Tuesday, December 09, 2003

'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு

'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் நிர்ணயச் சட்ட பெஞ்சுக்கு அனுப்பப் பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்துக்காக ஆஜரான வக்கீல், "சட்டமன்றம் குற்றம் சாட்டப்பட்ட பத்திரிக்கையாளர்களிடமிருந்து 'மன்னிப்பு' கூடத் தேவையில்லை, அவர்கள் சட்டமன்றத்தின் உயர்வையும், பெருமையையும் ஒப்புக்கொண்டாலே போதும்" என்று இறங்கி வந்திருக்கிறார். அதற்கு நீதிபதிகள் "நீங்கள் இவற்றை நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முன்னரேயே சட்டமன்றத்தின் அதிகாரம் பற்றிய கேள்விகள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தன. ஆனால் அப்பொழுது தீர்ப்பாகாமல் வெறும் புத்தகக்-கேள்வியாக மட்டுமே இருந்து விட்டது. இந்தமுறை அப்படி விட்டுவிட நாங்கள் எண்ணவில்லை. இதற்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்." என்று சொல்லியுள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.

சட்டமன்றங்கள் உரிமை மீறல் என்ற பெயரில் அநியாயம் செய்வது, பின்னர் சட்டமன்றம் எல்லாவற்றுக்கும் மேலானது என்று சொல்லிக் கொண்டு அலைவது, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்துக்கு செல்லும்போது பின்வாங்கி "மன்னிப்பு எல்லாம் வேண்டாம், ஆனால் நான் உசத்தி என்று ஒத்துக்கொள், விட்டுவிடுகிறேன் என்று ஜகா வாங்குவது", பின்னர் மீண்டும், 'பழைய குருடி, கதவைத் திறடி' என்று வரம்பு மீறித் தன் அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்ற கதையாகவே உள்ளது. இப்பொழுது ஒரேயடியாக இந்த வழக்கைத் தீர்க்க வேண்டும்.

இந்த வழக்கு விசாரணை சுவாரசியமானதாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒரு பக்கத்தில் 'தி ஹிந்து'வுக்காக ஹரீஷ் சால்வே, தமிழக ஊடகங்களுக்காக ப.சிதம்பரம் என்று கனமான ஆசாமிகள் வாதாடப் போகிறார்கள். முரசொலிக்காக கபில் சிபால் வாதாடுகிறார் என்று நினைக்கிறேன், ஞாபகமில்லை. தமிழக சட்டமன்றத்துக்காக யார் வாதாடப் போகிறார்? என்னைக்கேட்டால் தமிழக அவைத்தலைவர் காளிமுத்துவே நேரில் வந்து வாதாட வேண்டும். அவர் கூட பி.எச்.பாண்டியன் பக்கத்தில் துணையாக நிற்கலாம்.

சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் மாட்டிக்கொண்டிருக்கும் ஒரு வழக்கின் விசாரணை அப்படியே வரிவிடாமல் தினமலரில் வந்து கொண்டிருக்கிறது. அதுபோல மேற்சொன்ன சட்டமன்ற உரிமைப் பிரச்சினை வழக்கின் transcript கிடைத்தால் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment