Saturday, December 27, 2003

இந்தியக் கல்வித்துறை பற்றி

பாலா சுப்ராவின் வலைப்பதிவு மூலம் நியூயார்க் டைம்ஸ் கட்டுரை படிக்கக் கிடைத்தது (உள்ளே நுழையப் பதிவு செய்ய வேண்டும்).

இந்தியாவிலும் கல்வித்துறை பெரும் தொல்லையில் உள்ளது. என் நண்பன் சத்யநாராயணுடன் பலமுறை கல்விமுறை பற்றி விவாதித்திருக்கிறேன். எனக்குள் பல குழப்பமான கருத்துகள் உள்ளன. எழுத எழுதத்தான் தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் என் கருத்தினை சுருக்கமாக முன்வைக்கிறேன்.

இப்பொழுதுள்ள கல்விமுறையின் சில பிரச்சினைகள்:

1. ஆரம்பக் கல்வி கூட பலருக்குக் கிடைப்பதில்லை.

2. பொருளாதார உயர் வர்க்கத்தினர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் குழந்தைகளை அனுப்பும் நகர்ப்புறப் பள்ளிகளில் அரைகுறைப் படிப்புதான் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே குறியாக இருக்கிறது. அறிவு பெறுவது என்பது இரண்டாம் பட்சமோ, மூன்றாம் பட்சமோ. பல கலைகளையும் கற்பது, முக்கியமாக வாழ்க்கைக்குத் தேவையான பொது அறிவு பெறுவது என்பது இம்மியளவும் இல்லை.

3. நகரல்லா மற்ற இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளும், அரசினர் பள்ளிகளும் ஒன்று சேர, தரமற்றதாகவே உள்ளன.

4. தப்பித் தவறி மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்து வெளியே வருபவர்கள் அனைவருக்கும் கல்லூரிகளில் இடமில்லை. மிஞ்சிப் போனால் அஞ்சல்வழிக் கல்வி கற்கலாம். அவ்வாறு இளங்கலைப் படிப்பிற்கு அஞ்சல் வழிக் கல்வியில் சேருபவர்களால் சரியாகப் மனதை செலுத்திப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை.

5. எல்லாப் படிப்பும் முடித்தாலும் வேலை என்று வரும்பொழுது கல்விக் கூடங்கள் சரியான முறையில் பயிற்சி கொடுக்காததனால் மாணவர்களால் 'வேலைக்கு லாயக்கற்றவர்களாக' இருக்கின்றனர். இதனை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். என் அலுவலகத்தில் வேலைக்கு ஆளெடுக்கும்போது நேர்முகத்தேர்வுக்கு வருபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

இத்தனையையும் மீறி இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் துடிப்புடன் நாட்டை முன்னோக்கி செலுத்தி வருகிறார்கள். அந்நியச் செலாவணி இருப்பிலிருந்து, பல்வேறு பொருளாதார அளவுகோல்களிலும் 'இந்தியா ஜொலித்துக் கொண்டுதான்' இருக்கிறது. ஆனால் நம் நாட்டின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தொடங்கினால் இன்னமும் எவ்வளவு ஜொலிப்பு கூடலாம்?

என்னுடைய சில (முற்றுப்பெறாத) விடைகள்:

1. மேல்நிலை வரை கட்டாய இலவசக் கல்வி

மத்திய, மாநில அரசுகள் இதற்கான முழுச்செலவையும் ஏற்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒன்றிலிருந்து பனிரெண்டாவது வரையான கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், உடை, உணவு ஆகியவை அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும். வீடுகளில் தங்கிப் படிக்க வசதியில்லாத அனைவருக்கும் இலவசமாகத் தங்குமிடமும் அளிக்க வேண்டும்.

பணம் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து, போஷாக்கான உணவும், புத்தாடைகளும், கல்வியையும் வழங்கலாம். இல்லாவிட்டால் அரசினர் கல்விக்கூடங்களில் மற்றவர்களுடன் சேர்ந்து படிக்கவும் வைக்கலாம். அவர்கள் இஷ்டம். ஆனால் மொழி, மத, சாதி, பொருளாதார வித்தியாசம் பார்க்காது, யார் வேண்டுமானாலும் அரசு பள்ளிக்கூடங்களில் இலவசமாகக் கல்வி, உடை, உணவு, புத்தகம் ஆகியவற்றையும், வேண்டுபவர்களுக்குத் தங்குமிடமும் கொடுக்கப்பட வேண்டும்.

2. தனியார் மூலம் அரசின் கல்வி நிலையங்கள் நடத்துதல்

அரசினால் மேற்சொன்ன அளவிற்கு ஆசிரியர்களை நியமித்து வேலை செய்ய வைக்க முடியுமா என்று தெரியவில்லை. அமெரிக்காவில் இருப்பது போல, தனியார் நிறுவனங்களைக் கொண்டு அரசின் பள்ளிகளை நடத்த வைக்கலாம். அதாவது அரசு பள்ளிக்கூடக் கட்டிடங்களைக் கட்டித் தந்து, ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் நடத்துவதற்கு நீண்ட கால அளவிலான குத்தகைக்குத் தனியார் நிறுவனங்களிடம் விடலாம். இந்தத் தனியார் நிறுவனங்களுக்கான தேர்வு ஏலத்தின் மூலம் முடிவு செய்யப்படும். எந்த நிறுவனம் சிக்கனமாக, அதே நேரத்தில் செழுமையாக, குறைந்த பட்சக் கல்வியறிவைப் புகட்டும் என்பதை மனதில் வைத்து நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு வருடத்திற்கு படிப்புக்கு என்ன செலவாகிறதோ, அதே பணத்துக்கான 'கல்வி வரவு' (education credit) இப்பள்ளிகளில் படிக்காமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். மீதிச் செலவினை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வர். இதன்மூலம் யாரும் தங்கள் வரிப்பணம் பிறர் குழந்தைகளை மட்டும் படிக்க வைக்கிறது என்று அலுத்துக்கொள்வதைத் தடுக்கும்.

இந்தத் திட்டத்தை பஞ்சாயத்துகள், நகரமன்றம் ஆகியவற்றின் மூலமாக நடத்த வேண்டும்.

3. மேல்நிலைப் பள்ளிகளுக்கு மேலான கல்வி அனைத்தையும் தனியார் நிறுவனங்கள்தான் முக்கியமாக நடத்த வேண்டும். ஒருசில மாநில அரசுகள் விரும்பினால் கல்லூரிகளைக் கட்டலாம். கல்லூரிப் படிப்பிற்கு மிகக் குறைந்த வட்டியில் வேலை கிடைக்கும் போது திருப்பிக் கட்டுமாறு கடன் வழங்கப்பட வேண்டும்.

அதாவது மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி. அதற்கு மேல் கட்டணக் கல்வி. அந்தக் கட்டணத்தையும், மற்ற செலவுகளையும் கட்ட முடியாதவர்களுக்கு மிக எளிதாக கடன் வழங்கப்பட வேண்டும்.

இந்த முறை அமெரிக்காவில் திறம்பட இயங்கி வருகிறது. கடன் வாங்கிய மாணவர், வேலைக்கு சேர்ந்த பிறகு கடனைத் திருப்பிக் கட்ட ஆரம்பித்தால் போதும்!

4. மாறுபட்ட கல்வியினை வளர்த்தல்

மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரத்திற்கு மேல் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்ட வேண்டியது அவசியமில்லை என்று தோன்றுகிறது. அப்படி படித்துக் கிழிக்க உண்மையில் ஒன்றுமே இல்லை! ஆதலால் ஒரே பள்ளிக்கூடக் கட்டிடத்தில் மூன்று அடுக்குகளாக ஷிஃப்ட் முறையில் பாடம் நடத்தலாம். காலை 7-10, 11-14, 15-18 என்று மூன்று வகுப்புகள் நடத்தலாம். இரவு நேரத்தில், அதாவது 19.00 மணி முதல் 22.00 வரை வயது முதிர்ந்தோர், படிப்பறிவில்லாத பிறர் ஆகியோருக்கு தொழில்முறைப் பாடம் நடத்த இதே கட்டிடங்களைப் பயன்படுத்தலாம். இதனால் கட்டிடம், நூலகம், கணினி மையம், சோதனைச் சாலைகள், விளையாட்டுப் பயிற்சிக்கூடம் மற்றும் களங்கள் முதலியனவற்றைத் திறம்பட உபயோகிக்கலாம்.

அதைத் தவிர்த்து, சிறு குழுக்களாக அரசின் கல்வித் திட்டத்தின் கீழல்லாது, தேர்ச்சி பெற்ற ஆசிரியரின் கீழ் சொந்தமாகக் கல்வி கற்க விரும்புபவருக்கும் அரசின் கல்விக்கூடங்களில் உள்ள நூலகம், கணினிகள், சோதனைச் சாலைகள் ஆகியனவற்றைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்து தரப்பட வேண்டும். குருகுலக் கல்வி போல ஒரு ஆசிரியர், அவரிடம் 20 மாணவர்கள் ஆரம்பத்திலிருந்து 12ஆவது வகுப்பு வரை படிக்கலாம். 10ஆவது, 12ஆவது பாடங்களின் தேர்வுகளை அவர்கள் தேசியத் திறந்த வெளிக் கல்விமுறையின் கீழ் எழுதலாம். இவ்வாறு தேர்வெழுதித் தேர்ந்தவர்கள் கல்லூரிகளில் சேரத் தடையெதுவும் இல்லை.

'கல்வி வரவு' முறை மூலம் ஒவ்வொரு மாணவருக்காகவும், போதனை செய்யும் ஆசிரியருக்கு ஒரு குறிப்பிட்ட பணமும், மாணவர் படிப்புக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் கிடைத்து விடும்.

5. இளங்கலைக் கல்லூரிப் படிப்பினை அஞ்சல் வழிக் கல்வி மூலம் அதிகரித்தல்

ஒவ்வொரு ஊரிலும் 'டுடோரியல்' கல்லூரிகள் போலத் தனியார் கல்லூரிகள் அமைக்கலாம். இந்தக் கல்லூரி ஒருவரது வீட்டு மாடியிலேயே நடத்தப்படலாம். மாணவர்கள் அஞ்சல் வழிக் கல்வித்திட்டத்தில் சேர வேண்டும். அதற்கு மேல், இந்த 'மாடிவீட்டுக் கல்லூரியில்' பதிவு செய்து கொண்டு, அங்குள்ள ஆசிரியரிடம் அஞ்சல் வழிக் கல்விக்கான பயிற்சி பெறலாம். கல்வி பயிலும் நேரம் வசதிக்கேற்ப வைத்துக் கொள்ள முடியும்.

6. தனியார் கல்லூரிகள் அமைக்க இடர்பாடுகளைக் குறைத்தல்

தற்பொழுது கல்விக்கூடங்கள் அமைக்க அறக்கட்டளைகளால்தான் முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் லாபம் செய்ய நினைக்கும் நியாயமான தொழில்முனைவோரால் கல்லூரிகளை அமைக்க முடியாது. திருட்டுத்தனமாக பணத்தைக் கொள்ளையடிக்க நினைப்பவரால்தான் அறக்கட்டளை என்ற பெயரால் கல்லூரிகள் அமைத்து, 'நன்கொடை' என்ற பெயரால் வசூல் செய்ய முடிகிறது. இந்தக் குறைபாட்டினை நீக்க, லாப நோக்கு நிறுவனங்களும் கல்லூரிகளை அமைக்கலாம், அதில் லாபம் ஏற்பட்டால் அதைப் பங்குதாரர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டமாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதன்மூலம் மிக அதிக அளவில் மூலதனம் கல்லூரிகள் அமைப்பதில் வரும். இந்தக் கல்லூரிகளும் கல்வி அமைச்சகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில்தான் இயங்கும். ஒவ்வொரு படிப்பிற்கும் அதிகபட்சம் எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிக்கப்படலாம் என்று நிர்ணயிப்பது கல்வித்துறையின் வேலையாகும். இப்பொழுது மின்சாரம் கிட்டத்தட்ட இந்த முறையில்தான் கட்டுப்படுத்தப் படுகிறது. மும்பை, தில்லி போன்ற பெருநகரங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் தனியார், விநியோகிப்பதும் தனியார். அரசு, மின்சாரத்தின் அதிகபட்ச விலையை மட்டும் நிர்ணயிக்கிறது. தொலைதொடர்புத் துறையிலும் இவ்வாறே. கல்வித்துறையிலும் இதைச் செய்ய முடியும்.

இப்பொழுது சிறுபான்மையினருக்கு மட்டுமே (கிறித்துவ, இஸ்லாமியர்) அறக்கட்டளை மூலம் கல்விக்கூடங்கள் அமைப்பது எளிதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்களை நீக்குவது உடனடி அவசியமாகிறது.

---

இதனாலெல்லாம் இந்தியாவில் கல்விக்குறைபாடுகள் ஒரேயடியாக நீங்கி விடும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஓரளுவுக்குப் பிரச்சினை குறையும் என்று தோன்றுகிறது. உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment