Thursday, December 11, 2003

சத்யேந்திர துபே பற்றி

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் வாரியத்தின் (National Highways Authority of India - NHAI) தங்க நாற்கோணத் திட்டத்தில் பணியாற்றிய சத்யேந்திர துபே ஊழல் பெருச்சாளிகளை இனங்காட்டியதற்காகக் கொலை செய்யப்பட்டார். அது பற்றி நான் எழுதிய வலைப்பதிவில் இந்தத் திட்டம் பற்றி ஓர் இணையதளம் வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அப்படி ஒரு தளம் உள்ளது.

இந்தத் தளத்தில் தேவையான பல தகவல்கள் உள்ளன. ஆனால் நான் விரும்புவது இதற்கும் மேலான பல தகவல்கள். உதாரணமாக முகப்புப் பக்கத்தில் இருக்கும் "Latest Updates" பொத்தானை அழுத்துங்கள். அங்கு 31 அக்டோபர் 2003 வரையில் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய வேலைகளில் 286 கி.மீ சாலைகள் போடப்படவில்லை. 16 ஒப்பந்தங்கள் ஆகச் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஆனால் யார் இந்தக் "குற்றவாளிகள்"? எவ்விடங்களில் இந்தச் சாலைகள் போடப்படவில்லை என்ற தகவல் இல்லை. படங்களாக எந்த எந்த இடங்களிலெல்லாம் சாலைகள் போடப்பட உள்ளன, எவ்வளவு தூரம் அவைகள் போடப்பட்டுள்ளன? எந்த ஒப்பந்தக் காரர்கள் சரியாக வேலைகளைச் செய்யவில்லை ஆகிய தகவல்கள் இல்லை. எவர் சரியாகச் செய்கிறார் என்ற தகவலும் இல்லை. தங்க நாற்கோணத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்தனை ஒப்பந்தக் காரர்களின் தகவல்களும் இந்தத் தளத்திலேயே உள்ளது. எனவே அடுத்த நிலையாக எந்த ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளன என்ற தகவலும் இங்கு கொடுக்கப்பட வேண்டும்.

இதுவரை ஒப்பந்தக் காரர்களிடம் கொடுக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் 93. இதில் 16 ஒப்பந்தங்கள் பின்னடைவில் இருக்கின்றன என்றால் ஆறு ஒப்பந்தங்களில் ஒன்று பின்னடைவில் இருக்கிறது என்று பொருள்.

இப்படிச் செயல்படும் ஒப்பந்தங்கள் பலவற்றுள் ஊழல் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் துபே. கொலைகாரர்களுக்குச் தெரிந்து விட்ட இந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் பல செய்தித்தாள்கள் மற்றும் பிற ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கும். இந்த ஊழல் ஆசாமிகள் யார் என்று ஏன் இந்த ஊடகங்கள் தகவலை வெளியே சொல்லவில்லை?

===

பிரதமர் வாஜ்பாயி நேற்றைக்கு முந்தைய தினம் துபே கொலை பற்றிப் பேசியுள்ளார். "குற்றவாளிகளை தப்பித்துப் போக விட மாட்டோம்" என்கிறார். "நேர்மையான சிந்தனை உடைய மற்ற இந்தியர்களைப் போல நானும், ஒரு நேர்மையான அதிகாரி சத்யேந்திர துபேயின் மரணத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்." என்றும் "[இந்த தங்க நாற்கோணத் திட்டப் பணியில்] ஈடுபட்டிருக்கிறவர்கள் பயமின்றி இந்தத் திட்டத்தை முடித்துத் தர என் அரசு உறுதி அளிக்கிறது" என்று சொல்லியிருக்கிறார். நம்புவோம்.

ஆனால் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் சுரணையற்ற அதிகாரிகளை எப்படி ஒழுங்கு செய்யப்போகிறார் பிரதமர். அவரது அலுவலகத்தாரால்தானே துபேயின் பெயர் வெளியானது? அதைப்பற்றி பிரதமரின் வாயில் இருந்து ஒரு வார்த்தையையும் காணோம். வெட்கக்கேடு!

===

நேற்று மும்பையில் 'சத்யேந்திர துபேயின் மரணம் விழலுக்கிறைத்த நீரா?' என்ற தலைப்பில் Indian Merchants Chamber ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. IMC ரூ. 25 லட்சம் பணத்தை நேர்மையான அரசு அதிகாரிகளுக்குப் பரிசாக அறிவித்திருக்கிறது.

இதுபோன்ற கூட்டங்களும், பரிசு அறிவிப்புகளும் எல்லா நகரங்களிலும் நடக்க வேண்டும்.

===

அமெரிக்காவில் இருக்கும் ஐஐடியில் படித்த மாணவர்கள் சத்யேந்திர துபேயின் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment