சென்னை இஞ்சினியர் வடிவமைத்த ஏ.டி.எம்., ஜனவரி முதல் அமல்
பெங்களூர், நவ. 3.
சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர் வடிவமைத்த ஏ.டி.எம்., அடுத்த ஆண்டு முதல் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில் படித்தவர் அசோக் ஜுன்ஜுன்வாலா. இவர் சென்னையில் ஒரு நிறுவனத்தில் இஞ்சினியராக பணிபுரிகிறார். இவர் 30 ஆயிரம் ரூபாயில் ஏ.டி.எம்., இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். சாதாரணமாக தற்போது பயன்பாட்டில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரங்கள் எட்டரை லட்ச ரூபாய் மதிப்புடையவை. ஜுன்ஜுன்வாலா வடிவமைத்த ஏ.டி.எம்., இயந்திரம் மலிவாக உள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கிராமப்புறங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்தச் செய்தியினை விளக்குவது மிக அவசியமாகும். அஷோக் ஜுன்ஜுன்வாலா சென்னை ஐ.ஐ.டி யில் பேராசிரியர். 2002 ஆண்டில் 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றவர். ஏதோ ஒரு நிறுவனத்தில் 'இஞ்சினியராகப்' பணிபுரியவில்லை. இவரது சென்னை ஐ.ஐ.டி ஆராய்ச்சிக் குழு டெனெட் (TENET) என்று அழைக்கப்படுகிறது. வெறும் ஆராய்ச்சியோடு விட்டுவிடாமல் தன்னிடமே படித்த/ஆராய்ச்சி செய்த மாணவர்களை வைத்து சென்னையில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் அஷோக். அவற்றில் முக்கியமானவை:இந்த ஆராய்ச்சிக் குழுவும், இந்நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து கிராமப்புறங்களுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். என்-லாக் என்பது Wireless in the Local Loop (WiLL) முறையில் கிராமப்புறங்களில் இணைய இணைப்புகளை வழங்கும் நிறுவனமாக உள்ளது. மைடாஸ் இந்த WiLL கருவிகளை உருவாக்கித் தருகிறது.
தற்போது நகர்ப்புறத்தில் உபயோகத்தில் இருக்கும் ஏடிஎம் இயந்திரங்கள் (தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் இயந்திரம்) இந்தச் செய்தியில் குறிப்பிட்டவாறு எட்டரை லட்ச ரூபாய் செலவில் பொருத்தப்படுவது உண்மையே. இவ்வளவு விலை இருப்பதால்தான் இந்த இயந்திரத்தை கிராமப்புறங்களில், மக்கள் தொகை குறைவாக இருக்கும் இடங்களில் பொருத்துவது நடைபெறவில்லை. டெனெட் மற்றும் என் நண்பர் கண்ணனின் நிறுவனம் ஒன்று சேர்ந்து தயாரித்துள்ள இந்த ஏ.டி.எம் வேலை செய்வதை நான் இன்னமும் பார்க்கவில்லை. இந்த வாரம் நேரடியாகப் பார்த்து வந்தபின் அதைப் பற்றியும் மற்ற டெனெட் தொழில்நுட்பங்கள் பற்றியும் எழுதுகிறேன்.
ஐசிஐசிஐ வங்கி இந்தத் தொழில்நுட்பத்தில் அக்கறை காட்டியுள்ளதாக அறிகிறேன்.
தினமலர் இது போன்ற செய்திகளை வெளியிடும்போது கவனத்துடன், சற்றே விளக்கமாக வெளியிட வேண்டும்.
No comments:
Post a Comment