும் என்று சொல்லியுள்ளார், எத்தனை நாட்களில் முடிப்பதாகச் சொல்லியுள்ளார், தற்போதைய நிலைமை என்ன, எத்தனை விழுக்காடு வேலை முடிந்துள்ளது ஆகிய அனைத்து விவரங்களும் அந்த இணைய தளத்தில் இருக்க வேண்டும். அந்தந்த இடங்களில் உள்ள மக்கள் இந்தத் தளத்தின் மூலம் நிகழ்நிலையைப் புரிந்து கொண்டு பொய்கள் ஏதேனும் இருப்பின் அதனை தளத்தின் feedback பகுதியில் புகார் கொடுக்குமாறு செய்ய வேண்டும்.
துபேயின் நினைவாக இந்த தங்க நாற்கோணத் திட்டத்தை நல்லமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டும். செய்வாரா பிரதமர்?
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
14 hours ago
No comments:
Post a Comment