துக்ளக் 3/12/2003 இதழிலிருந்து:
முதல் பாகத்தில் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் உரிமைகள், இந்திய சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றங்களுக்கும் உள்ளது என்று அறிந்தோம். ஆனால் இந்த உரிமைகளை ஏன் இங்கிலாந்துப் பாராளுமன்றம் தனக்காக வேண்டும் எனப் பெற்றது என்பதையும் அது ஏன் இந்திய மன்றங்களுக்குப் பொருந்தாது என்பதையும் விவரிக்கிறார்.
* இங்கிலாந்துக்கு எழுதப்பட்ட அரசியல் நிர்ணயச் சட்டம் ஏதும் கிடையாது. அதனால் இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இன்னதுதான் உரிமைகள் என்று எப்போதும் எழுதப்படவில்லை.
* இங்கிலாந்தில் ஆரம்பத்தில் மன்னராட்சிதான் முதன்மையாக இருந்தது. [இப்பொழுதும் அரசர்/அரசி உப்புக்குச் சப்பாணியாக இருக்கிறார்கள். டாப்ளாய்டுப் பத்திரிக்கைகள் மட்டும்தான் இவர்களைக் கண்டுகொள்கிறது.] பாராளுமன்றம் ஆரம்பத்தில் அரசன் சொல்லுக்கு தலையாட்டுவதை மட்டுமே செய்து வந்தது.
* மேலும் இங்கிலாந்தில் மக்களவை, பிரபுக்களவை என்று இரு அவைகள். ஆரம்பத்தில் பிரபுக்கள் அவை மக்களவையை விட மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. இப்பொழுது கூட நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றமாக இந்தப் பிரபுக்கள் அவை நடந்து கொண்டு வருகிறது.
* ஆக, இப்படிப்பட்ட ஒரு நிலையில், மக்களவை தங்களுக்கு மேலாக பிரபுக்கள் அவையும், அரசரும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கையில் தங்களது உரிமைகளைக் காப்பாற்ற வேண்டி சிறிது சிறிதாக உரிமைகளைக் கோர ஆரம்பித்தனர். அரச குடும்பத்தின் ஆதிக்கமும், பிரபுக்களவையின் ஆதிக்கமும் குறையக் குறைய, மக்களவையின் ஆதிக்கம் நாளடைவில் அதிகமானது. ஆனாலும் மக்களவையிடம் ஒருசில உரிமைகள் தங்கிப் போய் விட்டன. அதில் ஒன்றுதான் மக்களவையின் மீது வேறெவருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது, அதாவது மக்களவையின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது. மக்களவையே ஒருவர் மீது குற்றம் சாட்டி, தண்டனையும் கொடுக்கலாம் என்பது.
* இப்படிப்பட்ட உரிமை இருந்தபோதிலும் பாராளுமன்றத்தின் விசேஷக் குழு ஒன்று பாராளுமன்ற உரிமைகளைப் பற்றி ஆராய்ந்து தனது அறிக்கையில் "இந்த விஷயத்தில் தன்னுடைய அதிகாரத்தைப் பாராளுமன்றம் எவ்வளவு குறைவாகப் பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும்... அதுவும் கூட, தான் இயங்குவதற்குத் தவிர்க்க்க முடியாத அவசியம் ஏற்படும்பொழுது, தன்னையும், தனது அங்கத்தினர்களையும், அதிகாரிகளையும் காத்துக் கொள்ளும் அளவில்தான் - இந்த அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். விமர்சனங்கள் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் சரி, எவ்வளவு அநியாயமாக இருந்தாலும் சரி, - அந்த விமர்சனங்களை ஒடுக்குவதற்காக, தண்டனை கொடுக்கும் தன்னுடைய அதிகாரத்தை பாராளுமன்றம் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், விமர்சனம் என்பதுதான் ஜனநாயகத்தின் உயிர் மூச்சு, ரத்த ஓட்டம்!" என்று கூறியுள்ளது.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்தியப் பாராளுமன்றமும், சட்ட மன்றங்களும் தங்களது செயல்முறைகள் பாதிக்கப்படாத போது எவ்விதக் கடுமையான விமரிசனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* ஒரு உரிமைப் பிரச்சினை வழக்கில் உச்ச நீதிமன்றம் (வருடம் மற்றும் வேறு தகவல்கள் கொடுக்கப்படவில்லை) கருத்து சொல்லும்போது "உயர்நீதிமன்றம் என்ற வகையில் இங்கிலாந்துப் பாராளுமன்றம் பெற்ற உரிமைகள் அனைத்தும், இந்தியப் பாராளுமன்றத்திற்கு வந்து விட்டதாகக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்தியாவில் பாராளுமன்றமோ, சட்டசபைகளோ இயற்றும் சட்டங்கள் நீதிமன்றங்களின் பரிசீலனைக்குட்பட்டவை. அதுவும் தவிர, இந்தியாவில் குடிமகனின் அடிப்படை உரிமைகள் வரையறுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்தக் காரணங்களினாலும், இங்கிலாந்தின் பாராளுமன்ற உரிமைகள் அனைத்தும், இந்தியப் பாராளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் அப்படியே வந்துவிட்டன என்று எடுத்துக் கொள்ள முடியாது" என்று சொல்லியிருக்கிறதாம்.
ஆக 'தி இந்து' பத்திரிக்கை விவகாரத்தில் (அதற்கு முந்தைய பல விவகாரங்களிலும்) தமிழக சட்டமன்றம் செய்தது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.
சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1
எதற்குரியது நம் வாழ்க்கை?
7 hours ago
No comments:
Post a Comment