Tuesday, January 20, 2004

இந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி

இன்று நடந்த போட்டியில் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. கடைசியில் ஸிம்பாப்வே எதிர்பாராத விதத்தில் போராட ஆரம்பித்ததால் அதை எதிர்பார்க்காத இந்திய அணி சற்றே தடுமாறியது. ஆனால் ஸிம்பாப்வே விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்ததால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

திராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்தில் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.

ஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.

ஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவது பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.

சிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸிம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார்! (அது அவுட்தான்! ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.

சாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.

யுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)

ஸ்கோர்போர்டு

முந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு

No comments:

Post a Comment