நேற்றைக்கு முந்தைய நாள் இந்திய-ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டியைப் பார்க்க பெங்களூர் சென்றிருந்தேன். இந்திய அணியின் பந்துவீச்சு கவலைக்கிடமாக உள்ளது. அன்றைய போட்டியில் முரளி கார்த்திக் ஒருவர்தான் ஓரளவுக்குத் திறமையுடன் பந்து வீசினார். நேஹ்ரா, ஜாகீர் கான் இருவரும் மிகவும் தாறுமாறாக, ஓர் இலக்கின்றி வீசினர்.
ஆடம் கில்கிறிஸ்ட், மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரும் மிக அருமையாக ஆடினர். கில்கிறிஸ்ட் முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடியவர்; ஆடினார். பாண்டிங் ஆரம்பத்தில் மிகவும் தடுமாறினார். கார்த்திக்கின் பந்து வீச்சில் திராவிட் ஒரு ஸ்டம்பிங்கைச் செய்திருந்தால் அவரை ஆட்டமிழக்க வைத்திருக்கலாம். பாண்டிங் தான் சந்தித்த முதல் ஐம்பது பந்துகளில் கிட்டத்தட்ட 25 ஓட்டங்களே எடுத்திருந்தார். ஆனால் அடுத்த ஐம்பது பந்துகளில் விளாசு விளாசி 75 ஓட்டங்கள் குவித்து 99 பந்துகளிலேயே சதத்தை எட்டினார் என்று ஞாபகம். இதில் ஆறு 'ஆறுகளும்' அடக்கம்.
சேவாக் துவக்கப் பந்து வீச்சாளர்களின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெகுவாகத் திணறினார். பிராட் வில்லியம்ஸ் மற்றும் மைக்கேல் காஸ்பரோவிச் இருவரும் கிட்டத்தட்ட மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறார்கள். சேவாக்கினால் தனது மட்டையை பந்தின் அருகில் சரியாகக் கொண்டுபோகவே முடியவில்லை. பின்னர் வேகம் குறைவாக வீசும் பிக்கெல், சைமாண்ட்ஸ், ஹார்வே போன்றவர்கள் வந்த பின்னர்தான் சேவாக்கினால் ஓட்டங்கள் பெற முடிந்தது. அவரது 'ஸ்கொயர் கட்' அடியை அடிக்கவே முடிந்தது. ஆனால் சச்சின் டெண்டுல்கர், வில்லியம்ஸை நன்கு அடித்து ஆடினார். சேவாக், டெண்டுல்கர் இருவரையும் ஒப்பிட்டுப் பேசுபவர்கள் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும். திறமை (மற்றும் வேகம்) குறைவாக உள்ள பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது மட்டும்தான் சேவாக்கினால், டெண்டுல்கர் அளவிற்கு அடிக்க முடிகிறது.
நிற்க. இந்தியா படுதோல்வி அடைந்தது. இதைப் பற்றி இங்கு, இப்பொழுது பேசிப் பிரயோசனமில்லை.
ஆட்டம் பார்க்க வந்தவர்களைப் பற்றி சிறிது சொல்லியே ஆக வேண்டும். பொதுவாக ஒருநாள் போட்டி ஆட்டத்தைப் பார்க்க வருபவர்கள் கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்க வருபவர்கள் போலத் தெரிவதில்லை. ஒரு திருவிழாவிற்கு வருவது போலத்தான் வருகின்றனர். கோமாளித்தனமான உடைகள் பரவாயில்லை, அவ்வப்போது பன்றியின் குரல்வளையை அறுக்கும்போது எழும் குரலை எழுப்பினாலும் பரவாயில்லை - மன்னித்து விடலாம். கேவலமாக 'மெக்சிகன் அலை' எழுப்பினாலும் பரவாயில்லை, விட்டு விடுவோம். கொடுமையிலும் கொடுமை, ஒரு இந்திய மட்டையாளர் பந்தை உள்வட்டத்திற்கு சற்று வெளியே தட்டிவிட்டாலும் போதும், நமக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் அத்தனை பேரும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எழுந்து நின்று ஏதோ பந்து எல்லைக்கோட்டைத் தாண்டிப் போய்விட்டது என்பது போல் நடந்து கொள்வதும், அந்தப் பந்தைப் பொறுமையாக எதிரணிக்காரர் பிடித்து எறிந்து ஒரு ஓட்டம் மட்டும் நம் அணிக்குக் கிடைக்கும் போது அத்தனை உற்சாகமும் போய் கீழே உட்காரும் போதும், நமக்கு வெறுப்பைத் தவிர வேறெதுவும் வருவதில்லை. மிக அருமையாகப் பந்து வீசிக்கொண்டிருப்பார் எதிரணிக்காரர். பின்னாலிருந்து ஒரு 8 வயதுச் சிறுவன் சேவாக் 'ஆறு' அடிக்க வேண்டும் என்று சத்தமிட்டுக் கொண்டிருப்பார். எங்கே, பந்து பேட்டில் பட்டால் போதாதா என்றவாறு சேவாக் தடவிக் கொண்டிருப்பார் அங்கே.
நல்ல ஆட்டத்தை ரசிக்க வேண்டுமென்றால், பார்வையாளர்கள் முதலில் எழுந்து நின்று குதிக்கக் கூடாது. பந்து எல்லைக் கோட்டைக் கடந்தபின் குதிக்கட்டும், கரகோஷம் முதல் 'பீப்பீ' ஊதுவது வரை எல்லாம் செய்யட்டும். பந்து வீச்சாளர் அடுத்த பந்து போடத் தொடங்கும்போது ஒழுங்காக உட்கார வேண்டும். பின்னால் உட்கார்ந்திருப்பவரும் அதே காசு கொடுத்துதான் ஆட்டத்தைப் பார்க்க வந்துள்ளார்.
ஆட்டத்தை நேரில் போய் பார்ப்பதற்கும், தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முதலில் இந்திய அரங்கங்களில் (சென்னை நீங்கலாக) 'மறுகாட்சி' (replay) காண்பிக்கச் செய்யும் வசதிகள் கிடையாது. ஒரு விக்கெட்டையோ, நான்கு/ஆறையோ கோட்டை விட்டால் அவ்வளவுதான். ஆனால் அரங்கத்தில் இருக்கும்போது அத்தனை தடுப்பாளர்களும் கண்ணுக்குத் தெரிவார்கள். தடுப்பு வியூகம் எவ்வாறு மாறுகிறது, எங்கெல்லாம் தடுப்பு வியூகத்தில் ஓட்டைகள் இருக்கின்றன, அதனை எப்படி மட்டையாளர் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை ரசிக்க அரங்கு சென்றால் மட்டுமே முடியும்.
ஆனால் இதையெல்லாம் மக்கள் பார்த்து வியந்ததாகத் தெரியவில்லை. தொண்டை கிழியக் கத்தி விட்டு, இந்தியாவின் தோல்வி நிச்சயமானவுடனே (யுவ்ராஜ் சிங் ஆட்டமிழந்ததும்) அனைவரும் கிளம்பி விட்டனர்.
ஒன்றெனவும் பலவெனவும், பொதுவாசகர்களுக்காக…
11 hours ago
No comments:
Post a Comment