பாரதியார் 'தென்ஆப்பிரிக்காவில் பெண்கள் விடுதலை' என்ற செய்தியை 'காமன்வீல்' என்னும் ஆங்கில இதழிலிருந்து மொழியாக்கம் செய்து கட்டுரையாக்கும் போது இப்படி எழுதியுள்ளார்.
"நடுவிலே ஒரு ரசமான வார்த்தை. "மெம்பர்" என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். "அவயவி" சரியான வார்த்தையில்லை. "அங்கத்தான்" சரிகட்டி வராது. "சபிகன்" சரியான பதந்தான். ஆனால் பொதுஜனங்களுக்குத் தெரியாது. யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப் பார்த்தேன். உறுப்பாளி! ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை. என்ன செய்வேன்! கடைசியாக "மெம்பர்" என்று எழுதி விட்டேன். இன்னும் ஆரஅமர யோசித்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொரு முறை சொல்லுகிறேன்."இதழாளர் பாரதி, பா.இறையரசன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1995, விலை ரூ. 60. பக் 94-95
இந்தப் புத்தகத்திலேயே, இன்னும் பல அறிவுரைகள் பாரதியாரிடமிருந்து வருகின்றன.
"கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமமென்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம், ஒரு பத்திரிகை விஷயம், எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்துவிட்டால் நல்லது."கலைச்சொல்லாக்கம் பற்றி எழுதும் போது இப்படிச் சொல்கிறார்:
"நீ எழுதப்படுகிற விஷயத்தை இங்கிலீஷ் தெரியாத ஒரு தமிழனிடம் வாயினால் சொல்லிக்காட்டு. அவனுக்கு நன்றாக அர்த்தம் விளங்குகிறதா என்று பார்த்துக் கொண்டு பிறகு எழுது. அப்போதுதான் நீ எழுதுகிற எழுத்து தமிழ்நாட்டிற்குப் பயன்படும்."
"இயன்ற இடத்திலெல்லாம் பதார்த்தங்களுக்குத் தமிழ்ப் பெயர்களையே உபயோகப்படுத்த வேண்டும். திருஷ்டாந்தமாக "ஆக்ஸிஜன்; ஹைட்ரஜன்" முதலிய பதார்த்தங்களுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கும் பிராணவாயு, ஜலவாயு என்ற நாமங்களையே வழங்க வேண்டும். தமிழ்ச் சொற்கள் அகப்படாவிட்டால் சமஸ்கிருத பதங்களை வழங்கலாம். பதார்த்தங்களுக்கு மட்டுமேயன்றிக் கிரியைகளுக்கும் அவஸ்தைகளுக்கும் (நிலைமைகளுக்கும்) தமிழ் சமஸ்கிருத மொழிகளையே வழங்குதல் பொருந்தும். இந்த இரண்டு பாஷைகளிலும் பெயர்கள் அகப்படாத இடத்தில் இங்கிலீஷ் பதங்களையே உபயோகப்படுத்தலாம். ஆனால் குணங்கள், செயல்கள், நிலைமைகள் - இவற்றுக்கு இங்கிலீஷ் பதங்களை ஒருபோதும் வழங்கக் கூடாது."இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது எனக்குத் தோன்றுவது இவைதான்:
1. பாரதிக்கு தமிழில் ஆங்கில மொழிக்கலப்பு பிடிக்கவில்லை. ஆனாலும் அவசரமாக மொழிமாற்றித் தன் இதழில் பதிப்பிக்க நேரமில்லாமல் போனதனால் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்துகிறார். அதைப் பற்றி மருகி, மருகி ஒரு பத்தி எழுதவும் செய்கிறார். கிட்டத்தட்ட இன்று புழங்கும் ஒரு சொல்லுக்கு வெகு அருகிலே வந்திருக்கிறார். மெம்பர் = உறுப்பினர்
2. ஆனால் தன் உரைநடையில் "எளிதான" வடமொழிச் சொற்களைச் செருகுவதில் சிறிதும் கவலைப்பட்டாரில்லை. ஒருவேளை அவர் புழங்கிய வடமொழிச் சொற்கள் படிக்கக் கூடிய அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் என்று நினைத்திருப்பாரோ என்னவோ?
3. வடமொழிச் சொற்களைப் புழங்கும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார். அது தமிழ் மொழி இலக்கணத்துக்கு மாறாக இருக்கும் போதும் கூட. சொல்லின் முதலெழுத்து ஒற்றெழுத்தாகப் பலவிடங்களில் வருகிறது. (ப்ரிய, ஸ்வராஜ்யம்)
4. ஆங்கிலச் சொற்களை மொழிமாற்றுகையில் பலவிடங்களில் அவருக்கு முதலில் கைக்கு வருவது வடமொழிச் சொல்தான். நகரசபை, ஜனசபை, மசோதா (இந்தச்சொல் இன்றும் கூடப் புழக்கத்தில் உள்ளது), பிராணவாயு, ஜலவாயு!
வடமொழியைப் பலவிடங்களில் அள்ளித் தூவுவதற்கு அன்றைக்கு இணையான தமிழ்ச் சொற்கள் புழக்கத்தில் இல்லாமையும், 'மக்களுக்குப் புரிய வேண்டும், போய்ச்சேர வேண்டும்' என்ற முக்கியக் குறிக்கோளும் சேர்ந்த சமரசமே என்று தோன்றுகிறது. இன்னும் சிலவருடங்கள் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் உரைநடையில் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து, அதே நேரத்தில் கொச்சையையும் தவிர்த்து, எளிதில் புரியக்கூடிய வெகுமக்கள் மொழியாக, ஒரு நடையை உருவாக்கியிருப்பார்.
அதுதான் நமது குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்.
கொடுந்தமிழ், தனித்தமிழ் என்று பண்டிதத்தமிழாக இருக்கக் கூடாது. ஆங்கிலக் கலப்பு கூடாது. வடமொழிக் கலப்பையோ, பிறமொழிக் கலப்பையோ முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் எளிமையாகவும், படிப்பவர்களைப் போய்ச் சேரும் வகையிலும் அமைந்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment