கல்கி 2/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 2
ப.சிதம்பரம் எழுதும் கட்டுரைத் தொடர் கல்கியில். இந்த வாரம் பேச்சுரிமை பற்றி எழுதியிருக்கிறார். அரசியல் சாஸனத்தில் வரும் அடிப்படை உரிமைகளில் சொல்லப்பட்ட 'பேச்சுரிமை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமை' பற்றி விளக்குகிறார்.
கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்: "பேச்சு வரம்பை மீறக்கூடாது. அதே சமயம் வரம்பு பேச்சுரிமையை நெறித்து விடக்கூடாது. பேச்சா, வரம்பா என்ற கேள்வி எழக்கூடாது, ஆனால் அத்தகைய கேள்வி அரிதாக எழுந்துவிட்டால் ஒரு ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அது போன்ற சமயங்களில், வரம்பு மீறிய பேச்சென்றாலும் அதனைச் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்."
இது ஏதோ மணி சங்கர் அய்யர்-ஜெயலலிதா தகராறை மனதில் வைத்து எழுதியது மாதிரி உள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் தமிழக, இந்திய அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் தரம் குறைந்து கொண்டே வந்திருக்கிறது. அரசியல் மேடைகளில் தரம் தாழ்ந்த, வரம்பை மீறிய பேச்சுக்கள் பல நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. மேடையில் சொல்லப்படும் குட்டிக் கதைகளாகட்டும், உடன்பிறப்புகளுக்கு வரையப்படும் கடிதங்களாகட்டும், எல்லாவற்றிலும் தரக்குறைவான சொற்கள், கருத்துகள், கீழ்த்தரமான வைதல்கள் மற்றும் வெறுப்பை வளர்க்கும் எண்ணங்கள்.
திமுக மாநாட்டில் முக்கிய தலைவர்கள் மேடையில் இருக்கும்போதே ஜெயலலிதாவை தரக்குறைவாக அசிங்கமான வார்த்தைகளால் தாக்கிப் பேச்சாளர்கள் பேசியுள்ளனர்.
இலக்கியமா, பிரச்சாரமா என்ற ஜெயமோகன்-கருணாநிதி சர்ச்சையிலும் கருணாநிதியும், இளையபாரதியும் மிகத் தரக் குறைவான, வரம்பு மீறிய சொற்களால் அர்ச்சனை செய்துள்ளனர். இதனையெல்லாம் சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமா?
மற்ற ஜனநாயக நாடுகளில் இப்படித்தான் மக்கள் நடந்து கொள்கிறார்களா?
-*-*-*-
சிதம்பரத்தின் கட்டுரையில் மேலும் வருவது:
* அவைத்தலைவர் நடந்து கொள்வது பற்றிச் சொல்கிறார். ஆனால் பொதுவாக 'கிசுகிசு' பாணியில் "முதலமைச்சரைக் கண்டித்த சபாநாயகரும் இருந்திருக்கிறார். முதலமைச்சருக்குப் பரணி பாடும் சபாநாயகரும் இருந்திருக்கிறார்." என்கிறார். ஏன் எடுத்துக்காட்டுகளுடன் யார் யார் எப்படி நடந்து கொண்டனர், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதக் கூடாது? என்ன பயம்?
* பொதுவாக "தமிழ்நாடு சட்டமன்றம் எப்படிச் செயல்பட்டது. இப்பொழுது எப்படிச் செயல்படுகிறது என்பதைச் சிந்தியுங்கள்." என்று விட்டு விடுகிறார். இப்படிப் பொதுவாகப் பேசாமல் இதற்கு முந்தைய சட்டசபைகளில் என்ன ஒழுங்காக நடந்தது, இப்பொழுது கெட்டுப் போய்விட்டது என்று விளக்கமாகச் சொல்ல வேண்டும்.
* சீரணி அரங்கம் இடிப்பு பற்றி அங்கலாய்க்கையில் "பேச்சுரிமையைக் காப்பாற்றுவது இருக்கட்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது இருக்கட்டும். நம்முடைய ஜனநாயகத்தின் சதுக்கங்களை முதலில் காப்பாற்ற வேண்டாமா?" என்கிறார். எனக்கென்னவோ சீரணி அரங்கம் இடிக்கப்பட்டதால் பேச்சுரிமையும், ஜனநாயகமும் ஒழிந்து போய்விடவில்லை. சீரணி அரங்கை இடித்ததைப் பல காரணங்களுக்காகக் கண்டிக்கலாம், ஆனால் பேச்சுரிமையைத் தடைசெய்யவே என்பது மாதிரி எழுதுவது சிதம்பரத்தின் மேலுள்ள நம்பிக்கையைக் குறைக்கிறது.
சிதம்பரம் தனக்குக் கிடைக்கும் பக்கங்களை வீணாக்காது, வெறும் அவதூறு பேசாது, தனக்குள்ள விஷய ஞானத்தை நமக்குக் கொடுக்க வேண்டும்.
டோலி சாய்வாலாவும் பெருமாள் முருகனும்…
4 hours ago
No comments:
Post a Comment