Sunday, January 04, 2004

சங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு

இன்றைய சன் நியூஸ் சங்கம் நிகழ்ச்சியில் மாலன், மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவை சந்தித்து உரையாடினார். இந்த உரையாடல் பொதுவாக மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் எழுத்து பற்றியது. இதற்கு முன்னர் நான் பார்த்த சங்கம் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு புத்தகம், அதன் ஆசிரியர் மற்றும் அவர்களைச் சார்ந்தவை என்று போகும்.

* மலேசியத் தமிழ் எழுத்தில் (ரெ.காவின் எழுத்தில்) இலங்கைத் தமிழின் தாக்கம் இருக்கிறதா என்று கேட்டார் மாலன். (எ.கா: 'கேலி செய்தல்' - தமிழ்நாட்டு வழக்கு; 'பகடி பேசுதல்' - இலங்கை வழக்கு). ரெ.கா இந்தப் பேச்சு மலேசியத் தமிழில் இருப்பதாகவும், அவர்களுக்குள்ளே பேசும்போது இவற்றைப் புழங்குவதாகவும், அதுதான் எழுத்தில் வெளிப்படுகிறதென்றும் சொன்னார்.

* மலேசியத் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை விளக்கினார். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் கூலித் தொழிலாளிகளாகப் போனவர்களில் சிலர் அப்பொழுதே எழுதப் படிக்கக் கூடியவர்களாக இருந்தனர். மலேசியாவில் தொடக்கத்தில் தமிழில்தான் புத்தகங்கள் பதிப்பாயின. அதன்பின்னர்தான் சீன, மலாய் மொழிகளில். தொடக்கத்தில் பதிப்பான புத்தகங்கள் மதங்களைப் பற்றியது (இந்து, கிறித்துவம்). பிறகு இந்திய சுதந்திரம் பற்றிய எழுத்துக்கள் வர ஆரம்பித்தன. பின்னர் சீர்திருத்தம் தொடர்பான (பெரியார், திராவிடப் பரம்பரை) எழுத்துக்கள் - தமிழர்களின் வாழ்வு, அது எப்படி சீன, மலாய் மக்களின் வாழ்வை விடப் பின்தங்கிய நிலையில் உள்ளது என்பன போன்றவை.

* இப்பொழுதும் இவையே இருப்பதாகவும், 'நவீனத்துவம்', 'மாய யதார்த்தம்', 'பின் நவீனத்துவம்' போன்றவகை எழுத்துக்கள் மலேசியத் தமிழில் இல்லை என்றும் சொன்னார். முன்னர் தான் படிக்கும்போது இம்மாதிரியான நவீன எழுத்துக்களை இரு பக்கங்களுக்கு மேல் படிக்க முடியாது விட்டுவிட்டதாகவும், இப்பொழுது அவைகளைப் படித்து, அவர்கள் கதை சொல்லும் முறையிலும் 'ஏதோ' ஒன்று இருக்கிறது என்று சற்றே புரிந்துகொள்வதாகவும் சொன்னார். 1992 வரை தன் அலுவல் காரணமாக அதிகம் எழுதியதில்லை, எழுத்து பகுதிநேரப் பொழுதுபோக்காக இருந்தது என்றும், இப்பொழுது ஓய்வுக்குப் பின்னர் முழுநேரம் எழுதும்போதுதான் தான் முன்னர் எழுதியதில் உள்ளது மாதிரி இல்லாமல், அடர்த்தியோடு எழுத முயல்வதாகச் சொன்னார். அவரது தற்போதைய சிறுகதைகளில் மாய யதார்த்தம், நவீனத்துவ சாயல்கள் இருக்கும் என்றார்.

* சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோரது எழுத்துக்கள் தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றார். ஜெயகாந்தனது எழுத்துக்களுடன் முன்னமே பரிச்சயம் இருந்தாலும், மீண்டும் அதில் மூழ்கிப் படித்தது கடந்த பத்து வருடங்களில்தான் என்றார்.

* மலேசியத் தமிழர்கள் பள்ளிகளில் மலாயில்தான் படிக்கிறார்கள். இதனால் தமிழ் ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறது என்கிறார். (தமிழ்நாட்டில் கூட தமிழ் இக்கட்டான சூழலில்தான் இருக்கிறது. இங்கு பலரும் ஆங்கிலத்தில்தான் கல்வி கற்கிறார்கள்.)

* மற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர்களாக பீர் முகமது, ஜீவானந்தன் (மற்றும் இரண்டு பெயர்கள், ஆனால் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை) ஆகியவர்களைக் குறிப்பிட்டார்.

* மாலன் கணினி/இணையம் பற்றி விசாரிக்கையில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் யாரும் கணினி/இணையத்தைப் பயன்படுத்துவதில்லை, இவரும், அறிஞர் ஜெயபாரதி (அகத்தியம் குழு) ஆகிய இருவர் மட்டுமே கணினி/இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் சொன்னார். முரசு அஞ்சல் மென்பொருளை முதலில் பயன்படுத்திய தனி நபர் நுகர்வர் இவர்தான் என்றும் சொன்னார். (கணினியில் தமிழில் எழுதப் வகை செய்யும் முக்கிய மென்பொருளான முரசு அஞ்சலை உருவாக்கிய முத்து நெடுமாறன் மலேசியாக்காரர்.)

===

எழுத்தாளர் ரெ.கா தற்பொழுது தமிழகத்தில்தான் இருக்கிறார். அடுத்த வாரம், 10, 11 தேதிகளில் சென்னையில் நடக்கும் "தமிழ் இலக்கியம் 2004" என்னும் விழாவில் கலந்து கொள்ளப் போகிறார்.

மாலன், வைரமுத்து சந்திப்பு

No comments:

Post a Comment