தமிழகம் முதற்கொண்டு இந்தியாவில் அரசின் முதலீடு சுகாதாரம் மற்றும் தொடக்கநிலை மருத்துவத்தில் போதாக்குறையாகவே இருந்து வருகிறது. ஆனால் போலியோ சொட்டு மருந்து விஷயத்தில் இந்திய அரசின் இயக்கம் வெகுவாகப் பாரட்டப்பட வேண்டியது. போன மாதமே என் வீட்டிற்கு ஒரு சுகாதாரத் துறை அலுவலர் வந்து முதலாம் தவணையாக ஜனவரி நான்காம் தேதி என் குழந்தைக்கு போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார். கடந்த சில நாட்களாகவே தெருவெங்கும் ஆட்டோ வண்டியில் திரைப்படப் பாடல்களைப் பாடிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் குரலில் குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டும் என்றும், ஏற்கனவே கொடுத்திருந்தாலும், மீண்டும் கொடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது.
நேற்று நான் என் வீட்டின் அருகில் உள்ள நகரமன்ற சுகாதார மையத்துக்குச் சென்று என் குழந்தைக்கு சொட்டுமருந்து கொடுத்தேன். மக்கள் உள்ளே வந்தவண்ணம் இருந்தனர். சிறிதும் நேரம் எடுக்காமல் வந்தவுடனேயே ஒரு ஊழியர், ஒரு தாளில், எத்தனையாவது குழந்தை என்று கணக்கிட்டார். அடுத்து மற்றுமொரு ஊழியர் வாயில் இரண்டு சொட்டுகளை விட்டு, கையில் ஒரு 'சாக்லேட்' கொடுத்தார். முதலாமவர் குழந்தையின் கையில் 'அழியா மசி'யினால் குறியிட்டார். மொத்தமாக ஒரு நிமிடம் பிடித்தது. ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாது மக்கள் உள்ளே வந்து, வேலையை முடித்துக் கொண்டு, உடனடியாக வெளியேறினர்.
இன்று செய்தித்தாளில், நேற்று 70 லட்சம் பேருக்கு தமிழகத்தில் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது என்று செய்தி வந்துள்ளது. ஒரே நாளில் மிகவும் நேர்த்தியாக தமிழகமெங்கிலும் வேலை நடந்ததோடு, புள்ளி விவரமும் உடனடியாக வந்து சேர்ந்துள்ளது.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
No comments:
Post a Comment