Sunday, January 11, 2004

தமிழ் இலக்கியம் 2004 பற்றி

எஸ்.பொ என்றழைக்கப்படுகிற எஸ்.பொன்னுதுரை, இலங்கைத் தமிழ் எழுத்தாளர். இதற்கு மேல் இவரைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இவரது கதைகளை நான் இதுவரை படித்ததில்லை. நேற்றுதான் இவர் எழுதிய, பலத்த சர்ச்சைக்குள்ளான 'தீ' என்ற நாவல் என் கைக்குக் கிடைத்தது. இன்னமும் படிக்க ஆரம்பிக்கவேயில்லை. (எஸ்.பொவுடன் மாலனின் நேர்முகம் திசைகள் இதழிலிருந்து 1 | 2 | 3 | 4)

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆர்.வெங்கடேஷிடம் பேசிக்கொண்டிருந்தபோது 'தமிழ் இலக்கியம் 2004' என்னும் மாநாட்டினை எஸ்.பொ நடத்தப்போவதாகவும், அந்த விழா நடத்தும் குழுவில் தானும் ஒரு அங்கத்தினர் என்றும், தன்னுடைய 'முதல் மழை' என்னும் சிறுகதைத் தொகுதியும் அதில் வெளியிடப்படுகிறது என்றும் சொன்ன வெங்கடேஷ், அந்தப் புத்தகத்தை வெளியிடும்போது அதை நான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்! இந்த மாதிரி ஒரு வாய்ப்பு வந்தால் அதைத் தட்ட முடியுமா? அப்பொழுதுதான் அவரிடம் எஸ்.பொவைப் பற்றி மேலும் கேட்டேன். ஏன் இப்படி ஒரு பிரம்மாண்டமான விழாவை எஸ்.பொ சென்னையில் நடத்துகிறார் என்றேன். வெங்கடேஷ் தனக்கும் தெரியாது என்றார். நேற்றைய விழாவினைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட ரூ. ஐந்து லட்சத்துக்கும் மேல் செலவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. அத்தனையும் எஸ்.பொ, அவரது மகன் பொன்.அநுர ('மித்ர' பதிப்பகம்) ஆகியோரிடமிருந்து வந்திருக்கின்றன.


தமிழ் இலக்கியம் 2004 - சர் பிட்டி தியாகராயா அரங்கம்

எஸ்.பொ மீது தமிழ் எழுத்துலகம் வைத்துள்ள மரியாதை, தூரத்திலிருந்து பார்க்கும்போது, புரிகிறது. அவருக்கு தமிழ் எழுத்துலகின் மீதுள்ள அபிமானமும் புரிகிறது. எஸ்.பொ, புலம்பெயர்ந்தவர்கள்தான் இனி தமிழ் எழுத்தை முன்னிறுத்திச் செல்வார்கள் என்னும் கருத்துடையவராம். அதை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது வாழ்வின் அனுபவங்கள் அவரை அந்தக் கருத்துக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். புலம்பெயர்ந்தவர்களால்தான் ஒரு மொழி பிழைக்கக்கூடும் என்றால் அம்மொழி செத்து விட்டது என்றே பொருள்.

தமிழ் இலக்கியத்துடனான முழுப் பரிச்சயம் எனக்கு ஏற்பட ஆரம்பித்தது ஒன்பது மாதங்களாகத்தான். அதனாலேயே நேற்றைய நிகழ்ச்சி எனக்கு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. தமிழ் இலக்கிய உலகிற்கு பெருந்தொண்டாற்றிய ஆறு பேர்கள் மேடையிலே வாழ்த்தப்பட்டனர். அவர்களை ஒருசேரக் காண முடிந்தது. சாஹித்ய அகாதெமியின் தற்போதைய தலைவர் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் (சற்றே நீளமான) ஆங்கில உரையைக் கேட்க முடிந்தது. நடிநடுவே தன் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வாசித்தார். முக்கியமாகச் சொல்லவேண்டியது அவரது 'காந்தியும், ஒரு கவிதையும்' என்ற கவிதை. பொதுமேடையில் மதவாதம், அடிப்படை வாதம், ஒப்புரவாள்கையற்ற நிலை, அரசினால் கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறை, அதையெல்லாம் மீறி 'கலை கலைக்காகவே' என்று எழும் இலக்கியம் பற்றி அருமையாகப் பேசினார் சச்சிதானந்தன்.

அதன்பின்னர் சிட்டி, லஷ்மி கிருஷ்ணமூர்த்தி, வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தி.க.சிவசங்கரன், டொமினிக் ஜீவா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். ஒவ்வொருவரது பங்களிப்பைப் பற்றியும் பேச்சாளர்கள் விளக்க, 94 வயதான சிட்டி முதல் அனைவரும் தங்களை கவுரவித்த விழாக்குழுவினரைப் பாராட்டினர். டொமினிக் ஜீவா பேச்சு கண்கலங்க வைத்தது. வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தி.க.சி போன்றோரின் அடக்கம் வியக்க வைத்தது.

No comments:

Post a Comment