Wednesday, November 05, 2003

கல்கியில் மேலோட்டமாகப் படித்தது

மாலி என்பவர் எழுதி இயக்கிய நாடகம் ஒன்று:
இதில் தலித் ஒருவர் தனக்குப் பிறக்கும் குழந்தையையும் அவ்வூர் சாதி வெறி பிடித்த மிராசுதாருக்குப் பிறக்கும் குழந்தையையும் மாற்றி வைத்து விடுகிறார். தலித் குழந்தை மிராசுதாரின் குழந்தையாக வளர்ந்து வடமொழி கற்று பின்னர் பார்ப்பன மடம் ஒன்றின் மடாதிபதியால் தனக்கு அடுத்த பட்டத்துக்கு வருமாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அப்பொழுது அந்த தலித் உண்மையை வெளியிடுகிறார். இதனால் மடாதிபதியின் மனம் மாறுவதில்லை, அந்த தலித் குடும்பத்தில் பிறந்து மிராசுதாரின் மகனாக வளர்ந்தவரே மடத்தின் அடுத்த பட்டத்துக்கு வருவார் என்று ஏற்றுக் கொள்கிறாராம்.

கல்கி கட்டுரைப்படி இந்த நாடகத்துக்கு காஞ்சி சங்கர மடத்தின் ஜெயேந்திர சரசுவதி எதிர்ப்பு தெரிவித்து இந்த நாடகத்தை நிறுத்துமாறு சொல்லி விட்டாராம். நிறுத்தாவிட்டால் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்படும் என்றும் மிரட்டியதாகச் செய்தி.

இதுவரை இது எந்த செய்தித்தாளிலும் வந்ததாக நினைவில்லை. இதில் கண்டிக்கத்தக்க ஒருசில விஷயங்கள் உள்ளன.

1. இந்த நாடகத்தில் ஜெயேந்திரருக்கு என்ன பிடிக்கவில்லை? நாடகத்தில் காட்டப்படும் மடம் சங்கர மடம் என்று சூசகமாக சொல்லப்படுகிறதோ என்னவோ, ஆனால் வெளிப்படையாக இல்லை போலத் தெரிகிறது. அப்படியே வெளிப்படையாகச் சொன்னாலும் என்ன தவறு?

2. ஜெயேந்திரர் என்ன சட்டத்துக்கும் மீறிய ஆசாமியா? இவருக்கு ஒரு நாடகத்தை நிறுத்தச் சொல்ல என்ன அதிகாரம்? அப்படியே இவர் மிரட்டலுக்குப் பணிந்து ஏன் நாடகாசிரியர் நாடகத்தை நிறுத்துகிறார்? இந்த நாடகத்தின் மேல் எழுதியவருக்கு நம்பிக்கை இருந்தால் தைரியமாக ஒரு சபாவுமா கிடைக்கவில்லை இதைப் போட?

மேலும் விவரங்களும் விளக்கங்களும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment