Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1

The Indian Newspaper Society, Media Development Foundation, The Madras Union of Journalists ஆகியோர் இணைந்து நடத்திய "Freedom of Press and Legislative Privilege" என்னும் தலைப்பில் ஒரு கூட்டரங்கம் இன்று சென்னையில் நடந்தது. தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறிய 'தி ஹிந்து', 'முரசொலி' தொடர்பான உரிமைப் பிரச்சினை, அதைத் தொடர்ந்து தமிழக போலீஸ் நடத்திய கூத்து, இப்பொழுது உச்ச நீதிமன்றத்துக்கு முன் இருக்கும் வழக்கு ஆகியவை பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

இதழியல் மாணவர்கள், கவலையுற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் தங்கள் கருத்துக்கள் போய்ச்சேருமாறு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 'தி இந்து' ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் ஷேகர் குப்தா, 'தி இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி' தலைவர் வீரேந்திர குமார், சென்னைப் பத்திரிகையாளர்கள் யூனியனின் தலைவர் பக்வான் சிங் ஆகியோர் பேசினர்.

நீதிபதி கே.டி. தாமஸ்
நீதிபதி தாமஸ் அரசியல் நிர்ணயச் சட்டம் சட்டமன்றங்களின், பாராளுமன்றத்தின் உரிமைகள் பற்றி என்ன சொல்கிறது, ஊடகங்களின் சுதந்திரம் எந்த அளவிற்கு என்று சொல்கிறது ஆகியவை பற்றி விளக்கினார். அரசியல் நிர்ணயச் சட்டம் ஊடகங்களுக்கு என்று பிரத்தியேகமாக எந்த உரிமையையும் கொடுக்கவில்லை என்றாலும், தனிக் குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலேயே ஊடகங்களுக்கான உரிமையும் வந்து விடுகிறது என்றார். இந்த உரிமைகளுக்கும் 'reasonable restrictions' என்று ஒருசில நியாயமான கட்டுப்பாடுகளை அரசியல் நிர்ணயச் சட்டம் விதித்திருக்கிறது என்றார். இவை எட்டு கட்டுப்பாடுகள். அவர் சொன்னதை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை. இந்த எட்டு விஷயங்களுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியது தனிக் குடிமகன், ஊடகங்கள் ஆகியவற்றின் கடமை. இந்த எட்டுக் கட்டுப்பாட்டில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்காமை, சட்டம் ஒழுங்கு, நீதி ஆகியவற்றுக்குக் கேடு விளைவிக்காமை, நீதிமன்றங்களை அவதூறு செய்யாமை ஆகியவை அடங்கும். ஆனால் முக்கியமாக இந்த எட்டில், சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றினை அவதூறு செய்யாமை ஆகியவை கொடுக்கப்படவில்லை என்றார் தாமஸ்.

மேலும், அரசியல் நிர்ணயச் சட்டம், பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்கள் மூலம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு சட்டங்கள் இயற்றும் வரையிலும் தற்காலிகமாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுநாள் வரையில், சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்களாக இயற்றவில்லை. தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை நிரந்தரமாக ஆக்கிவிட்டனர். இதுவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துகிறது என்றார் தாமஸ்.

எமர்ஜென்சி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார் தாமஸ். இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை சிறையில் அடைந்திருந்தார். 18 மாதமாக சிறையில் இருந்த மொரார்ஜி தேசாயின் மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே பரோலில் அவரை வெளியே விட்டார் இந்திரா காந்தி. மொரார்ஜி தேசாய் தன் வீட்டுக்கு போயிருந்த அதே சமயத்தில் இந்திரா காந்தியும் அவர் வீட்டுக்கு வந்து அவருடன் பேச விரும்பினாராம். அப்பொழுது அவருடன் பேச மறுத்த மொரார்ஜி, அவருடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். (1) புதிதாக யாரைக் கைது செய்தாலும், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை (2) ஏற்கனவே அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுதலை (3) பத்திரிகைகள் மீது அப்பொழுது விதிக்கப்பட்டிருந்த pre-censorship, அதாவது முன்-தணிக்கை நீக்கம்.

அப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் தாங்கள் என்ன செய்தி அச்சிடப்போகிறோம் என்பதை அரசின் தணிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர்கள் அனுமதித்த செய்தியை மட்டும்தான் அச்சிட வேண்டும்.

இந்திரா காந்தி முதலிரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டாலும் படுவேனே தவிர மூன்றாவது நிபந்தனைக்கு உட்பட மாட்டேன் என்று மொரார்ஜியை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டாராம்.

No comments:

Post a Comment