குருமூர்த்தியின் Legalising a fraud, the TRAI way கட்டுரை "New Indian Express" 29 அக்டோபர் 2003 இலிருந்து.
இவரது கட்டுரையைப் பற்றி படிக்கும் முன்னர் சில தகவல்கள்:
* இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கொள்கைகள் மிகவும் குழப்பமானதாகவும் வெகுவாக மாறிவருவதாகவும் இருந்திருக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தத் துறையே மிகவும் வேகமாக மாற்றம் அடைந்து வரும் துறை. புதிய தொழில்நுட்பங்கள் நாளுக்கும் வளர்ந்து கொண்டே வருகின்றன.
* விடுதலைக்குப் பின் 43 வருடங்களுக்கு இந்தியாவின் தொலைபேசித் துறை அரசின் கீழ்தான் இருந்து வந்தது. 1990களில்தான் அரசு தனியார் துறையினை உள்ளே வர அனுமதித்தது. அதிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் செல்பேசிச் சேவையில்தான் தனியார் அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது அரசு நிறுவனம் செல்பேசிச் சேவையை விரும்பியிருந்தால் கொடுத்திருக்க முடியும். நல்ல வேளை - அவ்வாறு ஒன்றும் செய்து விடவில்லை.
* 1992இல் ஆரம்பித்த செல்பேசிச் சேவை பல தனியார் நிறுவனங்களால் அளிக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் ஒரு நிமிடத்திற்கு ரூ 36.40 உள்ளூரின் அடுத்த செல்பேசியைக் கூப்பிட என்றெல்லாம் கொடுமையாக இருந்தது. அரசும் நாட்டைப் பல வட்டங்களாகத் துண்டாடி ஒரு வட்டத்திற்கு இரண்டு பேர்தான் செல்பேசிச் சேவையைக் கொடுக்க முடியும் என்று தீர்மானித்தது. இந்தச் சேவையை அளிக்கும் உரிமையைப் பெற அரசுக்கு லைசென்ஸ் பணம் கட்ட வேண்டும். தனியார் நிறுவனங்கள் கண்டபடி போட்டி போட்டுக் கொண்டு லைசென்ஸ் தொகையை ஏலத்தில் அள்ளி வழங்கி உரிமை பெற்று அதன்பின் செய்வதறியாது குழம்பிக் கிடந்தன.
* டில்லியைச் சேர்ந்த பார்தி (Bharti) நிறுவனம்தான் ஓரளவுக்கு செல்பேசியின் முழு வீச்சை உணர்ந்து அதன் படி வேகமான வளர்ச்சியை அடைய ஆரம்பித்தது. சிங்டெல் என்னும் சிங்கப்பூர் தொலைதொடர்பு நிறுவனம் இந்தக் கம்பெனியில் முக்கியப் பங்குதாரர். பார்தி நிறுவனம் இப்பொழுது இந்தியப் பங்குச் சந்தையில் புழங்கு வருகிறது. இவ்வ்வாறு பங்குச் சந்தையில் இடம்பெற்ற நாடுதழுவிய தனியார் தொலைதொடர்பு நிறுவனம் இது ஒன்றே. பங்குச் சந்தையில் இருப்பதால்தான் இந்நிறுவனத்துக்கு நிறைய மூலதனம் கிடைக்கிறது. மற்ற செல்பேசி நிறுவனங்கள் அனைத்தும் பணத்துக்கு திண்டாட்டம் போடுவதால் வேகமாக முன்னேறவும் முடியவில்லை, மக்களுக்கு சரியான சேவை அளிக்கவும் முடிவதில்லை.
* தொலைதொடர்புத் துறையின் பல அம்சங்கள் - ஒவ்வொரு வட்டத்துக்கும் இடைப்பட்ட பேச்சு (STD), வெளிநாட்டுக்கான தொடர்பு (ISD), இணையச் சேவை (Internet) ஆகியவற்றோடு செல்பேசியில்லாத கம்பி மூலம் வழங்கப்படும் சாதாரண உள்ளூர்த் தொலைபேசி இணைப்பு அனைத்தும் அரசின் கையில்தான் 1997 வரை இருந்து வந்தது. 1998இல் தான் இணையச்சேவையை எந்த நிறுவனம் வேண்டுமானாலும் வழங்கலாம் என்று அரசு அறிவித்தது. மேலும் இந்தச் சேவையை வழங்குவதற்கு லைசென்ஸ் கட்டணம் ஏதுமில்லை என்று அரசு அறிவித்தது.
செல்பேசிச் சேவையை வழங்க லைசென்ஸ் தொகை கட்ட வேண்டும் என்று அறிவித்த அரசுதான் இணையச் சேவை வழங்க லைசென்ஸ் தொகை வேண்டியதில்லை என்றும் எத்தனை பேர்கள் வேண்டுமானாலும் எந்தக் கட்டுதிட்டமும் இல்லாது இணையச் சேவை வழங்கலாம் என்று அறிவித்தது!
* 1999இல் தனியார் நிறுவனங்கள் லைசென்ஸ் தொகையைக் கட்டி கம்பி மூலம் வீடு, அலுவலகங்களுக்குத் தொலைபேசி சேவையை அளிக்கலாம் என்று அறிவித்தது.
* 2002இல் ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு செல்பேசி வழங்கும் நிறுவனங்களே இருக்கையில், இன்னும் இரண்டைச் சேர்க்கலாம் என்று தீர்மானித்து, ஒன்று அரசின் BSNL/MTNL என்றும் மற்றொன்று எந்தத் தனியார் நிறுவனமாகவும் இருக்கலாம் என்று அரசு அறிவித்தது. அப்படித்தான் இதுவரை கம்பி மூலம் மட்டுமே தொலைபேசி இணைப்புகள் கொடுத்து வந்திருந்த அரசு நிறுவனங்கள் BSNL/MTNL இரண்டும் செல்பேசிச் சேவையினை ஆரம்பித்தன.
* இந்த வருடத்தில்தான் அரசு தனியார்கள் STD, ISD சேவையினையும் அளிக்கலாம் என்றாக்கியதோடு, அதுவரை இந்தியாவில் ISD சேவையை அளித்து வந்து VSNL நிறுவனத்தையும் தனியாருக்கு (டாடா) விற்றது.
விண்திகழ்க!
4 hours ago
No comments:
Post a Comment