Thursday, December 04, 2003

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

தற்போதைய நிலவரப்படி தில்லியில் காங்கிரசும், மத்யப் பிரதேசத்திலும், இராஜஸ்தானிலும் பாஜகவும், சத்தீஸ்கரில் யார் வருவார் என்று சொல்ல முடியாத நிலையிலும் உள்ளது.

மூன்று மாநிலங்களிலும் பெண்கள் முதலமைச்சர்களாக வரப்போகிறார்கள். தில்லியில் ஷீலா தீக்ஷித் பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். இராஜஸ்தானில் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேசத்தில் உமா பாரதி.

இராஜஸ்தான் முடிவு கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக வந்துள்ளது.

என் கருத்து: தில்லி முடிவு சரியானதாகத் தோன்றுகிறது. மக்கள் ஷீலா தீக்ஷித் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அவரும் நம்பத்தகுந்த, நேர்மையான முதல்வராகவும், வளர்ச்சியில் கருத்துடையவராகவும் உள்ளாரென்று தெரிகிறது.

மத்தியப் பிரதேசம்: பாஜக, அதுவும் உமா பாரதியை முன்னுக்கு நிறுத்தியது வருத்தமானது. இவர் முதல்வராவதால் அந்த மாநிலத்துக்கு என்ன கிடைக்கும் என்று தெரியவில்லை. திக்விஜய் சிங், கிட்டத்தட்ட சந்திரபாபு நாயுடு போல் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டவர். ஆனால் பத்து வருடங்களாக மாநிலத்தை ஆண்டதில் மக்களுக்கு அவர்மீது நம்பிக்கை போய்விட்டதோ என்னவோ? உமா பாரதி காவி உடை, ராமர் கோயில் என்று பேசாமல் உருப்படியாக ஆட்சி செய்வார் என்று நம்புவோம்.

இராஜஸ்தான்: கருத்துக் கணிப்புக்கு எதிரான முடிவு. அஷோக் கெஹ்லாட் திறமையாகத்தான் ஆட்சி செய்தார் என்று பேச்சு. ஏன் அவரைத் தூக்கி ஏறிந்துள்ளனர் மக்கள் என்று புரியவில்லை. வசுந்தரா ராஜே மத்திய அமைச்சராக இருந்தவர். உமா பாரதியைப் போல் திரிசூலம் தூக்கிக் கொண்டு அலைபவரல்ல. பெண்களாட்சி நல்ல ஆட்சியாக அமையுமா என்று பார்ப்போம்.

சத்தீஸ்கரில் இழுபறி நிலைக்கு வருவது காங்கிரஸ்/அஜீத் ஜோகிக்குக் குறைபாடுதான். முடிவாகும் வரை பொறுத்திருப்போம். அஜீத் ஜோகி மீதும் பாஜக மீதும் பல ஊழல் புகார்கள். பாஜக முதல்வர் என்று முன்னிறுத்திய திலீப் சிங் ஜுதேவ் 'பணம் வாங்கியது' வீடியோவில் பிடிக்கப்பட்டுள்ளது. அஜீத் ஜோகி மீது எண்ணற்ற புகார்கள் தேர்தல் வாரியத்திடமிருந்தே வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை ஜோகி பதவி இழக்க வேண்டும். பாஜகவிலிருந்து ஜுதேவ் அல்லாத வேறு ஒருவர் முதல்வராக வருதல் அவசியம்.

No comments:

Post a Comment