நேற்று, சனிக்கிழமை, இரண்டு கூட்டங்களுக்கு எனது நண்பனுடன் சென்றிருந்தேன். ஒன்று லயோலா கல்லூரியில் அம்பேத்கார் நினைவாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இந்தியா டுடே (தமிழ்) இதழில் எழுதிய கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம் புத்தகமாக வெளியிடுவதுவுமான விழா.
நான் சென்றபோது பேரா. கெயில் ஓம்வேத் பேசிக் கொண்டிருந்தார். அவரது ஆங்கிலப் பேச்சை மீனா கந்தசாமி என்னும் இளையர் அருகிலேயே நின்று தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். மீனாதான் திருமாவளவனின் தமிழ்க் கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். ஆனால் ஓம்வேதின் பேச்சை சரளமாகத் தமிழாக்கக் கடினமாக இருந்திருக்க வேண்டும். பெரிய அரங்கில் ஒலித்தொல்லை அதிகமாக இருந்தது. முதல் பல வரிசைகளில் அமர்ந்திருந்தவர்கள் பேச்சைக் கேட்டு உள்வாங்க வந்தவர்கள் போலில்லை. அதில் பலர் காங்கிரசின் வாசனது தொண்டர்கள் என்று தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. வாசன் தன் தகப்பனாரைப் போற்றிப், பாராட்டிப் பேசிமுடித்து வெளியேறியவுடன் ஒரு கூட்டம் அவரோடே வெளியே போய்விட்டது. அரங்கில் குழுமியிருந்த பலரும் திருமாவளவன் பெயரும், அம்பேத்கார் பெயரும் வெளிப்பட்டபோது அதிர்ந்த கரகோஷம் எழுப்பினர். தலித் எழுச்சிக் கூட்டங்கள் வெறும் அரசியல் கூட்டங்களாகப் போய்விடக் கூடாது. புரியாமல் கைதட்டுவதும், தலைவர் ஒருவரைப் பெரிய ஆளாக்குவதும் மட்டும் போதாது.
வெளியே புத்தகங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தன. அத்துடன் திருமாவளவன் பேச்சு ஒலிநாடாக்களும், அணிந்துகொள்ளும் பேட்ஜுகள் மற்றும் இதரபல ஸ்டிக்கர்கள், போஸ்டர்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மற்றவை விற்பனை ஆனது போல புத்தகங்கள் அதிகமாக விற்பனை ஆனதாகத் தெரியவில்லை.
Talisman, Extreme Exmotions of Dalit Liberation, Thirumaavalavan, (Tr: Meena Kandasamy), 2003, Samya, an Imprint of Bhatkal and Sen, 16, Southern Avenue, Kolkata 700 026, Pages 185, Rs. 200
விடுதலை சிறுத்தைகள் போன்ற அரசியல் இயக்கங்கள் இந்தியா முழுக்கத் தேவை. தலித்துகளை ஒன்றிணைத்து, தமக்குள் வித்தியாசம் பாராட்டாது (திண்ணியமும் நிகழ்ந்திருக்கக் கூடாது, கரடிசித்தூரும் நிகழ்ந்திருக்கக் கூடாது), திமுக, அஇஅதிமுக கைகளிலும் மற்ற ஆதிக்க சாதிகளின் கைகளிலும் வெறும் பகடைக்காய்களாக மாறாது பலமிக்க குழுவாக இருந்தால்தான் சாதி வெறியையும் அழிக்கலாம், தங்களது பொருளாதார நிலையையும் உயர்த்தலாம்.
மேற்படி நிகழ்ச்சி பற்றிய 'தி ஹிந்து' செய்தி. மிகவும் சுருக்கமாக, சம்பந்தா சம்பந்தமில்லாமல் வந்துள்ளது, புகைப்ப்படம் எதுவும் கிடையாது. தினமலரில் செய்தியே கிடையாது. நேற்று பார்த்த தொலைக்காட்சி செய்திகளில் ஒரு துணுக்கையும் காணோம் என்ற ஞாபகம்.
===
சென்னை டி.டி.கே ரோட், டாக் மையத்தில் (Tag Centre, TTK Road), ஐந்தாவது ரமாமணி நினைவுப்பேச்சாக ஓய்வுபெற்ற ஆந்திர உயர் நீதி மன்ற நீதிபதி டி.என்.சி ரங்கராஜன் 'Corrupting the constitution' என்னும் தலைப்பில் பேசினார். நடுத்தர மற்றும் அதற்கும் மேற்பட்ட வர்க்க மக்கள் கூட்டத்தால் அரங்கு நிரம்பி வழிந்தது. செல்பேசிகளை அணைக்க மறந்த, விரும்பாத பலர் எழுப்பிய அசிங்கமான இரைச்சல்களுக்கு நடுவே ரங்கராஜன் பேச்சு தொடர்ந்தது.
அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஊழல் என்பதல்ல தலைப்பு. Corruption is something that is deviating from the objective என்னும் பொருள்படவே தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாகவும், எவ்வாறு அரசியல் நிர்ணயச் சட்டம் நினைத்ததை மாற்றும் வகையில் டிரிபூனல்கள் (Tribunals) எனப்படும் தீர்ப்பாயங்கள் நீதிமன்றங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டு அவைகளுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன என்று பேச்ச் தொடர்ந்தது. தீர்ப்பாயங்களின் தீர்ப்புகள் உச்ச நீதிமன்றத்தின் வரைமுறைக்குள்தான் வருகின்றன. தீர்ப்பாயத்தின் தீர்ப்புகள் பிடிக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தின் முறையிடலாம். மாநில உயர் நீதிமன்றங்களிலும் முறையிடலாம் என்றும் நினைக்கிறேன். நீதிபதி ரங்கராஜன் வருமான வரித் தீர்வாயத்தின் (Income Tax Appellate Tribunal) தலைவராக இருந்தவர்.
இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்க முடியாமல் எனது மகள் தொல்லை கொடுத்ததனால் வீட்டுக்குப் போகவேண்டி வந்தது. நல்ல குடிமகனாக இருப்பதற்கு பதில் ஒரு விடுமுறை நாளில் நல்ல தகப்பனாக இருக்கலாமே? நீதிபதியின் பேச்சு அச்சிட்ட தாளில் வழங்கப்பட்டதாம். நண்பனிடம் உள்ளது. வாங்கிப் படித்து விட்டு எழுதுகிறேன்.
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
20 hours ago
No comments:
Post a Comment