Saturday, November 01, 2003

கோலாக்களின் ஒழுக்கக் கேடான விளம்பரங்கள்

கோகா-கோலா, பெப்ஸி ஆகியவற்றின் குடும்பங்களில் உள்ள குளிர்பானங்களில் பூச்சி மருந்தின் அளவு, ஐரோப்பிய தரநிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட அதிகமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு இன்னமும் முடிந்த பாடில்லை. இப்பொழுது கூட்டுப் பாராளுமன்றக் குழு இதை விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களும் சற்றும் வெட்கமே இல்லாமல் விளம்பரங்களைக் காண்பித்துத் தள்ள ஆரம்பித்து விட்டனர்.

கோகா-கோலாவின் அச்சு விளம்பரங்களில் அந்நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரும், அவரது குடும்பத்தாரும் காணப்படுகின்ரனர். அதில் அந்த ஊழியர் "நான் என் வீட்டிலேயே கோகா-கோலாவைத் தான் குடிக்கிறேன், என் வீட்டாருக்கு நான் கேடு செய்வேனா?" என்ற வகையில் கேள்வி கேட்கிறார். இந்த விளம்பரத்தில் காணப்படுபவரை நம்ப வேண்டுமாம். நாமும் போய் கோக் குடிக்க வேண்டுமாம். தொலைக்காட்சி விளம்பரத்தில் வங்காளத்தவராக வரும் ஆமீர் கான் கோகா கோலாவின் நம்பகத் தன்மை பற்றி கேள்வியை எழுப்பி, மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு, பின்னர் தானே நான்கு பாட்டில்களைக் குடித்து விட்டு பெங்காலியில் பாடியும், ஆடியும் நம்மையும் கோக் குடிக்கச் சொல்கிறார். மனைவி சொல்வது பெங்காலியில் இருப்பதால் எனக்குப் புரியவில்லை, ஆனால் ஏதோ உலகத் தரம் வாய்ந்த பரிசோதனைச் சாலை கோகா-கோலாவில் ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டது போல ஒரு வரி வருகிறது.

பெப்ஸி தனது பிராண்ட் காவலர்களான ஷாருக் கான் மற்றும் சச்சின் டெண்டுல்கரை வைத்து இந்த பூச்சி மருந்து விவகாரத்தைப் பெரும் கேலிக்குள்ளாக்குகின்றனர்.

முதலில் தொலைக்காட்சி செய்தி ஒன்று வருகிறது: "பெப்ஸி முழுக்க முழுக்க பத்திரமானது"
ஷாருக்: "எல்லோரும் பெப்ஸி பத்திரமானது என்கிறார்கள். உண்மை அதுவல்ல"
இவ்வாறு சொல்லிக் கொண்டு பையில் இருந்து சாவி ஒன்றை எடுத்துக் கொண்டு பீரோவைத் திறந்து, அதில் சங்கிலி போட்டுக் கட்டியுள்ள பெட்டி ஒன்றைத் திறந்து "இங்கேதான் நான் பத்திரமாக பெப்ஸியை வைத்திருக்கிறேன்" என்று சொல்ல, அப்பொழுது அந்தப் பெட்டியை கன்னக்கோல் போட்டுத் திறந்து பெப்ஸியை ஏப்பம் விடும் சச்சின் டெண்டுல்கர் "ஹை ஷாருக்" என்கிறார்.
இப்பொழுது ஷாருக் சச்சினை அணைத்துக் கொண்டு "நீங்களே சொல்லுங்கள், பெப்ஸியை பத்திரமாக வைத்திருக்க முடிகிறதா என்று" என்று தேனொழுகச் சொல்லுகிறார்.

எவ்வளவு தூரத்துக்கு ஒழுக்கம் கெட்டுப் போயிருக்கிறார்கள்?

இப்படி விளம்பரங்கள் மூலம் கேலிக்குள்ளாக்கப் படக் கூடிய விஷயமா இந்த பூச்சி மருந்து எச்சம் விவகாரம்? அதுவும் கூட்டுப் பாராளுமன்றக் குழு வேலையை முடிக்கும் முன்னர்?

No comments:

Post a Comment